பழங்குடியின மக்கள் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு: ஆட்சியர் நேரில் ஆய்வு
![பழங்குடியின மக்கள் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு: ஆட்சியர் நேரில் ஆய்வு பழங்குடியின மக்கள் குடியிருப்புகளுக்கு மின் இணைப்பு: ஆட்சியர் நேரில் ஆய்வு](https://www.nativenews.in/h-upload/2023/01/31/1651491-img-20230130-wa0008.webp)
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், மொக்கத்தான்பாறை கிராமப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களின் குடியிருப்புகளுக்கு வழங்கப்பட்ட மின் இணைப்புகள் ஆய்வு செய்த ஆட்சியர் அனீஸ்சேகர்
பழங்குடியின மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான குடியிருப்புகளுக்கு மின் இணைப்புகள் வழங்கிட மதுரை மாவட்ட ஆட்சியர் நடவடிக்கை எடுத்து நிறைவேற்றினார்.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், மொக்கத்தான்பாறை கிராமப் பகுதியில் வசிக்கும் பழங்குடியின மக்களின் நீண்டநாள் கோரிக்கையான குடியிருப்புகளுக்கு மின் இணைப்புகள் வழங்கிட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர், செய்தியாளர்களுடன் சுற்றுப் பயணம் மேற்கொண்டு நேரடியாக ஆய்வு மேற்கொண்டார்.
அப்பொழுது ஆட்சியர் கூறியதாவது: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின மக்களின் சமூகப் பொருளாதார மற்றும் கல்வி வளர்ச்சிக்காக தமிழக அரசு பல்வேறு நலத் திட்டங்களை அறிவித்துச் செயல்படுத்தி வருகிறது.அந்த வகையில் ,
மாநில அளவில் ஆதிதிராவிடர்கள் பழங்குடியினர் ஆகியோருடைய சட்டப்பூர்வமான உரிமைகளைப் பாதுகாக்கவும் அவர்களுடைய முக்கியமான பிரச்னைகளுக்குத் தீர்வு காணவும் தமிழ்நாடு ஆதிதிராவிடர் - பழங்குடியினர் நல ஆணையம் என்கிற புதிய அமைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதேபோல, பழங்குடியின குழந்தைகளின் கல்வி இடைநிற்றலை தவிர்ப்பதற்க்கும் தனிக்கவனம் செலுத்தப்பட்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
மதுரை மாவட்டம், உசிலம்பட்டி வட்டம், தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சியில், உள்ள குறிஞ்சி நகர் பகுதியில் 53 பழங்குடியின குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இதில்,88 ஆண்கள் 94 பெண்கள் என 182 பெரியவர்களும்,32 சிறுவர்கள் 37 சிறுமிகள் என 69 குழந்தைகளும் அடங்குவர். இப்பகுதி மக்களுக்கு வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் நோக்கில்,மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
குறிப்பாக,62 நபர்களுக்கு வீட்டுமனைப் பட்டா ஆணைகள்22 நபர்களுக்கு மாதாந்திர உதவித்தொகை ரூபாய் 1000 பெறுவதற்கான ஆணை53 நபர்களுக்கு குடும்ப அட்டைகள், 48 நபர்களுக்கு வன உரிமை அடையாள அட்டை, சாதிச்சான்றிதழ்,பிறப்பு சான்றிதழ், ஆதார் அடையாள அட்டை,வாக்காளர் அடையாள அட்டை உள்ளிட்ட அடிப்படை சான்றுகள் மற்றும் அடையாள அட்டைகள் வழங்கப்பட்டுள்ளன.
அதேபோல,அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்திடும் நோக்கில் ஆடு, மாடு போன்ற கால்நடை வளர்ப்புக்கு கடனுதவிகள் வழங்கப்பட்டுள்ளன. மேலும்,இப்பகுதியில் ,மூலிகை தோட்டம் அமைப்பதற்கு திட்டமிடப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
இந்நிலையில், தொட்டப்பநாயக்கனூர் ஊராட்சியில் உள்ள குறிஞ்சி நகர் பகுதியில் வசித்து வரும் பழங்குடியின மக்கள் தங்களது குடியிருப்புகளுக்கு மின் இணைப்புக்கான வைப்புத் தொகை செலுத்துவதற்கு இயலாத ஏழ்மையான சூழ்நிலையில் தாங்கள் வசிப்பதாகவும் தங்களது குடியிருப்புகளுக்கு மின் இணைப்புகள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டுமெனவும் நீண்ட நாட்களாக கோரிக்கை வைத்து வந்தனர்.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சித் தலைவர் மரு.எஸ்.அனீஷ் சேகர் உத்தரவின்பேரில், அரசின் சிறப்பு திட்ட நிதியிலிருந்து குறிஞ்சி நகர் பகுதியிலுள்ள 27 பழங்குடியினர் குடியிருப்புகளுக்கு மின் இணைப்புக்கான வைப்புத் தொகை செலுத்தப் பட்டு தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம் மூலம் உடனடியாக மின் இணைப்புகள் வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து, மாவட்ட ஆட்சித்தலைவர், குறிஞ்சி நகர் பகுதிக்கு நேரடியாக சென்று பழங்குடியின மக்கள் குடியிருப்புகளில் புதிதாக மின் இணைப்பு வழங்கிட மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் குறித்து நேரடியாக ஆய்வு மேற்கொண்டார். அப்போது, தங்களது குடியிருப்புகளுக்கு வழங்கிட உரிய நடவடிக்கை மேற்கொண்ட மாவட்ட ஆட்சித்தலைவருக்கு அப்பகுதி மக்கள் நன்றி தெரிவித்தனர்.இந்த நிகழ்வுகளின் போது,உசிலம்பட்டி வருவாய் கோட்டாட்சியர் எம்.சங்கரலிங்கம், ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் க.கோட்டூர் சாமி உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu