/* */

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணி குறித்து அரியலூர் கலெக்டர் ஆலோசனை

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அரியலூர் மாவட்ட கலெக்டர் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

HIGHLIGHTS

வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணி குறித்து அரியலூர் கலெக்டர் ஆலோசனை
X

அரியலூர் மாவட்ட கலெக்டர் ரமணசரஸ்வதி வடகிழக்கு பருவமழை முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார்.

அரியலூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகக் கூட்டரங்கில், மாவட்ட பேரிடர் மேலாண்மை பிரிவு சார்பில் வடகிழக்கு பருவமழையின்போது மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை பணிகள் குறித்து அனைத்து துறை அலுவலர்களுடன் ஆய்வுக் கூட்டம் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தலைமையில் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்ததாவது:-

அரியலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழையின்போது, வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளாக 29 பதற்றமான பகுதிகள் கண்டறியப்பட்டுள்ளது. இப்பகுதிகளை கண்காணித்திடவும், மாவட்ட அளவிலான அனைத்து கிராமப்பகுதிகளையும் ஆய்வு செய்திடவும் துணை ஆட்சியர் தலைமையில் பல்துறையினைச் சார்ந்த 12 அலுவலர்களைக் கொண்டு மண்டல கண்காணிப்புக்குழு 5 குழுக்களாக அமைக்கப்பட்டுள்ளது.

பேரிடர் பாதிப்புக்குள்ளாகும் பகுதிகளில் நிவாரண மையங்கள் அமைத்து, அம்மையங்களில் தங்க வைக்கும் பொதுமக்களுக்கு அனைத்து வசதிகளும் தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். பேரிடர் காலங்களில் பாதிக்கப்படும் நபர்களுக்கு உடனடியாக நிவாரண உதவிகள் வழங்கிட அனைத்துத்துறை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டு, பொதுவிநியோகத்திட்டத்தில் உள்ள உணவுப்பொருட்கள் இப்பருவமழை காலங்களில் 3 மாதங்கள் இருப்பு வைத்திருக்க வேண்டும். மேலும், மழை காலங்களில் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுத்து போதுமான அளவில் அத்தியாவசிய மருந்துகள் தயார் நிலையில் இருப்பு வைத்திருக்க வேண்டும். குறிப்பாக, பாம்பு மற்றும் விஷபூச்சி கடிக்கான மருந்துகள் தயார் நிலையில் அரசு மருத்துவமனைகளில் இருந்திட வேண்டும்.

மேலும், மீட்பு உபகரணங்களான ஜே.சி.பி, ஜெனரேட்டர், மரம் அறுக்கும் கருவி, டார்ச் லைட், போன்ற உபகரணங்கள் திட்டமிட்டு முன்கூட்டியே தயார் நிலையில் வைத்திருக்க வேண்டும். இம்மாவட்டத்திலுள்ள நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு ஏரி மற்றும் மதகுகள், குளம் மற்றும் வாய்க்கால் தூர்வாரப்பட வேண்டும். நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சிகளில் கழிவுநீர் வாய்க்கால்கள் அடைப்பு ஏற்படாதவாறு முன்னெச்சரிக்கை பணிகள் மேற்கொள்ளவும், மழைநீர் வடிகால் வசதியும் ஏற்படுத்திடவும் உரிய அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நெடுஞ்சாலைத்துறை, பொதுப்பணித்துறை, ஊரக வளர்ச்சித்துறை ஆகிய துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள சாலைகள் மற்றும் சிறுபாலங்கள், பாலங்கள் தொடர் கண்காணிப்பில் இருந்திட வேண்டும். பேரிடர் மீட்பு பணிக்காக வரும் தேசிய பேரிடர் மீட்புக்குழு, தமிழ்நாடு பேரிடர் மீட்புக்குழு மற்றும் மத்தியக்குழு ஆகிய குழுக்களுக்கு தேவையான வசதிகளை செய்திட வேண்டும்.

பருவமழை காலங்களில் கால்நடைகளுக்கு தேவையான மருந்துகள் கால்நடை மருந்தகங்களில் தயார் நிலையில் வைத்திட வேண்டும் மற்றும் நோய் தடுப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். குறிப்பாக, தமிழ்நாடு மின்சார வாரியம் அரியலூர் மாவட்டத்திற்கு உட்பட்ட அனைத்து பகுதிகளிலும் உடனடியாக ஆய்வு மேற்கொண்டு தாழ்வான பகுதிகளில் செல்லும் மின் ஒயர்களை மாற்றியும், பழுதடைந்துள்ள மின்கம்பங்கள், மின்மாற்றிகளை கண்டறிந்து உடனடியாக சரிசெய்திட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், தாழ்வாக செல்லும் மின்கம்பிகளை உடன் சரிசெய்திடவும் முழுமையாக சாலை பணி முடியாதவைகளை உடன் சரிசெய்திடவும், சென்ற ஆண்டில் வடகிழக்கு பருவமழையின்போது வரப்பெற்ற புகார்கள் தொடர்பாக தக்க நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதை உறுதி செய்திடவும் மீட்பு உபகரணங்கள் போதிய எண்ணிக்கையில் இருப்பு வைத்துக்கொள்ள நடவடிக்கை எடுத்திடவும் தன்னார்வ அமைப்புகளை பயன்படுத்தி மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்கொள்ள நடவடிக்கை எடுத்திடவும், நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் மழை தேங்கிய நீரில் நனையாதவாறு மாற்று இடங்களுக்கு கொண்டு செல்லவும், பொதுவிநியோக திட்ட கடைகளில் தரமான பொருட்கள் வழங்கப்படுவதை உறுதி செய்திடவும் விரிசல் விழுந்த கட்டடங்களை கண்டறிந்து பயன்படுத்தப்படாமல் இருக்கவும், வெள்ளக் காலங்களில் பாதிக்கப்படும் பொதுமக்களை வெளியேற்றிட உரிய திட்டத்தை தயார் செய்யவும், பள்ளிக்கூடத்திலுள்ள பள்ளி அறைகளின் மாற்று சாவியினை கிராம நிர்வாக அலுவலர் வசம் வைத்திருக்கவும் மற்றும் பேரிடர் காலங்களை எதிர்கொள்ள அனைத்து அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள் தலைமையிடத்தில் இருக்க வேண்டும் எனவும் சம்மந்தப்பட்ட அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

மேலும், வடகிழக்கு பருவமழையின் போது பேரிடர் தொடர்பாக பொதுமக்கள் தொடர்பு கொள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் 24 மணிநேரமும் செயல்படக்கூடிய பேரிடர் கால கட்டுப்பாட்டு மையம் அமைக்கப்பட்டுள்ளது. இம்மையத்தினை தொடர்பு கொள்ள கட்டணமில்லா தொலைபேசி எண்.1077 மற்றும் 04329 228709 என்ற தொலைபேசி எண்ணிற்கு தகவல் தெரிவித்திட வேண்டும் என மாவட்ட கலெக்டர் பெ.ரமண சரஸ்வதி தெரிவித்தார்.

இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் கலைவாணி, மாவட்ட ஊரக வளர்ச்சித்துறைத் திட்ட இயக்குநர் சு.சுந்தர்ராஜன், வாட்டாட்சியர் (பேரிடர் மேலாண்மை) சந்திரசேகரன் மற்றும் அனைத்துத்துறை அரசு அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

Updated On: 26 Sep 2022 1:52 PM GMT

Related News