சிப்காட் நல்லா ஓடையில் ஆன்லைன் மீட்டர் அமைக்கும் பணி மும்முரம்..!
பெருந்துறை ஒன்றியத்தில் அமைந்துள்ள சிப்காட்டில் 250க்கும் மேற்பட்ட ஜவுளி உற்பத்தி உள்ளிட்ட பல்வேறு தொழில் நிறுவனங்கள் இயங்கி வருகின்றன. இந்த நிறுவனங்களின் கழிவு நீர் நல்லா ஓடை வழியாக ஆறு கி.மீ., பயணித்து சென்னிமலை யூனியன், பாலத்தொழுவு குளத்தில் கலப்பதாக தொடர்ந்து புகார் வந்ததால், சிப்காட்டில் இருந்து நல்லா ஓடை வழியாக வெளியேறும் தண்ணீரை குட்டப்பாளையம் பாலம் அருகே தண்ணீர் டேங்கர் லாரிகள் மூலம் சேகரித்து அவற்றை மறுசுழற்சி செய்து, சிப்காட்டில் உள்ள ஆலைகளே பயன்படுத்தி கொள்ளும் வகையில் திட்டம் தயாரிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்தது.
கிராம மக்களின் புகார்
பகல் நேரத்தில் மட்டுமே, டேங்கர் லாரிகள் மூலமாக தண்ணீர் எடுத்து செல்வதாகவும், இரவு நேரங்களில் கழிவு நீரை சுத்திகரிக்காமல் வெளியேறுவதாக கூறி, சிப்காட்டையொட்டி வசிக்கும் கிராம மக்கள் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தும் நடவடிக்கை எடுக்கவில்லை என கூறுகின்றனர்.
மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகளின் விளக்கம்
இது குறித்து, பெருந்துறை சிப்காட் மாசு கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் கூறியதாவது: சிப்காட்டில் இருந்து வெளியேறும் கழிவு நீர், டேங்கர் லாரிகள் மூலம் சேகரித்து அவற்றை மறுசுழற்சி செய்து, பயன்படுத்தி கொள்ள ஆலைகளுக்கு அனுப்புவது தொடர்ந்து கொண்டு தான் இருக்கிறது.
கழிவுநீர் வெளியேறுவது குறித்த ஆய்வு
கழிவுநீர் வெளியேறுவதாக சொன்ன, மறுநாளே நல்லா ஓடையில் இருந்து பாலத்தொழுவு குளம் வரை தண்ணீர் ஓடும் பாதையில் ஆய்வு செய்து பார்த்தோம். நல்லா ஓடையில் இருந்து ஒன்றரை கி.மீ., துாரத்தில் உள்ள ரயில்வே நுழைவு பாலம் வரை கூட கழிவுநீர் ஓடவில்லை. எனவே, நல்லா ஓடையின் கழிவு நீர் பாலத்தொழுவு குளத்துக்கு செல்லவில்லை. இது தொடர்பான வீடியோ பதிவுகளை ஜி.பி.எஸ்., கருவி மூலம் பதிவு செய்து உயர் அதிகாரிகளுக்கு அனுப்பி வைத்துள்ளோம்.
நல்லா ஓடையில் கழிவு நீர் வெளியேறுவது ஓரளவு தடுக்கப்பட்டுள்ளது
நல்லா ஓடையில் கழிவு நீர் வெளியேறுவது ஓரளவு தடுக்கப்பட்டுள்ளது. நல்லா ஓடை வழியாக வெளியேறும் கழிவு நீரின் உப்பு தன்மையை கண்டறிய, குட்டப்பாளையம் பாலம் அருகே வடக்கு, தெற்கு திசைகளில் இரண்டு ஆன்லைன் மீட்டர் பொருத்தும் பணி நடந்து வருகிறது.
சிப்காட் சுற்றியுள்ள கிராம மக்களின் கோரிக்கையை நிறைவேற்ற, அமைச்சர் முத்துசாமி உத்தரவின்படி, தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கை எடுத்து வருகிறோம் என மாசுக்கட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் தெரிவித்தனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu