இலவச தையல் இயந்திரம் பெற இ-சேவை மையங்கள் மூலம் விண்ணப்பிக்க அழைப்பு!

இலவச தையல் இயந்திரம் பெற இ-சேவை மையங்கள்   மூலம் விண்ணப்பிக்க அழைப்பு!

மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி.(கோப்பு படம்)

சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் 2024-25 ஆம் ஆண்டிற்காக வழங்கப்படவுள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி வெளியிட்டு செய்திக்குறிப்பு

சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத் துறை மூலம் செயல்படுத்தப்படும் சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் இயந்திரம் வழங்கும் திட்டத்தின் கீழ் விதவைகள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள், ஆதரவற்ற பெண்கள் மற்றும் பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்கள் ஆகியோருக்கு இலவச தையல் இயந்திரங்கள் வழங்கும் பொருட்டு 2024-25 ஆம் நிதியாண்டிற்கு தகுதியுடைய பெண்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகிறது.

மேற்படி திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்க வயது வரம்பு விண்ணப்ப நாளன்று 20 முதல் 40 வயதுக்குள் இருத்தல் வேண்டும். குடும்ப ஆண்டு வருமானம் ரூ.72000-க்குள் இருத்தல் வேண்டும், அரசு பதிவு பெற்ற தையல் பயிற்சி நிறுவனத்தில் குறைந்தது 6 மாத காலம் தையல் பயிற்சி பெற்றதற்கான சான்றிதழ் வைத்திருத்தல் வேண்டும்.

ஆதரவற்ற விதவைகள், கணவரால் கைவிடப்பட்ட பெண்கள் எனில் அதற்கென வட்டாட்சியர் மூலம் வழங்கப்படும் உரிய சான்று இணைக்கப்பட வேண்டும், மேலும் கல்வி சான்று, மாற்று சான்றிதழ், குடும்ப அட்டை, சாதிச் சான்று, பாஸ்போர்ட் அளவு புகைப்படம், வருமான சான்று (ரூ.72000) மற்றும் ஆதார் அட்டை ஆகியவற்றுடன் அருகில் உள்ள அரசு இ-சேவை மையத்தின் மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பிக்கும் பெண்கள் இதற்கு முன்னர் மேற்படி திட்டத்தின் கீழ் பயனடைந்தவராக இருத்தல் கூடாது. மேற்குறிப்பிட்டுள்ள தகுதியுடைய பெண்கள் இ-சேவை மையத்தில் விண்ணப்பித்த பின் அதன் நகல் ஒன்றினை சம்மந்தப்பட்ட ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சமூக நல விரிவாக்க அலுவலரிடம் ஒப்படைக்குமாறு மாவட்ட ஆட்சியர் கலைச்செல்வி தெரிவித்துள்ளார்கள்.

Next Story