தர்மர் ஏன் சூதாட ஒப்புக்கொண்டார்? விடையறிவோம் வாருங்கள்..!
why dharma agreed to gamble-சூதாட்டம் (கோப்பு படம்)
பாண்டவர்களில் ஒருவனான சகாதேவனும் முக்காலமும் தெரிந்திருந்தும் , ஏன் போரில் என்ன நடக்கும் என்று உடன் பிறந்தவர்களிடம் சொல்லவில்லை?. இது பற்றி பார்க்கலாம்.
பாண்டவர்களின் தந்தையான பாண்டு உயிர் பிரியும் தருணத்தில் மகன்கள் ஐவரையும் அருகே அழைத்து , தான் இறந்தவுடன் தன் உடலை தகனம் செய்ய வேண்டாம் என்றும், மாறாக பிய்த்து தின்று விடும்படியும் , அப்படி செய்தால் முக்காலமும் உணரும் ஆற்றல் கிடைக்கும் என்று சொல்லி விட்டு உயிர் துறக்கிறான்.
பாண்டவர்களும் தந்தை சொன்னதையே செய்ய திட்டமிடும் போது அங்கே கிருஷ்ண பரமாத்மா வருகிறார். விஷயத்தை கேட்டவுடன் பாண்டவர்களை திட்டுகிறார். சாகும் காலத்தில் உங்கள் தந்தைக்குத் தான் புத்தி பிசகி விட்டதென்றால், உங்களுக்கு என்ன ஆனது? யாராவது பிணத்தை தின்பார்களா?
வாருங்கள் விறகு எடுத்து வந்து உங்கள் தந்தையை தகனம் செய்வோம் என்று பாண்டவர்களை அழைத்துச் செல்கிறார். இறந்து கிடக்கும் பாண்டுவின் உடலை மிருகங்கள் இழுத்துச் சென்று விடாமல் இருக்க சகாதேவனை காவலுக்கு விட்டுச் செல்கிறார்கள்.
அவர்கள் அப்பால் போனவுடன் சகாதேவன் தன் தந்தையின் இறுதி வாக்கை மீற விரும்பாமல் அவரது சுண்டுவிரலை மட்டும் உடைத்து தின்று விடுகிறான். உடனே அவனுக்கு முக்காலத்தையும் உணரும் சக்தி கிடைக்கிறது.
விறகுகளை கஷ்டப்பட்டு தூக்கி வந்த பாண்டவர்கள் மிகவும் களைப்புடன் விறகுக் கற்றைகளை கீழே போட்டுவிட்டு களைப்பாக அமர்கிறார்கள். கிருஷ்ணரும் ஒரு விறகுச்சுமையை தூக்கி வருகிறார். ஆனால் விறகுக்கட்டு அவர் தலைக்கு அரையடி மேலாக காற்றில் மிதந்து வருகிறது. அது மற்றவர்கள் கண்களுக்கு தெரியவில்லை. சகாதேவனுக்கு மட்டும் தெரிகிறது. கிருஷ்ணரும் மிக களைப்படைந்தவர் போல ஸ்ஸ்ஸப்பா என்று விறகை கீழே போட்டு விட்டு அமர்கிறார்.
அவரருகில் சென்ற சகாதேவன், கண்ணா . எல்லோரும் விறகை சுமந்து வந்தார்கள். அவர்கள் களைப்பாவது நியாயம். உன் விறகுக்கட்டு காற்றில் மிதந்து தானே வந்தது. நீ ஏன் களைத்தது போல நடிக்கிறாய் என்று கேட்கிறான். உடனே கிருஷ்ணருக்கு விஷயம் விளங்கி விடுகிறது. சகாதேவனை தனியே அழைத்துச் சென்று அவர் கேட்க, சகாதேவன் விரலைத் தின்றதை ஒத்துக்கொள்கிறான்.
எதிர்காலம் தேவரகசியம் என்றும், இறைவன் போக்கில் குறுக்கிடுவது அதர்மம் என்று கிருஷ்ணர் கூறுகிறார். தனக்குத் தெரிந்த விஷயங்களை எப்போதும், எவரிடமும் சொல்லக்கூடாது என்று சத்தியமும் வாங்கிக் கொள்கிறார். சகாதேவன் தன் வாக்கை இறுதி வரை காப்பாற்றுகிறான்.
ஒரே ஒருமுறை மட்டும் யுதிஷ்டிரர் (தர்மர்) மிகவும் வற்புறுத்திக் கேட்டதால் உங்களால் நம் குலம் அழியும் என்ற ஒரு உண்மையை மட்டும் சொல்கிறான். மனம் வருந்தும் அவர், தன்னால் தன் குலம் அழிய நான் விடமாட்டேன் என்றும் இன்று முதல் யாரிடமும் மோதுவதில்லை என்றும் யார் கோரிக்கையையும் மறுப்பதில்லை என்றும் முடிவு செய்கிறார்.
அதன் காரணமாகவே சூதாட துரியோதனன் விடுத்த அழைப்பை நிராகரிக்காமல் பங்கேற்கிறார். சகல தர்மமும் அறிந்த தர்மர் என்று அழைக்கப்பட்ட யுதிஷ்டிரர் சூதாட ஏன் ஒப்புக்கொண்டார் என்ற கேள்விக்கும் இதுவே விடை. பாரதத்தில் கண்ணன் மாயாவி என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu