சத்தியில் அசைவ உணவு விருந்துடன் களைகட்டிய கருவண்ணராயர் பொம்மதேவி கோவில் திருவிழா

சத்தியில் அசைவ உணவு விருந்துடன் களைகட்டிய கருவண்ணராயர் பொம்மதேவி கோவில் திருவிழா
X

 சிறப்பு அலங்காரத்தில் அருள் பாலிக்கும் ஆதி கருவண்ணராயர் பொம்ம தேவி 

சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச் சரகம் தெங்குமராஹாடா வனப்பகுதியில் ஆதி கருவண்ணராயர் பொம்ம தேவி கோவில் அமைந்துள்ளது. இக்கோயில் திருவிழா கடந்த 5-ம் தேதி தொடங்கியது.

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் புலிகள் காப்பகம் பவானிசாகர் வனச் சரகம் தெங்குமராஹாடா வனப்பகுதியில் ஆதி கருவண்ணராயர் பொம்ம தேவி கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருவிழா கடந்த 5-ம் தேதி தொடங்கியது. அடர்ந்த வனப்பகுதியில் உள்ள கோவிலுக்கு விசேஷ தினங்களில் மட்டுமே பக்தர்கள் செல்ல வனத்துறையினர் அனுமதி அளிக்கின்றனர்.

அதன்படி, தற்பொழுது மாசி மகம் பொங்கல் திருவிழாவிற்கு ஈரோடு, கோவை, திருப்பூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து, 60 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் ஆம்னி பஸ், வேன், கார் உள்ளிட்ட வாகனங்களில் வனப்பகுதி கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கப்பட்டனர்.

இந்தநிலையில், 6-ம் தேதி காலை ஆதி கருவண்ணராயர் பொம்மதேவி தெய்வங்களுக்கு பக்தர்கள் பொங்கல் வைத்து 500க்கும் மேற்பட்ட ஆடுகளை பலியிட்டு சிறப்பு பூஜைகள் செய்தனர். இதை தொடர்ந்து, கோவில் வளாகத்தில் பக்தர்கள் அசைவ உணவு சமைத்து விருந்து உண்டு மகிழ்ந்தனர். விழா நிறைவு பெற்றதால் நேற்று (செவ்வாய்க்கிழமை) மாலை 6 மணியுடன் கோவிலுக்கு வந்த அனைத்து வாகனங்களையும் பக்தர்களையும் வனப்பகுதியில் இருந்து வனத்துறையினர் வெளியே அனுப்பினர்.

மேலும் சத்தியமங்கலம் புலிகள் காப்பகத்தின் துணை இயக்குனர் கிருபா சங்கர் உத்தரவின் பேரில் பவானிசாகர் ரேஞ்சர் சிவக்குமார் தலைமையில் வனத்துறையினர் கோவில் வளாகத்தில் விலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் பிளாஸ்டிக் கழிவுகள், பாட்டில்கள் உள்ளனவா என்று பார்வையிட்டார்கள்.

அடர்ந்த வனப் பகுதியில் திருவிழா நடைபெறுவதால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக பவானிசாகர் வனத்துறையினரும் காவல்துறையினரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். விழாவையொட்டி, கோவில் நிர்வாகம் சார்பில் பக்தர்களுக்கு இலவச மருத்துவ முகாம் அமைக்கப்பட்டிருந்தது.

Tags

Next Story
Weight Loss Tips In Tamil