உலர் கழிப்பிடங்களை ஏன் ஒழிக்க முடியவில்லை?: சர்வேயில் அதிர்ச்சி தகவல்

உலர் கழிப்பிடங்களை ஏன் ஒழிக்க முடியவில்லை?: சர்வேயில் அதிர்ச்சி தகவல்
X
பலஆயிரம் கோடி ரூபாயினை செலவிட்டும் இன்னும் சிறிய நகர் மற்றும் கிராமப்பகுதிகளில் உலர் கழிப்பிடங்களை ஒழிக்க முடியவில்லை என சர்வேயில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன

கடந்த 15 ஆண்டுகளுக்கும் மேலாக பல ஆயிரம் கோடி ரூபாயினை செலவிட்டும் இன்னும் சிறிய நகர் மற்றும் கிராமப்பகுதிகளில் உலர் கழிப்பிடங்களை ஏன் ஒழிக்க முடியவில்லை என மத்திய, மாநில அரசுகள் நடத்திய சர்வேயில் அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி உள்ளன.

துாய்மை இந்தியா உள்ளிட்ட பல்வேறு திட்டங்களின் கீழ் மாநகராட்சிகள், நகராட்சிகள், பேரூராட்சிகள், கிராம ஊராட்சிகளில் பொதுக்கழிப்பறை கட்டுவது, தனிநபர் கழிப்பறைகள் கட்டுவது என கடந்த 15 ஆண்டுகளில் மட்டும் மத்திய, மாநில அரசுகள் பல ஆயிரம் கோடி ரூபாய்களை செலவிட்டு உள்ளனர். இன்னமும் பெரும்பாலான இடங்களில் தெரு ஓரங்கள், பொது இடங்கள், வெட்ட வெளிகளை கழிப்பறையாக பயன்படுத்துபவர்களின் எண்ணிக்கை குறையவில்லை.

இந்த பிரச்னையை எப்படி தீர்ப்பது என குழம்பிய அரசு அதிகாரிகள் வெட்ட வெளிகளை கழிப்பறையாக பயன்படுத்துபவர்களிடம் புதுசர்வே எடுத்தனர். சர்வேயில் கேட்கப்பட்ட கேள்வி, ‛வீட்டிற்குள் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகளையோ, அல்லது பொதுவில் கட்டப்பட்டுள்ள கழிப்பறைகளையோ பயன்படுத்தாமல், திறந்த வெளியை தேடிச் செல்வது ஏன்?’ என்ற ஒரு கேள்வி மட்டும் எழுப்பப்பட்டது.

வெட்ட வெளியினை மிக குறைந்த எண்ணிக்கையில் பெண்கள் பயன்படுத்துகின்றனர். இவர்கள் அதிகாலை நேரத்திலோ அல்லது இரவு நேரத்திலோ மட்டுமே வெட்ட வெளிகளை கழிப்பறையாக பயன்படுத்துகின்றனர். வீட்டில் கழிப்பறை வைத்திருப்பவர்கள் வெளியில் செல்வதில்லை. வீட்டில் கழிப்பறை இல்லாதவர்கள் பொதுக்கழிப்பறைகளை பயன்படுத்துகின்றனர்.

ஆண்கள் தான் அதிகளவில் வெட்ட வெளிகளை பயன்படுத்துகின்றனர். இவர்கள் கூறும் காரணங்கள் மிகவும் விநோதமாக உள்ளது. ‛முதலாவது காரணம், மது அருந்தும் பழக்கம் உள்ளவர்கள். இவர்கள் வீட்டில் கழிப்பறைகளை பயன்படுத்தினால் மிகவும் அதிகளவு துர்நாற்றம் வீசும்’. இதனால் வீடுகளில் பிரச்னை உருவாகிறது. முதல் நாள் மதுஅருந்தியது குடும்ப உறுப்பினர்களுக்கு தெரிந்து பிரச்னை ஆகி விடுகிறது.

இரண்டாவது காரணம், ‛சிகரெட் பிடித்துக் கொண்டே கழிப்பறையினை பயன்படுத்துவது. வீட்டிற்குள் இப்படி செய்ய முடியாது. வெட்ட வெளிதான் இதற்கு சரியான சாய்ஸ்’.

மூன்றாவது தரப்பினர், ‛நண்பர்கள் சிலருடன் பேசிக்கொண்டே வெட்ட வெளியில் அமர்ந்தால் தான் இயற்கை உபாதையை பிரச்னையின்றி கழிக்க முடிகிறது. வீட்டிற்குள் கழிக்க முடியவில்லை’ என்கின்றனர்.

வெகுசிலர் மட்டுமே வீட்டில் கழிப்பறை கட்ட இடம் இல்லை. பொதுக்கழிப்பறை மிகவும் அசுத்தமாக உள்ளது. இதனால் வெட்டவெளியை தேடுகிறோம் எனக்கூறி உள்ளனர். இந்த விநோத பிரச்னைக்கு வழிதெரியாமல் அதிகாரிகள் ‛குழப்பத்தில்’ உள்ளனர்.

Tags

Next Story
அரசு புறம்போக்கு நிலத்தில் சாலை அமைப்பது..! ஆலை நிர்வாகத்துக்கு விவசாயிகளின் கடும் எதிர்ப்பு..!