குமாரபாளையத்தில் எம்.ஜி.ஆர் நினைவு நாள் அனுசரிப்பு
குமாரபாளையத்தில் எம்.ஜி.ஆர் திருவுருவப்படம் வைத்து பொதுமக்கள் மலர்மாலை அணிவித்து நினைவு நாளில் அஞ்சலி செலுத்தினர்.
குமாரபாளையத்தில் உள்ள அனைத்து வார்டுகளிலும், எம்.ஜி.ஆர் நினைவு நாள் அனுசரிக்கப்பட்டது.
முன்னாள் முதல்வர் எம்.ஜி.ஆர். நினைவு தினம் நேற்று மாநிலம் முழுதும் அனுசரிக்கப்பட்டது. குமாரபாளையம் நகரில் 33 வார்டுகளில், அந்தந்த பகுதி மக்கள் எம்.ஜி.ஆரின் திருவுருவப்படம் வைத்து, அதற்கு மாலை அணிவித்தும், தீபாராதனை காட்டியும் மரியாதை செலுத்தினர். எம்.ஜி.ஆரின் திரைப்படங்கள் குறித்தும், அரசியலில் அவர் செய்த சாதனைகள் குறித்தும் நினைவுகளை பகிர்ந்து கொண்டனர். அனைத்து பகுதியிலும் ஒலிபெருக்கிகள் வைத்து எம்.ஜி.ஆர். பாடல்களை நாள் முழுவதும் பாட வைத்தனர். கிராமபுற பகுதியில் எம்.ஜி.ஆர். நடித்த திரைப்படங்கள் திரையிடப்பட்டன.
இதுபற்றி பொதுமக்கள் கூறியதாவது,
எம்.ஜி.ஆர். திரையுலகில் வந்த பின்தான் சினிமா மாபெரும் வளர்ச்சி கண்டது. படங்களில் அவர் கூறும் அறிவுரைகள் நமக்கும், நம் பிள்ளைகளுக்கும் ஏற்றதாக இருக்கும். அதிகார துஷ்பிரயோகங்களை எதிர்த்து போராடும் தைரியம், அவரால் நாம் கற்றுக்கொண்டது. உடல்நலம் பேணுதல், உடற்பயிற்சி அவசியம் குறித்து, எம்.ஜி.ஆர். சினிமாவிற்கு வரும் வரும் வரை எந்த நடிகரும் சொன்னதாக தெரியவில்லை. அவர் வந்த பின் இளைஞர்கள் உள்ளிட்ட பெரும்பாலோர் உடற்பயிற்சி செய்ய துவங்கினர். இது நல்ல துவக்கமாக இருந்தது. நல்லவர்களுக்கு தலை வணங்குவேன், அதிகார நபர்களுக்கு அடி பணிய மாட்டேன், என்பது போன்ற வசனங்கள் பெறும் எழுச்சியை ஏற்படுத்தியது. பொதுமக்கள் தாமாக முன்வந்து எம்.ஜி.ஆருக்கு, அவரது படம் வைத்து வழிபடுவது, வேறு எந்த நடிகர் மற்றும் அரசியல் தலைவருக்கும் கிடையாது என்று சொல்லலாம். சினிமாவில் சொன்னதை அரசியலில் செய்தும் காட்டி சாதனை படைத்தார். அந்த அளவில் மக்கள் மனதில் இன்றும் தெய்வமாக குடியிருந்து வருகிறார்.
இவ்வாறு அவர்கள் கூறினர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu