Murugan 6 Padai Veedu தமிழகத்திலுள்ள அறுபடை வீடு கோயில்களுக்கு சென்றிருக்கிறீர்களா?....
Murugan 6 Padai Veedu
மனிதர்களாகப் பிறந்தவர்கள் அனைவருமே ஆன்மீக உணர்வுகளால் உந்தப்படுகின்றனர்.ஒ ருசிலர் இதற்கு மாற்று கருத்து தெரிவித்தாலும் ஆனால் நம்மை மீறிய சக்தி ஒன்று உண்டு என்பதை மனப்பூர்வமாக நம்புகின்றனர். ஆக மனிதர்களாக பிறந்தவர்கள் ஏதோ ஒரு சக்திக்கு பயந்து தங்கள் வாழ்க்கை செயல்பாடுகளை நெறிமுறைப்படுத்திக் கொள்கின்றனர். இதனை நாம் அவரவர்கள் கண்ணோட்டத்தில் எடுத்துக்கொள்ளலாம்.
கடவுள்களில் முருகன் அபார சக்தி படைத்தவர் என்று சொல்வது உண்டு. இவருக்கு தமிழகத்தில் அறுபடை வீடுகள் என்று சொல்லக்கூடிய ஆறு தலங்களில் கோயில்கள் உண்டு. அங்கு வீற்றிருந்து தம்மை வணங்கும் பக்தர்களுக்கு அருள்பாலித்துவருகிறார் முருக கடவுள். முருகன் என்றாலே நமக்கு நினைவுக்கு வருவது பழனி மலைக்கோயில்தான். பழனி என்றாலே பிரசாதமான பஞ்சாமிர்தம் தான் நினைவுக்கு வரும். அந்த வகையில் பிரசித்தம். மேலும் இக்கோயிலுக்கு தமிழகம் மட்டும்அல்லாமல் பிற மாநிலங்களிலிருந்தும் ஏராளமான பக்தர்கள் தினமும் வந்து வணங்கிச் செல்கின்றனர்.
Murugan 6 Padai Veedu
குறிப்பாக தமிழகத்துக்கு அண்டை மாநிலமான கேரளாவில் இருந்து பக்தர்கள் தினந்தோறும் ஏராளமானோர் வந்து செல்கின்றனர்.
தமிழ்நாட்டில், இந்து சமயக் கடவுள்களில், தமிழ்க் கடவுளான முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள், ஒவ்வொன்றும் அவருடைய படைவீடு எனப்படுகின்றது. இந்த ஆறு இடங்களும் ஒருமித்து அறுபடைவீடுகள் என அழைக்கப்படுகின்றன. அவைகளாவன,
மதுரை மாவட்டத்திலுள்ள திருப்பரங்குன்றம், துாத்துக்குடி மாவட்டத்திலுள்ள திருச்செந்துார் அல்லது திருச்சீரலைவாய், திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பழனி (எ) திருவாவினன்குடி, தஞ்சை மாவட்டத்திலுள்ள சுவாமி மலை சுவாமிநாதசுவாமி கோயில் (எ)திருவேரகம், திருவள்ளூர் மாவட்டத்திலுள்ள திருத்தணி அல்லது குன்று தோறாடல் ,மதுரை மாவட்டத்திலுள்ள பழமுதிர்ச்சோலை.
Murugan 6 Padai Veedu
திருப்பரங்குன்றம்
முருகனின் ஆறுபடை வீடுகளில் முதலாவது படை வீடாகத் திகழ்வது திருப்பரங்குன்றம் ஆகும். திருப்பரங்குன்றம் முருகன் கோவில், மதுரைக்கு தென்மேற்கில் ஏறத்தாழ 8 கி.மீ தொலைவில் உள்ளது. இங்குதான் முருகன் தெய்வானையை திருமணம் செய்து கொண்ட நிகழ்வு நடந்ததாகப் புராணங்கள் தெரிவிக்கின்றன. இக்கோவிலில் முருகன் மணக்கோலத்தில் காட்சி தருகிறார்.
திருச்செந்தூர்
திருச்செந்தூரில் முருகனின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படை என்று போற்றப்படும் சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இவ்விடத்தில் முருகன், சூரபத்மனை அழித்ததாக கந்த புராணம் கூறுகிறது.
பழனி
பழனி, முருகனின் மூன்றாம் படை வீடாகும். நாரதர் சிவனுக்கு அளித்த ஞானப்பழம் தனக்கு கிடைக்காததால், முருகர் கோபம் கொண்டு ஆண்டியின் கோலம் பூண்டு இந்த திருத்தலத்தில் தங்கிவிட்டதாக புராணங்களில் கூறப்படுகிறது.
சுவாமிமலை
சுவாமிமலை முருகனின் நான்காவது படைவீடு ஆகும். இது தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணத்திலிருந்து 6 கி.மீ. தொலைவில் உள்ளது. முருகன் தனது தந்தையான சிவனுக்கு பிரணவ மந்திரத்தின் பொருளை கூறியதால், இங்கு குடிகொண்டுள்ள முருகனுக்கு சுவாமிநாதன் எனப் பெயராயிற்று.
Murugan 6 Padai Veedu
திருத்தணி
திருத்தணி முருகனின் ஐந்தாம் படைவீடு ஆகும். இவ்விடத்தின் மலையின் வள்ளியை முருகன் திருமணம் செய்து கொண்ட தலமாகும். திருத்தணி குன்றின் மீது முருகனுக்கு அர்ப்பணிக்கப்பட்ட திருத்தணி முருகன் கோயில் உள்ளது. திருப்புகழ் பாடிய அருணகிரிநாதரால் பாடல் பெற்ற தலமிது. முத்துச்சாமி தீட்சதராலும் பாடப்பட்ட தலம்.இக்கோயிலை தணிகை முருகன் கோயில் என்றும் அழைப்பர்.
பழமுதிர்சோலை
பழமுதிர்சோலை - முருகனின் ஆறாம் படைவீடாகும். முருகப் பெருமான் சிறுவனாய் வந்து ஔவையாரை சோதித்தது இங்குதானென நம்பப்படும் இடம். இங்குள்ள முருகன் கோயில், விஷ்ணு கோயிலான அழகர் கோவில் மலை மீது அமைந்துள்ளது. அருணகிரிநாதர் இத்தலம் மீது திருப்புகழ் பாடியுள்ளார்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu