அந்தியூர்: எண்ணமங்கலத்தில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு, கண்டறிதல் முகாம்
எண்ணமங்கலம் அருகே உள்ள ஆலயங்கரடு பகுதியில் நடந்த காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு முகாமில் எடுக்கப்பட்ட படம்.
அந்தியூர் அருகே உள்ள எண்ணமங்கலத்தில் காசநோய் இல்லா ஈரோடு விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் இன்று (ஜன.30) நடைபெற்றது.
ஈரோடு மாவட்டம் அந்தியூர் வட்டாரம் எண்ணமங்கலம் அரசு ஆரம்ப சுகாதார நிலைய பகுதிக்கு உட்பட்ட எண்ணமங்கலம் மற்றும் ஆலயங்கரடு பகுதியில் காசநோய் இல்லா ஈரோடு இயக்க விழிப்புணர்வு மற்றும் கண்டறிதல் முகாம் நடைபெற்றது.
இந்த முகாமில் காசநோய் பரவும் விதம், நுரையீரல் காசநோயின் அறிகுறிகள் அதன் பாதிப்புகள், காசநோய்க்கான பரிசோதனை மேற்கொள்ளப்பட வேண்டியவர்கள், நடமாடும் எக்ஸ்ரே ஊர்தியின் பயன்கள், காசநோய் இல்லா ஈரோடு இயக்க நோக்கம் மற்றும் பயன்கள் குறித்து பொதுமக்களுக்கு எடுத்துரைக்கப்பட்டது.
தொடர்ந்து, காசநோய் சிகிச்சை காலத்தில் ஊட்டச்சத்து உணவின் அவசியம், காசநோய் ஒழிப்பில் பொதுமக்களின் பங்கு, டெங்கு காய்ச்சல் பரவும் விதம், கொசு உற்பத்தி தடுப்பு வழிமுறைகள், உண்ணி காய்ச்சல், எலிக்காய்ச்சல் பரவும் விதம் அதன் தடுப்பு வழிமுறைகள், சுற்றுப்புற சுகாதார பாதுகாப்பு வழிமுறைகள் குறித்து விளக்கமாக சுகாதார நலக் கல்வி வழங்கப்பட்டது.
முகாமில், ஈரோடு மாவட்ட துணை இயக்குனர் காசநோய் மருத்துவப் பணிகள் அலுவலக மாவட்ட நலக்கல்வியாளர் சிவகுமார், மாவட்ட கொள்ளை நோய் தடுப்பு அலுவலர் மரு.சம்பத்குமார், மருத்துவ அலுவலர் மரு.சதீஷ்குமார், காசநோய் முதுநிலை சிகிச்சை மேற்பார்வையாளர் சண்முகம், காசநோய் சுகாதாரப் பார்வையாளர் சண்முகவடிவு, ஆய்வக நுட்புநர் தேவி அபிராமி, செவிலியர்கள் மற்றும் பொதுமக்கள் 200 பேர்கள் கலந்து கொண்டனர்.
மேலும், இம்முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு நெஞ்சக நுண்கதிர் பட பரிசோதனை மற்றும் சளி பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. நிகழ்வின் இறுதியாக அனைவராலும் காசநோய் ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu