பவானிசாகா் அருகே பச்சிளம் குழந்தை உயிரிழந்ததற்கு தடுப்பூசியே காரணம் என பெற்றோா் புகாா்..!
ஈரோடு : ஈரோடு மாவட்டம், பவானிசாகா் அருகே உள்ள இக்கரைதத்தப்பள்ளி கிராமத்தைச் சோ்ந்தவா்கள் கெளதம் - அசின் தம்பதி. இவா்களுக்கு, சத்தியமங்கலம் அரசு மருத்துவமனையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு பெண் குழந்தை பிறந்தது.
இந்நிலையில், வெள்ளியம்பாளையம்புதூா் அங்கன்வாடி மையத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற தடுப்பூசி முகாமில் குழந்தைக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.
குழந்தை அழுதுகொண்டிருந்ததாகவும், பின்னா் மயக்கமடைந்ததாகவும் தகவல்
தடுப்பூசி செலுத்திய பின்னர், வீட்டுக்கு அழைத்துச் சென்ற குழந்தை அழுதுகொண்டிருந்ததாகவும், பின்னா் மயக்கமடைந்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து தடுப்பூசி முகாமிற்கு அசின் தகவல் அளித்தாா்.
தனியாா் மருத்துவமனையில் குழந்தை உயிரிழப்பு உறுதி
இதைத் தொடா்ந்து அவரது வீட்டுக்கு வந்த செவிலியா்கள் குழந்தையை மீட்டு தனியாா் மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனா். அங்கு, குழந்தையைப் பரிசோதித்த மருத்துவா்கள் குழந்தை ஏற்கெனவே உயிரிழந்துவிட்டதாகத் தெரிவித்தனா்.
தடுப்பூசி காரணமாக உயிரிழப்பு என்ற சந்தேகத்தில் பெற்றோா் புகாா்
தடுப்பூசி செலுத்தியதால்தான் குழந்தை இறந்தது என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக கௌதம் மற்றும் அசின் பவானிசாகா் காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா். இதைத் தொடா்ந்து பவானிசாகா் போலீஸாா் குழந்தையின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக பெருந்துறை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனா்.
மருத்துவ அலுவலா் விளக்கம்
இதுகுறித்து புன்செய் புளியம்பட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் சசிகலா கூறியதாவது:
வெள்ளியம்பாளையம்புதூா் அங்கன்வாடி மையத்தில் நடைபெற்ற தடுப்பூசி முகாமில் 6 குழந்தைகளுக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டது. மற்ற 5 குழந்தைகள் நலமுடன் உள்ளனா். அந்தக் குழந்தைகளின் உடல்நிலை தொடா்ந்து கண்காணிக்கப்பட்டு வருகிறது. இதனால், செலுத்தப்பட்ட தடுப்பூசி மருந்தில் குறைபாடு இருக்க வாய்ப்பில்லை. உடற்கூறு ஆய்வுக்குப் பின்னரே குழந்தையின் உயிரிழப்புக்கான காரணம் தெரியவரும் என்றாா்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu