நாமக்கல் நாமகிரி அம்மனுக்கு ரூ. 4 லட்சம் மதிப்பில் தங்கத் தாலி : சென்னை தொழில் அதிபர் காணிக்கை

நாமக்கல் நாமகிரி அம்மனுக்காக, சென்னை தொழில் அதிபர் காணிக்கையாக வழங்கியுள்ள ரூ. 4 லட்சம் மதிப்புள்ள தங்க தாலிக்கொடி.
நாமக்கல்,
சென்னையைச் சேர்ந்த தொழிலதிபர், நாமக்கல் நாமகிரி அம்மனுக்கு நேர்த்திக்கடனாக ரூ. 4 லட்சம் மதிப்புள்ள தங்கத்தாலியை காணிக்கையாக வழங்கினார்.
நாமக்கல் நகரின் மையப்பகுதியில் ஒரே கல்லினால் உருவான சாளக்கிராம மலையின் மேல் பகுதியில், மலை வரதராஜப் பெருமாள் கோயில் உள்ளது. கிழக்குப்பகுதியில் அரங்கநாயகி தாயார் உடனுறை அரங்காநதர் கோயில் குடவறைக்கோயிலாக அமைக்கப்பட்டுள்ளது. மலையின் மேற்குப்புறத்தில் நாமகிரித்தாயார் உடனுறை நரசிம்மர் சாமி கோயில் அமைந்துள்ளது. கி.பி. 7ம் நூற்றாண்டில் அதியேந்திர குணசீல பல்வவரால் இந்த கோயில் கட்டப்பட்டுள்ளதாக கல்வெட்டுக்கள் கூறுகின்றன. இந்த கோயிலுக்கு எதிரில் ஆஞ்சநேயர் சாமி சாந்த சொரூபியாக நின்ற நிலையில், நரசிம்மரின் பாதத்தை வணங்கியவாறு பக்தர்களுக்கு அருள் புரிந்து வருகிறார்.
ஒவ்வொரு ஆண்டும் நரசிம்மர் ஜெயந்தி இந்த கோயிலில் சிறப்பாக கொண்டாடப்படும். தமிழகம் மட்டுமல்லாது, வடமாநிலங்களில் இருந்தும், நரசிம்மர் ஜெயந்தியன்று திரளான பக்தர்கள் நாமக்கல் வந்து நாமகிரியம்மன் மற்றும் நரசிம்மரை வழிபாடு செய்வது வழக்கம். இந்த ஆண்டு நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு சுவாமிக்கு சிறப்பு அபிசேகம் மற்றும் அலங்காரம் நடைபெற்றது. ஏராளமான பக்தர்கள் விழாவில் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
நரசிம்மர் ஜெயந்தியை முன்னிட்டு, சென்னை, திருவல்லிக்கேணியைச் சேர்ந்த தொழில் அதிபர் வெங்கட்நரசிம்மன் என்பவர், நாமகிரித்தாயாருக்காக வெள்ளிக்கொடியில் கோர்த்து செய்யப்பட்ட தங்கத்தாலியை காணிக்கையாக வழங்கினார். தங்கத்தாலியின் எடை 42 கிராம் ஆகும். வெள்ளிக்கொடியின் எடை 85 கிராம் ஆகும். இதன் மொத்த மதிப்பு சுமார் ரூ. 4 லட்சம் ஆகும். அவர் நேர்த்திக்கடனாக நாமகிரித்தாயாருக்காக, அதை கோயில் செயல் அலுவலரும், இந்து சமய அறநிலையத்துறை உதவி கமிஷனருமான இளையராஜாவிடம் வழங்கினார். பின்னர் கோயிலில் நடைபெற்ற சிறப்பு பூஜையில் அவர் குடும்பத்துடன் கலந்துகொண்டார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu