வரி செலுத்தாதவர்கள் மீது கடும் நடவடிக்கை: கோவை மாநகராட்சி ஆணையர்

கோவை மாநகராட்சி விக்டோரியா கூட்டரங்கில் கவுன்சிலர்கள் கூட்டம் இன்று நடந்தது
கோவை மாநகராட்சி விக்டோரியா கூட்டரங்கில் கவுன்சிலர்கள் கூட்டம் இன்று நடந்தது. கூட்டத்துக்கு மாநகராட்சி மேயர் கல்பனா ஆனந்தகுமார் தலைமை தாங்கினார். மாநகராட்சி ஆணையர்பிரதாப், துணை மேயர் வெற்றிசெல்வன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் மீது விவாதம் நடைபெற்றது. இதில் கோவை மாநகராட்சியின் ஐந்து மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு பகுதிகளில் தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டம் சேமிப்பு நிதியில் சேதமடைந்த சாலைகளை சீரமைக்க ரூ.19.84 கோடி மதிப்பீட்டில் பணிகளை மேற்கொள்ள நகராட்சி நிர்வாக இயக்குநர் ஒப்புதல் அளித்துள்ளார்.
அதன்படி ஒப்பந்த புள்ளிகள் கோரப்பட்டு சாலை பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த தீர்மானத்திற்கு அனுமதி வழங்கப்பட்டது.
கோவை மாநகராட்சி மேற்கு மண்டலம் கவுண்டம்பாளையம் பழைய குப்பை கிடங்கு 36 ஏக்கர் பரப்பளவில் உள்ளது. இதில் சூரிய ஒளி மின்சக்தி உற்பத்தி செய்யும் மையம், 2 நுண்ணுயிர் உரம் தயாரிக்கும் மையம் மற்றும் மின்வாரிய அலுவலகம் ஆகியவை இயங்கி வருகிறது.
இந்த வளாகத்தை சுற்றி மதில் சுவர் அமைக்கப்பட்டுள்ளது. இதே வளாகத்தில் மேல்நிலைத் தொட்டி சுமார் 300 மீட்டருக்கு மதில் சுவர் இல்லாமல் உள்ளது. அதனால் இப்பகுதியில் சமூக விரோதிகள் நடமாட்டம் உள்ளது.
எனவே மதில் சுவர் அமைக்க ரூ. 36 லட்சத்திற்கு நிர்வாக அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. மேலும் 24 தீர்மானங்கள் மீது விவாதம் மேற்கொள்ளப்பட்டு, அனுமதிக்கப்பட்டது.
கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் பிரதாப் பேசுகையில், கோவை மாநகராட்சியில் வரி வசூல் பணிகள் தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இந்த மாத இறுதிக்குள் ரூ. 250 கோடி வரி வசூல் இலக்கை எட்டிவிடுவோம்.
ஒரே மாதத்தில் ரூ.30 கோடி வரி வசூல் செய்யப்பட்டுள்ளது. குறிப்பாக கடந்த இரண்டுநாட்களில் ரூ.4.50 கோடி வரி வசூல் செய்யப்பட்டது. வரி செலுத்தாமல் காலம் தாழ்த்தி வருபவர்கள் மீது சட்டப்படி கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.
தமிழ்நாடு நகர்புற உட்கட்டமைப்பு வளர்ச்சி திட்டம் சார்பில் ரூ.50 கோடி நிதி விரைவில் மாநகராட்சிக்கு வர உள்ளது. சாலை பணிகள் இந்த நிதியில் மேற்கொள்ளப்படும் என்று கூறினார்
கூட்டத்தில் துணை ஆணையர் சர்மிளா, மண்டல தலைவர்கள் வார்டு உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
-
Menu