சேலம் மாவட்டத்தில் மாணவர்கள் பள்ளி இடைநிற்றலைத் தடுக்க மூன்றடுக்குக் குழு

சேலம் மாவட்டத்தில் மாணவர்கள் பள்ளி இடைநிற்றலைத் தடுக்க மூன்றடுக்குக் குழு
X

மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்ற ஆய்வுக் கூட்டம்.

Salem News Today: சேலம் மாவட்டத்தில் 6 முதல் 18 வயதுடைய குழந்தைகளின் இடைநிற்றலைத் தடுக்க மூன்றடுக்குக் குழு அமைத்து கண்காணிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

Salem News Today: சேலம் மாவட்டத்தில் 6 முதல் 18 வயதுடைய பள்ளிச் செல்லா, இடைநின்ற குழந்தைகள் மற்றும் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகளைக் கண்டறிந்து மீள பள்ளியில் சேர்ப்பது மற்றும் இடைநிற்றலைத் தடுக்கும் வகையில் மூன்றடுக்கு குழு அமைப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் கார்மேகம் தலைமையில் மாவட்ட ஆட்சியரகத்தில் நடைபெற்றது.

இக்கூட்டத்தில், மாவட்ட ஆட்சியர் தெரிவித்ததாவது:

பள்ளிக் கல்வித்துறையின் சார்பில் பள்ளிச் செல்லா, இடைநின்ற மாற்றுத்திறனுடைய குழந்தைகள் மற்றும் இடம்பெயர்ந்து வரும் தொழிலாளர்களின் குழந்தைகளை பள்ளியில் சேர்ப்பது மற்றும் இடைநிற்றலுக்கு வாய்ப்புள்ள குழந்தைகளை மீள பள்ளியில் சேர்ப்பது மற்றும் இடைநிற்றலைத் தவிர்ப்பதற்காக மூன்றடுக்கு குழு அமைப்பது குறித்த ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது.

சேலம் மாவட்டத்தில் உள்ள பள்ளித் தலைமையாசிரியர்கள் மற்றும் ஆசிரியர்கள் மாணவ, மாணவிகளிடம் அன்போடும், அரவனைப்போடும் நடந்துகொள்ள வேண்டும். நன்றாக படிக்கும் மாணவ, மாணவியர்கள் மற்றும் மெல்லக் கற்கும் மாணவர்கள் என வகைப் படுத்துதல் கூடாது. மேலும், 8, 9 மற்றும் 10 வகுப்பில் அதிகளவு இடைநிற்றல் உள்ளதாகவும் இவ்வகுப்பு மாணவர்களுக்கு சிறப்பு கவனம் செலுத்தப்பட்டு இடைநிற்றலை தவிர்க்க அறிவுறுத்தப்பட்டது.

மேலும், அதிகளவிலான இடைநிற்றலுக்கு காரணம் மாணவர்களுக்கு கற்றலில் ஆர்வமின்மை மற்றும் கற்றலினால் ஏற்படும் நன்மைகள் குறித்து விழிப்புணர்வு இன்மையால் இடைநிற்றல் ஏற்படுகிறது. எனவே, இதுகுறித்து விழிப்புணர்வு அதிகளவில் ஏற்படுத்தப்படுத்திட வேண்டும்.

இடைநிற்றல் மாணவர்களை மீள பள்ளியில் சேர்ப்பதற்காக பள்ளி அளவிலான குழு, வட்டார அளவிலான குழு மற்றும் மாவட்ட அளவிலான குழு என மூன்றடுக்கு அமைப்பு கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.

இக்குழுவில் மாவட்ட ஆட்சியர், கூடுதல் ஆட்சியர், மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர் என 15 பேர் கொண்ட ஓர் அடுக்கு குழுவும், வட்டார கல்வி அலுவலர், வட்டார வளர்ச்சி அலுவலர் மற்றும் உதவி தொழிலாளர் ஆய்வாளர் என 6 பேர் கொண்ட ஓர் அடுக்கு குழுவும் மற்றும் பள்ளித் தலைமையாசிரியர், ஊராட்சி மன்றத் தலைவர் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் என 9 பேர் கொண்ட ஓர் அடுக்கு என 3 அடுக்கு குழுவாக அமைக்கப்பட்டுள்ளது.

எனவே, இக்குழுவில் உறுப்பினர்களாக சேர்க்கப்பட்ட அனைத்து அலுவலர்களும் ஒருங்கிணைந்து செயல்பட்டு அனைத்து மாணவர்களையும் பள்ளியில் சேர்க்க முழு ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது. இவ்வாறு மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) பாலச்சந்தர், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர் கபீர், திட்ட அலுவலர் (மகளிர் திட்டம்) பெரியசாமி உள்ளிட்ட தொடர்புடைய அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Next Story
குமாரபாளையத்தில் அத்துமீறிய சாயப்பட்டறைகள் மீது அதிரடி நடவடிக்கை - சுற்றுச்சூழல் பாதுகாப்பிற்காக மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகளின் தீவிர கண்காணிப்பு