/* */

பெரம்பலூர்-மானாமதுரை சுங்கச்சாவடியில் திடீரென கட்டணம் வசூலிப்பு

பெரம்பலூர்-மானாமதுரை நெடுஞ்சாலை சுங்கச்சாவடியில் திடீரென கட்டணம் வசூலிக்கப்பட்டதால் வாகன ஓட்டிகள் அதிர்ச்சி.

HIGHLIGHTS

பெரம்பலூர்-மானாமதுரை சுங்கச்சாவடியில் திடீரென கட்டணம் வசூலிப்பு
X

பெரம்பலூர்- மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுங்கக்கட்டணம் வசூலிக்கும் காட்சி.

பெரம்பலூர்- மானாமதுரை தேசிய நெடுஞ்சாலை, 12 ஆண்டுகளுக்கு முன்பு அப்போதைய காங்கிரஸ் கட்சியின் மத்திய அரசால் அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து மாநில நெடுஞ்சாலையாக இருந்த இந்த சாலை சற்று தரம் உயர்த்தப்பட்டு, புதிதாக செப்பனிடப்பட்டது. இருப்பினும் முறையாக சாலைகள் பராமரிக்கப்படாததால் இந்த சாலைகள் தற்பொழுது மாநில நெடுஞ்சாலையை விட மிகவும் மோசமான நிலையிலும் வாகனங்கள் வேகமாக செல்லவும், கனரக வாகனங்கள் பயணிக்கவும் ஏற்புடையதாக இல்லை என்று வாகன ஓட்டிகள் தெரிவிக்கின்றனர். மேலும் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு பேரளி கிராமம் அருகே இந்த சாலையில் சுங்கச்சாவடி அமைக்கப்பட்டது.

அப்போதே அந்த பகுதியைச் சேர்ந்த கிராம பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் இதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். இதனால் சுங்கச் சாவடி அமைக்கப்பட்டு, கட்டணம் வசூலிப்பது தொடங்கப்படாமல் இருந்து வந்தது. இந்நிலையில் இன்று காலையில் இருந்து திடீரென சுங்க கட்டணம் வசூலிக்க ஏற்பாடுகள் செய்யப்பட்டு சுங்க கட்டணம் வசூலிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் லாரிகளுக்கு பாஸ்டேக் முறையில் பயணம் செய்யும் பொழுது ஒரு முறை பயணிப்பதற்கு லாரிகள் உள்ளிட்ட கனரக வாகனங்களுக்கு ரூ.150, அதுவே பணமாக கொடுத்தால் ரூ330ம் வசூலிக்கப்படுகிறது. இலகுரக வாகனங்களுக்கு பாஸ்டேக் முறையில் ரூ.120ம், ரொக்கமாக செலுத்துபவர்களுக்கு ரூ.285 ம் வசூலிக்கப்படுகிறது. இப்படி திடீரென இந்த சுங்கச்சாவடியில் கட்டணம் வசூலிக்கப்படுவதால், வாகன ஓட்டிகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கின்றன.

பெரம்பலூர் நகரில் இருந்து சுமார் 7 கிலோமீட்டர் தொலைவில் உள்ள இந்த சுங்கச்சாவடியை கடந்து சித்தளி, குன்னம், மேலமாத்தூர் போன்ற ஏராளமான கிராமங்களை சேர்ந்த மக்கள் மாவட்ட தலைநகரான பெரம்பலூருக்கு வந்து காரை பயன்படுத்தும் போது, ரூ.285 செலுத்த வேண்டும் என்பது ஏற்கக்கூடிய வகையில் இல்லை என்றும், கிராம சாலை போல உள்ள இந்த சாலைக்கு, அடிப்படை வசதிகள் ஏதுமின்றியும், பெட்ரோல், டீசல் விலை உயர்ந்துள்ள நிலையிலும் சுங்க கட்டணம் வசூலிப்பதும் முறையற்றது என்றும் வாகன ஓட்டிகள் தெரிவித்துள்ளனர். பொதுமக்களும் இந்த சுங்கச்சாவடி கட்டணம் வசூலிப்பதை தடுத்து நிறுத்த வேண்டும். இதற்கு மத்திய மாநில அரசுகள் உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.

Updated On: 24 July 2021 2:45 PM GMT

Related News