ஈரோட்டில் துண்டுப்பிரசுரம் வழங்கியதால் பரபரப்பு: 50 பேர் மீது வழக்குப் பதிவு
ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வாக்குப் பதிவு பிப்ரவரி 5-ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதற்கான பிரசாரம் திங்கள்கிழமை (பிப்ரவரி3) மாலையுடன் நிறைவடைய உள்ளது. இந்நிலையில், திமுக, நாம் தமிழர் கட்சி மற்றும் சுயேச்சை வேட்பாளர்கள் ஞாயிற்றுக்கிழமை காலை தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனர்.
த.பெ.தி.க.வினருக்கும் நா.த.க-வினருக்கும் இடையே மோதல்
பன்னீர்செல்வம் பூங்கா அருகே உள்ள சிஎஸ்ஐ பிரப் தேவாலயம் முன்பு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி தனது ஆதரவாளர்களுடன் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். அப்போது, அதே பகுதியில் தந்தை பெரியார் திராவிடர் கழகத்தினரும் (தபெதிக) திமுக வேட்பாளர் சந்திரகுமாரை ஆதரித்து துண்டு பிரசுரம் வழங்கினர்.
அப்போது தபெதிகவினர் துண்டுப் பிரசுரங்களை நாம் தமிழர் கட்சியினரிடம் வழங்கியதால் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதியில் இருந்து தபெதிகவினரை காவல் துறையினர் அப்புறப்படுத்தினர். இருப்பினும் சாலையின் மறுபக்கத்தில் நின்றபடி தபெதிகவினர் தொடர்ந்து துண்டுப் பிரசுரங்களை விநியோகம் செய்தனர்.
துண்டுப்பிரசுரங்கள் கிழிப்பு
இதனையறிந்த நாம் தமிழர் கட்சியினர், தபெதிகவினரை தாக்கி அவர்கள் வைத்திருந்த துண்டுப் பிரசுரங்களை கிழித்தனர். இதையடுத்து அங்கிருந்த காவல் துறையினர் தபெதிகவினரை மீட்டு அப்புறப்படுத்தினர்.
தபெதிக செயலாளர் அவதூறு பேச்சு?
அப்போது, சம்பவ இடத்துக்கு வந்த தபெதிக மாவட்டச் செயலாளர் குமரகுருபரன், நாம் தமிழர் கட்சியினரை அவதூறாக பேசினாராம். தொடர்ந்து அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் 50-க்கும் மேற்பட்ட காவல் துறையினர் குவிக்கப்பட்டனர்.
50 பேர் மீது வழக்குப் பதிவு
ஈரோடு பிரப் சாலையில் அமைந்துள்ள சிஎஸ்ஐ பிரப் தேவாலயம் முன்பு நாம் தமிழர் கட்சி வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் 50 பேர் பிரசாரம் செய்ய தேர்தல் ஆணையத்தில் உரிய அனுமதிப் பெறவில்லை எனக் கூறப்படுகிறது.
நாம் தமிழர் கட்சியினர் தேவாலயம் முன்பு திரண்டபோது அங்கு வந்த தேர்தல் பறக்கும்படை அதிகாரி தினகரன் அவர்களை கலைந்து செல்லுமாறு அறிவுறுத்தினார். அதனை பொருட்படுத்தாமல் தேவாலயம் உள்ளே வேட்பாளர் சீதாலட்சுமியுடன் சிலர் சென்று துண்டுப் பிரசுரங்களை வழங்கினர்.
இந்நிலையில் உரிய அனுமதி பெறாமல் கலகம் ஏற்படுத்த வேண்டும் என்ற உள்நோக்கத்தில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டதாக, ஈரோடு நகர காவல் நிலையத்தில் பறக்கும்படை அதிகாரி தினகரன் அளித்த புகாரின்பேரில், நாம் தமிழர் கட்சியின் வேட்பாளர் சீதாலட்சுமி மற்றும் 50 பேர் மீது மூன்று பிரிவுகளில் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu