மதுரை அருகே ஜல்லிக்கட்டு காளைகள் திருட்டு : காளை உரிமையாளர்கள் அதிர்ச்சி

மதுரை அருகே ஜல்லிக்கட்டு காளைகள் திருட்டு : காளை உரிமையாளர்கள் அதிர்ச்சி
X

பைல் படம்

தொடர் திருட்டு சம்பவங்களால் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள் தங்களது காளைகளை இரவு பகலாகக் கண்காணிக்க தொடங்கி உள்ளனர்

மதுரை மற்றும் பாலமேடு பகுதிகளில்.ஜல்லிக்கட்டு காளைகள் காணாமல் போவதால் காளை உரிமையாளர்கள் கலக்கமடைந்துள்ளனர்.

தமிழகத்தில் பொங்கல் பண்டிகையையொட்டி பாரம்பரிய ஜல்லிக்கட்டு விழா, நடக்க இன்னும் குறைந்த நாட்களே உள்ளன. மதுரை அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் அனல் பறக்கும் ஜல்லிக்கட்டு ஆரம்பமாக இருக்கிறது. அங்கு வாடிவாசலில் தங்களது காளைகளை களம் இறக்கும் நடவடிக்கைகளில் காளை உரிமையாளர்கள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

இந்நிலையில், மதுரை மாவட்டத்தில் கடந்த இரண்டு வாரத்தில் 8 ஜல்லிக்கட்டு காளைகள் திருடு போன சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. .குறிப்பாக, பாலமேடு அருகே முடுவார் பட்டி கோடாங்கிபட்டி மற்றும் மதுரை அருகே உள்ள தத்தனேரி உள்ளிட்ட பகுதிகளில் ஜல்லிக்கட்டு காளைகள் திடீரென காணாமல் போவதால் காளை உரிமையாளர்கள் பெரும் கலக்கத்தில் உள்ளனர்.

அதுவும், ஜல்லிக்கட்டு நடைபெறும்.பாலமேடு போலீஸ் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் கடந்த நாலாம் தேதி அதிகாலையில் மூன்று காளைகள் திருடு போயுள்ளன.இது குறித்து, போலீசார் வழக்குப் பதிவு செய்து, கண்காணிப்பு கேமரா பதிவுகளின் மூலம் காளைகளை திருடியவர்களை தேடி வருகின்றனர். இதைப்போல கடந்த எட்டாம் தேதி தத்தநேரியில் பொன்னம்பல ராஜன் துறை என்பவருக்கு சொந்தமான ஜல்லிக்கட்டு காளை திருடுபட்டுள்ளது.கடந்த ஒரு வாரத்தில் மட்டும் சுமார் எட்டுக்கும் மேற்பட்ட ஜல்லிக்கட்டு காளைகள் களவாடப்பட்டும்ளது காளைகளை வளர்ப்பவர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இதுகுறித்து கடந்த 4-ந் தேதி திருட்டு போன, பாலமேடு மஞ்சமலை சுவாமி கோவிலுக்கு சொந்தமான காளையை பராமரித்து வந்த முடுவார்பட்டி அழகப்பன் கூறியதாவது: மஞ்சமலை சுவாமியை வழிபடும் பங்காளிகளாக சேர்ந்து கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு காளைக்கன்று ஒன்றை வாங்கினோம். அந்த கன்றை கண்ணும் கருத்துமாக, எங்கள் வீட்டு பிள்ளையைப் போல எனது பொறுப்பில் வளர்த்து வந்தேன்.

சில வருடங்களாக அலங்காநல்லூர், பாலமேடு ஜல்லிக்கட்டுகளில் பங்கேற்று காளையர்களிடம் சிக்காமல் தங்கம், வெள்ளி நாணயங்கள் உள்பட எக்கச்சக்க பரிசுகளை பெற்று, மஞ்சமலை சுவாமிக்கும், எங்கள் பங்காளிகளுக்கும் அந்த காளை பெருமை சேர்த்தது. செல்லப்பிள்ளையாக காளை வளர்ந்தது. 4-ந்தேதி எங்கள் வீட்டின் முன்பு காளையை கட்டிப்போட்டு இருந்தோம். அதிகாலையில் மர்மநபர்கள் காளையின் கயிற்றை அறுத்து, திருடிச் சென்றுள்ளனர்.

எங்களைத்தவிர மற்றவர்கள் காளையின் அருகில் கூட செல்ல முடியாது. ஆனால் மர்மநபர்கள், மயக்க மருந்து செலுத்தியோ, அல்லது வேறு வகையிலோ காளையின் நினைவை கலைத்து, வாகனத்தில் ஏற்றிச் சென்று இருக்க வேண்டும். இதுபற்றி புகார் அளித்து உள்ளோம். எங்கள் காளை மீண்டும் எங்களிடம் வரும் என்ற நம்பிக்கையில் இருக்கிறோம் என்றார். இந்த தொடர் திருட்டு சம்பவங்களால் ஜல்லிக்கட்டு காளை வளர்ப்பவர்கள் கண்ணும் கருத்துமாய் காளைகளை இரவு பகலாகக் கண்காணிக்க தொடங்கி உள்ளனர்.


Tags

Next Story