நடிகர் சங்க கலை நிகழ்ச்சி..! வெறும் 2 கோடிக்கா இத்தனை ஆர்ப்பாட்டங்கள்...?

நடிகர் சங்க கலை நிகழ்ச்சி..! வெறும் 2 கோடிக்கா இத்தனை ஆர்ப்பாட்டங்கள்...?
X
நடிகர் சங்க கலை நிகழ்ச்சி..! வெறும் 2 கோடிக்கா இத்தனை ஆர்ப்பாட்டங்கள்...?

நடிகர் சங்க கடன் 2024 | Nadigar Sangam Debt 2024

தென்னிந்திய நடிகர் சங்கம் என்று பெயர் இருந்தாலும் தமிழ் நடிகர்களே பெரும்பாலும் இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருக்கின்றனர். அதாவது இது தமிழ்நாடு நடிகர்கள் சங்கம்தான். ஆனால் ஒரு காலத்தில் அனைத்து மொழி நடிகர்களும் இந்த சங்கத்தில் உறுப்பினர்களாக இருந்ததால் சென்னை தென்னிந்திய சினிமாவின் தலைநகராக இருந்ததால் அந்த பெயரை அப்படியே வைத்திருந்தனர்.

இந்நிலையில், நடிகர் சங்க கலை விழா நிகழ்ச்சிகள் குறித்தும் அதில் ரஜினி, கமல் உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் கலந்துகொள்வார்கள் என்றும் தகவல்கள் பரவி வருகிறது. சரி அப்படி எத்தனை கோடிதான் கடன் வைத்திருக்கிறார்கள். இதனை அடைக்க 30 ஆண்டுகளா? ஏற்கனவே விஜயகாந்த் கடனை அடைத்துவிட்டதாக சொன்னார்களே? என பல கேள்விகள் எழுந்துகொண்டே இருக்கின்றன. இதற்கெல்லாம் பதில் தெரிந்துகொள்ள நீங்களும் ஆவலாக இருப்பீர்கள் தானே?

எவ்வளவு கடன்? | Nadigar Sangam Debt 2024

நடிகர்கள் சங்கத்துக்கு எப்படி கடன் வந்தது அது எவ்வளவு என்பதை தெரிந்துகொள்வதற்கு முன்னதாக, விஜயகாந்த் அடைத்த கடன் எவ்வளவு அது எப்படி வந்தது என்பதையும் தெரிந்துகொள்ளவேண்டும்.

விஜயகாந்த் அந்த கடனை தன்னுடைய சாதுர்ய முயற்சிகளால் அடைத்தார். அவர் தலைமையிலான நடிகர் சங்கத்துக்கு கிட்டத்தட்ட 4.5 கோடி ரூபாய் கடன் இருந்தது. நடிகர் சங்க தலைவராக அவர் பொறுப்பேற்றதிலிருந்து, பல கலை நிகழ்ச்சிகளை நடத்தி மக்களிடம் வசூலித்து அந்த கடன்களை அடைத்தார்.

1977ம் ஆண்டு நடிகர் சங்கத்துக்கு என்று ஒரு பெரிய கட்டிடம் கட்டப்பட்டது. அதில் பிரிவியூ தியேட்டர், ஜிம், அலுவலகங்கள் என பல வசதிகள் கட்டப்பட்டிருந்தன. அப்போது ஏற்பட்ட கடன்தான் இந்த 4.5 கோடி ரூபாய்.

எப்படி அடைத்தார்?

மலேசியா, சிங்கப்பூர் மக்கள் தமிழ் சினிமாவுக்கு மிகவும் ஆர்வமாக இருப்பார்கள். ஆனால் தமிழ் நடிகர்களை அவ்வளவு எளிதில் அவர்களால் பார்த்துவிட முடியாது. அதனால் கலைநிகழ்ச்சிகள் நடந்தால் மக்கள் கூட்டம் கூட்டமாக குவிவார்கள். அப்படி நடத்தப்பட்ட கலைநிகழ்ச்சிகள் மூலம் 4.5 கோடிகள் கடனையும் அடைத்து, எஞ்சிய பணத்தை வங்கியில் டெபாசிட் செய்து ஏழை நடிகர்களுக்கு உதவி செய்யும் வகையிலும் விஜயகாந்த் முன்னெடுத்துச் சென்றார்.

மீண்டும் கடன் வந்தது எப்படி?

சுவாமி சங்கரதாஸ் சுவாமி கலையரங்கம்தான் பழசாகிவிட்டதே... இன்றைய தேவைக்கு ஏற்ற மாதிரி ஒரு பிரமாண்ட மல்டிப்ளெக்ஸ் கட்ட முயன்றனர் சரத்குமார் அணியினர். அதற்கு கைகொடுக்க வந்தது சத்யம் சினிமாஸ். எல்லோரிடமும் ஒப்புதல் பெற்றே இந்த முயற்சியை மேற்கொண்டார் சரத்குமார்.

ஆனால் கட்டடம் இடிக்கும் வரை அமைதி காத்தவர்கள், இடிக்கப்பட்ட பிறகு தனி அணியாக விஷால் தலைமையில் திரண்டு, சத்யம் சினிமாஸுக்கு இடத்தை லீசுக்கு தரவே கூடாது என்றனர். ஆனால் அதற்குள், பழைய கட்டடத்தை இடிக்க ஆன செலவு, புது கட்டடம் கட்டும் பூர்வாங்க வேலைகளுக்கான செலவு, முத்திரைத் தாள் வரி என சத்யம்காரர்கள் கோடிகளை வாரியிறைத்திருந்தனர்.

விஷால் அணி ஜெயித்து வந்த பிறகு, நிலத்தை மீண்டும் சத்யம் நிறுவனத்திடம் கேட்க, அவர்களும் பெருந்தன்மையுடன் ஒப்புக் கொண்டார்கள். ஆனால் செலவு செய்த பணத்தை யார் தருவார்கள்? அதற்காக வாங்கப்பட்ட கடன்தான் இந்த ரூ 2 கோடி!

2 கோடிக்கா ஆர்ப்பாட்டம்? | Nadigar Sangam Debt 2024

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய் என இருவரும் 200 கோடிக்கும் அதிகமாக சம்பளம் வாங்குகிறார்கள். வருடத்துக்கு ஒரு படம் என்றால் கூட, மாதத்துக்கு 15 கோடிக்கும் அதிகமாக சம்பாதிக்கிறார்கள். இவர்களுக்கு அடுத்தபடியாக கமல்ஹாசன், அஜித்குமார் 100 கோடிக்கும் அதிகமாக சம்பாதிக்கிறார்கள். இவர்களை அடுத்து விக்ரம், சூர்யா, சிவகார்த்திகேயன், விஜய்சேதுபதி, தனுஷ், சிம்பு என பல முன்னணி நடிகர்கள் இருக்கிறார்கள். தமிழ் நடிகர் சங்கத்தில் இருக்கும் பெரிய நடிகர்கள் ஆளுக்கு 50 லட்சம் எடுத்து கொடுத்தால்கூட கடனை அடைத்தது போக 10 கோடிக்கும் அதிகமாக பணத்தை வங்கில் டெபாசிட் செய்து அதன் மூலம் ஏழை நடிகர்களுக்கு உதவ முடியும்.

சரி சொந்த பணத்தைக்கூட கொடுக்க வேண்டாம். தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் பேசி, அனைத்து தயாரிப்பாளர்களையும் ஒன்றிணைத்து அவர்களது முதலீட்டில் ஒரு மல்டி ஸ்டாரர் திரைப்படம் எடுக்கலாம். தமிழில் சுயம்வரம், மலையாளத்தில் 20-20 என படம் தயாரித்து வெளியிட்டால் அந்த படத்தின் வசூலை வைத்தே கட்டிடத்தையும் எழுப்பி, கடனையும் அடைத்துவிடலாம்.

இதையெல்லாம் முயற்சிக்காமல், மீண்டும் கலைநிகழ்ச்சிகள் என மக்கள் பணத்தையே வசூலிக்க முயற்சிப்பது ஏன் என பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

Tags

Next Story
மாணவனின் துயர சம்பவம்: கிணற்றில் குளிக்கும் போது உயிரிழப்பு - மரக்கட்டை விழுந்து விபத்து