சிறுதானிய இட்லியில் இத்தனை வருமானமா? இளைஞர்களே உஷார்

Small Grains | Food Grains
X

சிறுதானிய இட்லி  தயாரிக்கும் பாத்திரத்துடன் இளைஞர் சுதிர்.

Small Grains -சிறுதானிய இட்லியில் இத்தனை வருமானம் இருப்பதால் இளைஞர்கள் உஷார் அடைய வேண்டிய காலம் வந்து விட்டது.

Small Grains -வேளாண் பொருளி்யல் என்ற தனித்துவமான படிப்பில் முதுகலை பட்டம் பெற்றும் சிறுதானியங்களை விளைவிக்கும் விவசாயிகளுக்காக தள்ளுவண்டியில் இட்லி வியாபாரம் செய்து சேவை + பிசினஸ் பார்மூலாவில் தொழில் புரிந்து, தினமும் ரூ 3000 வருமானம் ஈட்டுகிறார் இளம் தொழில்முனைவர் சுதீர்.

ஒதுக்கி ஓரங்கட்டிய ஆரோக்கியமான உணவுப் பழக்கங்கள் மெல்ல திரும்பி கொண்டிருக்கின்றன. ஆர்கானிக் தயாரிப்புகளின் மீது கவனம் திரும்பியுள்ளது. மக்கள் சிறுதானியங்களை விரும்பி உட்கொள்ளத் தொடங்கியுள்ளனர். இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் சிறுதானிய மறுமலர்ச்சி பெருமளவில் வளர்ந்து வரும் நிலையில், அதற்கான நுகர்வோர்களை உருவாக்குவதில் சுதீர் போன்ற பல தொழில்முனைவோர்களின் பங்கு அலாதியானது. அதிலும், சுதீர் சிறுதானியங்களின் பலன் மற்றும் அதன் வீழ்ச்சிக்கான காரணத்தை புரிந்து கொண்டு, சிறுதானியங்களைப் பிரபலப்படுத்துவதுடன், காலை உணவான இட்லியில் ருசியான வகையை உருவாக்கியுள்ளார். ஆம், வேளாண் பொருளியலில் போன்றதொரு தனித்துவமான படிப்பில் முதுகலைப் பட்டம் பெற்றுள்ள சுதீர், தள்ளுவண்டியில் இட்லி வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார் எனில், அதற்கான முழு காரணம் சிறுதானிய விவசாயத்தை மேற்கொள்ளும் விவசாயிகளின் நலன் கருதியே! அவரது குறிக்கோளை எட்டியதற்கான சான்றாய் நாள்தோறும் 600 பிளேட் இட்லிகள் விற்று தீர்த்து, நாளொன்றுக்கு 3,000 ரூபாய் வருமானமாய் ஈட்டுகிறார். ஸ்விக்கியிலும் குவிகின்றன ஆர்டர்கள்.

ஆந்திர மாநிலம் குண்டூரில் அமைந்துள்ளது சுதீரின் 'வாசனபோலி' எனும் திணை இட்லி மற்றும் தோசைக்களுக்கான கையேந்திபவன் உள்ளது. காலை வேளையில் பிசியஸ்ட் கையேந்திகளில் ஒன்றாகயிருக்கும் வாசனபோலி கல்லூரி மாணவர்கள், ஜிம் பாய்ஸ் மற்றும் மருத்துவ மாணவர்களின் ஹாட்ஸ்பாட்டாகும். நாகார்ஜுனா பல்கலைக்கழகத்தில் வேளாண்பொருளியலில் முதுகலைப் பட்டம் பெற்றவர் சுதீர். கல்லூரி படிப்பினை முடித்தவுடன் இயற்கை விவசாயத்தை தொடர்வதையே திட்டமாக கொண்டிருந்துள்ளார்.

இது குறித்து சுதீர் கூறும்போது இயற்கை விவசாயத்தைக் கற்று கொள்வதற்காக, ஆந்திராவின் கிராமங்களை நோக்கி பயணம் செய்தேன். பல ஊர்களில் விவசாயிகளுடனே தங்கி இயற்கை விவசாயத்தை பற்றி தெரிந்து கொள்ள ஆரம்பித்தேன். அப்போ தான், திணை விவசாயம் பற்றி தெரிந்து கொண்டேன். சூழலுக்கு தீங்கு விளைவிக்காத அதன் சாகுபடி முறைகளும், அதன் நன்மைகளையும் அறிந்த பிறகு, நானும் சொந்தமாக விவசாயம் செய்ய முடிவு செய்தேன்," எனும் சுதீர், இரண்டு ஆண்டுகள் பைக் பயணங்களில் வழியாக எக்கச்சக்க விவசாயிகளை சந்தித்தேன். ஊருக்கு திரும்பி விவசாயம் செய்வதற்கான வேலைகளில் இறங்கினேன். அப்போது தான், சிறுதானியங்களின் உற்பத்திக்கு ஏற்ற நுகர்வோரில்லை என்பதை புரிந்து கொண்டேன். விவசாயிகளுடன் உரையாடியதில் திணைகளின் வீழ்ச்சிக்கான காரணங்களை புரிந்து கொண்டேன். சிறுதானியங்களுக்கான மார்க்கெட்டை ஏற்படுத்தி, அதற்கான நகர்ப்புற நுகர்வோர்களை உருவாக்க எண்ணினேன்.

."சிறுதானியங்களின் தேவையே மக்களிடத்திலில்லை. மார்க்கெட்டில் அதற்கான டிமாண்டே இல்லாத சமயத்தில் நானும் அவற்றை விளைவித்து விற்பனைக்காக காத்திருக்கும் விவசாயியாக இருக்க விரும்பவில்லை. சிறுதானியங்களை கொண்டு தயாரிக்கப்படும் அன்றாட உணவுகள் பற்றி மக்களுக்கு தெரியவில்லை என்பதை உணர்ந்து, சிறுதானிய இட்லி விற்பனை செய்ய முடிவெடுத்தேன். தென்னந்தியாவின் பிரதான உணவு இட்லி என்பதால், இட்லி செய்ய முடிவெடுத்தேன்," என்றார் சுதீர். இட்லி தானே என எண்ணினாலும், சரியான விகிதத்திலான இட்லி மாவை கண்டறிய அவருக்கு முழுதாக 2 ஆண்டுகளாகியுள்ளது. ஏனெனில், சுதீர் யாருடைய தடத்திலும் நடக்க விரும்பவில்லை. மாவு அரைப்பது குறித்த யூ டியூப் வீடியோக்களை பார்க்க தவிர்த்துவிட்டார். ஆந்திர பல்கலைக்கழகம் மற்றும் தினை ஆராய்ச்சி மையத்தின் பேராசிரியர்களிடமிருந்து ஊட்டச்சத்து குறித்த தகவல்களை திரட்டி முறையான ஆராய்ச்சியில், பல கட்ட பரிசோதனைகளுக்கு பிறகு பெர்பெக்ட் இட்லிமாவை அரைத்துள்ளார். ஒரு தனித்துவமான சுவையை உடைய பதார்த்தத்தை மக்களிடம் சேர்த்துவிட வேண்டும் என்பதே இத்தனை முயற்சிகளுக்குமான காரணமாகும். சோளம், கம்பு, வரகு, தினை, சாமை என எட்டு விதமான சிறுதானியங்களிலிருந்து பிரத்யேக மாவு அரைத்து சிறுதானிய இட்லி விற்பனையைத் துவக்கியுள்ளார்.

2018ம் ஆண்டு ரோட்டோரத்தில் ரூ.50,000 முதலீட்டில் 'வாசனபோலி' என்ற பெயரில் கையேந்தி பவனை தொடங்கினார். அவரது எண்ணம் நிறைவேறியதுடன், அதிகளவிலான இளம் கஸ்டமர்களை பெற்றார். அதனால், தான் வாசனபோலிக்கு ஸ்விக்கியிலுமிருந்து ஆர்டர்கள் கிடைக்கின்றது. மாவு தயாரிப்பதில் மட்டுமின்றி இட்லியை அவிப்பதில் தனித்துவத்தை கையாள்கிறார் சுதீர். 'மந்தாரை இலை'- யினை கூம்பு வடிவில் சுற்றி, டூத்பிக் கொண்டு இணைத்து கொண்டு, அதில் மாவு ஊற்றி கூம்பு வடிவில் இட்லிகளை தயாரிக்கிறார். காலங்காலமாய் லுக்கில் அப்டேட்டாகமாலே இருக்கும் இட்லிக்கு இவர் கொடுத்திருக்கும் புது வடிவமே ருசிக்க துாண்டுகிறது. நாளொன்றுக்கு வாசனபோலியில் 500 தட்டு இட்லிகள் விற்பனையாகின்றனர். அதுவே, வார இறுதி அல்லது விடுமுறை நாட்கள் எனில் தட்டுகளின் எண்ணிக்கை 600 ஆக எகிறிவிடும். 3 இட்லிகள் கொண்ட ஒரு பிளேட்டின் விலை ரூ.50. கூம்பு இட்லிகளுக்கான டிமாண்ட் அதிகரித்த போதும் சுதீர், இட்லியின் விலையை உயர்த்தவில்லை. சிறுதானியங்கள் பற்றி அதிகம் தெரியாத வாடிக்கையாளர்கள் இதை முயற்சி செய்யும்படி மலிவு விலையில் வைத்திருக்க விரும்புவதாக அவர் தெரிவித்தார்.

வாடிக்கையாளரிடம் குறைந்த கட்டணம் வசூலிப்பதால், அவர் குறைந்த விலையில் பொருள்களை வாங்குவதில்லை. ஒவ்வொரு மாதமும், ஸ்ரீகாகுளம், விஜயநகர், விசாகப்பட்டினம் ஆகிய பகுதிகளில் உள்ள பழங்குடி விவசாயிகளிடமிருந்து சுமார் 700 கிலோ சிறுதானியங்களை கொள்முதல் செய்கிறார். ஒரு கிலோ சிறுதானியங்களை சந்தையின் மதிப்பான ரூ.30க்கு வாங்காமல், ரூ.70 கொடுத்து வாங்குகிறார். இட்லியும் குறைவான கட்டணத்தில் விற்பனை செய்தாலும், 25 சதவீத லாபம் கிடைப்பதாக மகிழ்ச்சியாக தெரிவித்தார்.

"இந்தியாவில் சிறுதானியங்கள் பரவலாக அறியப்படவில்லை. இருப்பினும், அவை இரும்பு, மெக்னீசியம், பொட்டாசியம் மற்றும் தாமிரம் போன்ற தாதுப் பண்புகளைக் கொண்டுள்ளன. ஃபோலேட், பி 6, சி, ஈ மற்றும் கே போன்ற அத்தியாவசிய வைட்டமின்களையும் கொண்டிருக்கின்றன.

அரிசியை விட ஊட்டச்சத்து மிகுந்தவை. கிராமப்புறங்களில் சிறுதானிய உணவுப் பழக்கமே இல்லாமல் போய்விட்டது. நகர்ப்புறங்களில், இப்போது தான் அவற்றின் நன்மையை அறியத் துவங்கியுள்ளனர். "இப்போது, 2 இடங்களில் கையேந்தி பவன் முறையில் கடையை திறந்துள்ளேன். விரைவில், வாசனபோலிக்கென்று நிரந்தர இடத்தை வாடகைக்கு எடுக்க வேண்டும். அதிகப்படியான விவசாயிகளுக்கு உதவும் வகையில் பெரியளவில் செய்யவேண்டும்," என்று கூறி முடித்தார் சுதீர்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags

Next Story
ஈரோடு இடைத்தேர்தலில் இன்று வெளியாகிறது  வேட்பாளர் இறுதிபட்டியல்