கவனம் சிதறாமல் படித்தால் வெற்றி நிச்சயம் நாமக்கல் கலெக்டர் அறிவுரை

நாமக்கல்லில் நடைபெற்ற, நான் முதல்வன் திட்ட, கல்லூரி கனவு நிகழ்ச்சியில், கலெக்டர் உமா பேசினார்.
நாமக்கல்,
நாமக்கல் அரசு மருத்துவக் கல்லூரி ஆஸ்பத்திரியில், நான் முதல்வன் திட்டத்தின் கீழ் கல்லூரி கனவு-2025 நிகழ்ச்சி நடைபெற்றது. கலெக்டர் உமா தலைமை வகித்துப் பேசியதாவது:
நாமக்கல், மோகனூர், எருமப்பட்டி, சேந்தமங்கலம் மற்றும் புதுச்சத்திரம் ஆகிய ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட பள்ளி மாணவ, மாணவியர்களுக்கு இந்நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. பள்ளி கல்வி முடித்த அனைவருக்கும் கல்லூரி செல்ல வேண்டும் என்ற ஆசை இருக்கும். மாணவ, மாணவியரின் கனவுகளை பூர்த்தி செய்யும் வகையில் காலை உணவு திட்டம், புதுமைப் பெண் திட்டம், தமிழ் புதல்வன் திட்டம் மற்றும் 13 வகையான கல்வி உபகரணங்கள் வழங்கும் திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. பணம் ஒருவருடைய உயர்கல்விக்கு எவ்விதத்திலும் தடையாக இருக்க கூடாது என்பதற்காக தமிழ் புதல்வன் மற்றும் புதுமைப்பெண் திட்டம் மூலமாக உதவி தொகை மற்றும் வங்கிகள் மூலமாக கல்வி கடன் உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. கல்வியை சரியான முறையில் கற்றால் கல்வியானது உங்களது வாழ்க்கையை முழுமையாகவும், செம்மையானதாகவும், உங்களை ஒரு முழுமையான மனிதராக மாற்றும்.
நம்மை நல்வழிப்படுத்தக்கூடிய முக்கியமான ஆயுதம் கல்விதான். மாணவ, மாணவிகளாகிய நீங்கள் எதிர்கால வாழ்க்கை திட்டத்தினை இரண்டாக பிரிக்கலாம். நாம் நினைத்ததை படிப்பது ஒன்று, மற்றொன்று கிடைத்ததை படிப்பது. மருத்துவம் மட்டுமின்றி சட்டம், இன்ஜினியரிங், கலை, அறிவியல் போன்ற எந்த துறையை தேர்ந்தெடுத்தாலும் அதில் நேர் வழியில் உங்களுடைய கவனத்தினை சிதற விடாமல் படித்தால் வெற்றி நிச்சயம் என்றார்.
நிகழ்ச்சியில் கல்லூரி கனவு என்னும் உயர்கல்வி வழிக்காட்டுதல் கையேட்டை மாணவ, மாணவியருக்கு ஆட்சியர் வழங்கினார். தொடர்ந்து, மருத்தும், இனிஜினியரிங், சட்டம், வேளாண்மை, கால்நடை மருத்துவம், துணை மருத்துவ படிப்புகள், கலை அறிவியல் உள்ளிட்ட உயர்கல்வி பிரிவுகள் குறித்து சம்மந்தப்பட்ட துறை வல்லுநர்களால் விளக்கி கூறப்பட்டது. மாவட்ட கல்வி அலுவலர் கற்பகம், மகளிர் திட்ட இயக்குநர் செல்வராசு, மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலர் ஷீலா, திறன் பயிற்சி உதவி பார்த்தீபன் உள்ளிட்ட பலர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu