காமராஜர் பல்கலை. யில் தேசிய அளவிலான பயிற்சி பட்டறை
முதல் நாளில் சிறப்பு விருந்தினராக சன் செய்திகள் ஊடகத்தின் தலைமை ஆசிரியர் எம். குணசேகரன் பயிற்சி பட்டறையை தொடக்கி வைத்தார்
மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தின் இதழியல் துறை சார்பில் பிப்ரவரி மாதம் 22 ,23, 24 ஆகிய மூன்று நாட்கள் தேசிய அளவிலான பயிற்சி பட்டறையை ஒருங்கிணைத்து நடத்தி வருகிறது.
நிகழ்வுக்கு தலைமை வகித்த, பல்கலைக்கழக துணைவேந்தர் ஜெ. குமார் பேசுகையில், செய்தியின் உள்கருத்துகள் எப்படி வலுவாக இருக்க வேண்டும் என்பது பற்றி குறிப்பிட்டார். இதழியல் துறை தலைவரும் பேராசிரியையுமான ஜெனிபா செல்வின் வரவேற்புரையில், இந்த 3 நாள்கள் நடைபெறும் தேசிய அளவிலான பயிற்சி பட்டறையின் சாரம்சத்தை குறிப்பிட்டார்.
பயிற்சி பட்டறையின் முதல் நாளில் சிறப்பு விருந்தினராக சன் செய்திகள் ஊடகத்தின் தலைமை ஆசிரியர் எம். குணசேகரன் கலந்து கொண்டு பேசுகையில், ஊடகத்துறை எத்தனை சுவாரஸ்யங்கள் நிறைந்தது என்பது பற்றியும், தொழில்நுட்ப வளர்ச்சி தற்போதைய மாணவர்களுக்கு ஊடகத்துறையில் ஏற்படுத்தி கொடுத்திருக்கும் வாய்ப்புகள் பற்றியும், செய்தி தயாரிப்புக்கு தேவையான திறன் மற்றும் கருத்துண்மையின் முக்கியத்துவம் பற்றியும், பத்திரிகையாளர்களுக்கு இருக்க வேண்டிய அடிப்படைப் பண்புகள் பற்றியும் குறிப்பிட்டார்.
பின்னர், மதுரை காமராசர் பல்கலைக்கழக இதழியல் துறை மாணவர்களின் ஆவணப்படங்களை குணசேகரன் வெளியிட்டார். அந்த ஆவணப்படங்களில் ஒன்றான 'வேர்களின் இசை' மாணவர்களுக்கு திரையிடப்பட்டது. அதைத் தொடர்ந்து செய்தி தயாரிக்கும் திறன் சார்ந்து மாணவர்களுடன் கலந்துரையாடினார்.
பயிற்சி பட்டறையின் முதல் பகுதியின் இறுதியில் மதுரை காமராசர் பல்கலைக்கழக இதழியல் துறை பேராசிரியர். பாலசுப்பிரமணியன் நன்றி கூறினார். இந்த பயிற்சி பட்டறையில் மதுரை காமராசர் பல்கலைக்கழக மாணவர்கள், பாத்திமா கல்லூரி, அமெரிக்கன் கல்லூரி, திண்டுக்கல் அனுக்ரஹா கல்லூரி மற்றும் பல கல்லூரிகளிலிருந்து மாணவர்கள், பேராசிரியர்கள் என 200-க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu