ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 67.97 சதவீதம் வாக்குப்பதிவு: நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை
![ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 67.97 சதவீதம் வாக்குப்பதிவு: நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல்: 67.97 சதவீதம் வாக்குப்பதிவு: நாளை மறுநாள் வாக்கு எண்ணிக்கை](https://www.nativenews.in/h-upload/2025/02/06/1976417-picsart25-02-0609-22-45-076.webp)
மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறை வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அந்த அறைக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்ட போது எடுத்த படம்.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு நேற்று (பிப்ரவரி 5ம் தேதி) நடைபெற்ற இடைத்தேர்தலில் 67.97 சதவீத வாக்குகள் பதிவாகின. இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை மறுநாள் (பிப்ரவரி 8ம் தேதி) எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்.
2023ல் நடந்த இடைத்தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் 74.79 சதவீத வாக்குகள் பதிவான நிலையில், இந்த இடைத்தேர்தலிலும் கிட்டத்தட்ட 6.98 சதவீதம் வாக்குகள் குறைவாக பதிவாகியுள்ளன.
ஈரோடு கிழக்கு தொகுதிக்கு எம்எல்ஏவாக இருந்த ஈவிகேஎஸ் இளங்கோவன் மரணம் அடைந்ததால், 2வது முறையாக ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதிக்கு நேற்று (பிப்ரவரி 5ம் தேதி) இடைத்தேர்தல் நடந்தது. திமுகவின் வி.சி.சந்திரகுமார், நாம் தமிழர் கட்சியின் சீதாலட்சுமி ஆகியோருடன் மொத்தம் 46 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர்.
திமுக வேட்பாளருக்கு ஆதரவாக அமைச்சர் முத்துசாமி தலைமையில் இந்தியா கூட்டணி கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் வீதி வீதியாக நடந்து சென்று பிரசாரம் செய்தனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஈரோட்டில் தங்கி இருந்து 10 நாட்கள் பிரசாரம் செய்தார்.
இதனைத் தொடர்ந்து, நேற்று 237 வாக்குச்சாவடிகளிலும் காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்கியது. 46 வேட்பாளர்கள் போட்டியிட்டதால், ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 3 எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்தன. காலை நேரத்தில் வாக்குச்சாவடிகளுக்கு குறைந்த அளவிலான வாக்காளர்களே வந்தனர்.
காலையில் நடைபயிற்சி சென்றவர்கள் அப்படியே வாக்குச்சாவடிகளுக்கு வந்து ஜனநா யக கடமையாற்றிவிட்டு சென்றனர். ஒரு சில வாக்குச்சாவடிகளில் மட்டுமே வாக்காளர் கள் காத்திருந்து ஓட்டுப்போட்டனர். பெரும்பாலான வாக்குச்சாவடிகளில் எந்த தாமதமும் இன்றி வந்த உடன் தங்கள் வாக்கை பதிவு செய்து சென்றனர். இதனால் மந்தமான நிலை காணப்பட்டது.
காலை 9 மணி நிலவரப்படி மொத்தம் 10.95 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. பகல் 11 மணி நிலவரப்படி 26.03 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. இது வழக்க மான தேர்தல்களை விட குறைவான வாக்குப்பதிவாக இருந்தது. ஆனால், 11 மணிக்கு மேல் வாக்காளர்கள் வெயிலையும் பொருட்படுத்தாமல் வாக்குச்சாவடிகளுக்கு வர தொடங்கினார்கள்.
இதனால் மதியம் 1 மணி நிலவரப்படி வாக்குப்பதிவு அதிகரித்து 42.41 சதவீதமானது. மாலை 3 மணிக்கு 53.63 சதவீத வாக்குகளும், மாலை 5 மணிக்கு 64.02 சதவீத வாக்குகளும் பதிவாகி இருந்தன. மாலை 6 மணிக்கு வாக்குப்பதிவு நிறைவுபெற்றது. 6 மணிக்குள் வாக்குச்சாவடி மைய வளாகத்துக்குள் வந்த வாக்காளர்களுக்கு மட்டும் ஒட்டு போடுவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது.
மேலும், சரியாக 6 மணிக்கு அனைத்து வாக்குச்சாவடிகளின் நுழைவு கதவு களும் மூடப்பட்டன. யாருக்கும் டோக்கன் வழங்கப்படவில்லை. இறுதியில் 67.97 சதவீத வாக்குகள் பதிவானதாக தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
வாக்குப்பதிவு முழுமை அடைந்த பிறகு மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள். கட்டுப் பாட்டு கருவிகள், வி.வி.பேட் கருவிகள் ஆகியன பாதுகாப்பாக எடுத்து வைக்கப்பட்டன. அதன்பிறகு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களுக்கு சீல் வைக்கப்பட்டு, துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாக்கு எண்ணும் மையமான சித்தோடு அரசினர் பொறியியல் கல்லூரிக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
பாதுகாப்பு அறையில் மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வரிசையாக அடுக்கி வைக்கப்பட்டன. பின்னர் வேட்பாளர்களின் முகவர்கள் முன்னிலையில் அந்த அறைக்கு சீல் வைக்கும் நடவடிக்கையில் தேர்தல் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu