தஞ்சை பெரிய கோவிலில் எம்.ஜி.ஆர். மீது கோபப்பட்டாரா இந்திரா காந்தி?
கோப்புப்படம்
கல்கி இதழின் ஆசிரியராக இருந்த சீனியர் எடிட்டர் செ. இளங்கோவன் இந்திரா காந்தி குறித்து வெளியிட்டுள்ள பகிர்வு நம் வாசகர்களின் பார்வைக்கு வழங்கப்பட்டுள்ளது.
“துள்ளல் நடை” எம்.ஜி.ஆரையே பார்த்துப் பார்த்துப் பழக்கப்பட்டிருந்த நான், அன்றைக்குத்தான் முதல் முறையாகத் ‘துவண்ட நிலை’ எம்.ஜி.ஆரைக் கண்டேன். அதுவும் கைக்கெட்டும் தூரத்தில்….அதற்கு, நான் உள்பட விரல்விட்டு எண்ணக்கூடிய ஒரு சிலர் மட்டுமே சாட்சி.
என்றைக்கு? எங்கே? எப்போது?
தஞ்சை பெரியகோயிலில், ராஜராஜசோழனின் ஆயிரமாவது முடிசூட்டு விழா கொண்டாட தீர்மானிக்கப்பட்டது. அன்றைய தமிழக முதல்வர் எம்.ஜி.ஆர். முன்னிலையில், பிரதமர் இந்திரா காந்தி முடிசூட்டுவாரென, 1984 அக்டோபர் முதல் வாரத்தில் விழா ஏற்பாடு செய்யப்பட்டது. விழா ஏற்பாடுகள் தொடங்கியவுடனேயே, ‘ஐயய்யோ பெரும் பதவியிலுள்ளவர்கள் பெரிய கோயிலுக்குள் நுழைந்தால், அவர்கள் பதவி தங்காதே! நல்லதும் நடக்காதே! ஏஎன்றெல்லாம் பேசிக்கொண்டார்கள்.
அரசுத் தரப்பு, இதையெல்லாம் காதில் போட்டுக் கொள்ளவில்லை. விழா ஏற்பாடுகளோடு, இந்திரா காந்திக்கான தீவிர பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டன. காரணம், கடந்த நான்கு மாதங்களுக்கு முன்புதான் - ஜூன் முதல் வாரத்தில்தான் - அமிர்தசரஸ் பொற்கோயிலில் ‘ஆபரேஷன் ப்ளூஸ்டார்’ நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. நடத்தியது இந்திய இராணுவம். நடத்தச் சொன்னது இந்திரா காந்தி.
அதில், காலிஸ்தான் பிரிவினைவாதத் தலைவர் ஜர்னைய்ல்சிங் பிந்தரன்வாலே கொல்லப்பட்டார். கூடவே 83 இராணுவ வீரர்களும் 492 பொதுமக்களும் கொல்லப்பட்டதாக அரசுத் தரப்பில் சொல்லப்பட்டது. உண்மையில், 1500 பேராவது கொல்லப்பட்டிருப்பார்கள் என்று அதிகாரபூர்வமற்ற செய்திகள் அலறின.
மறைமுகமாகத் தானே வளர்த்துவிட்ட பிந்தரன்வாலேவைக் கொல்வதற்காக நமது இராணுவ வீரர்களையே இந்திரா காந்தி பலிகொடுத்துவிட்டாரே என்று பொதுமக்களும், புனிதமான தங்கள் பொற்கோயிலுக்குள் இராணுவத்தை அனுபியதன் மூலம் அதைத் ‘தீட்டுப்படுத்தி’விட்டாரே என்று சீக்கியர்களும் வேதனையும் கோபமும் கொண்டார்கள். அதனால், பிரதமரின் தனி பாதுகாப்புப் பிரிவிலிருக்கும் சீக்கிய வீரர்களைத் தவிர்க்குமாறு இந்திரா காந்திக்கு ஆலோசனைகளும் சொல்லப்பட்டன. ஆனால் அவர் கேட்கவில்லை.
இந்த நிலையில்தான், பிரதமர் இந்திரா காந்தி தமிழகம் வந்தார். பெரியகோயிலுக்கு வெளியே, ஊருக்குள் ஒரு பொதுக்கூட்டம். அதன்பிறகுதான் கோயிலுக்குள்ளிருந்த இராஜராஜசோழன் சிலைக்கு வைரக்கிரீட முடி சூட்டும் நிகழ்ச்சி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் இந்திரா காந்தியும் முதல்வர் எம்.ஜி.ஆரும் கலந்து கொண்டு பேசினார்கள்.
இந்திரா காந்தி பேசிக்கொண்டிருக்கும்போதே, பத்திரிகையாளர்கள் பக்கம் வந்த தமிழக அரசின் செய்தி மக்கள் தொடர்பு அதிகாரியொருவர், ‘இப்போது ஒரு கார் கோயிலுக்குப் புறப்பட்டுச் செல்கிறது; விருப்பமுள்ளவர்கள் இதில் போகலாம். மற்றவர்கள் கூட்டம் முடிந்து செல்லும் வேனில் போகலாம்’ என்றார்.
நானும் ‘ஹிந்து’ நாளிதழ் புகைப்படக்காரர் இராதாகிருஷ்ணனும் (அவர் பெயர் இதுதான் என நினைவு) ‘கோயில் நிகழ்வுதானே முக்கியம்’ என்று முதலில் புறப்பட்ட காரிலேயே சென்றுவிட்டோம். மற்ற செய்தியாளர்கள் யாரும் எங்களுடன் வரவில்லை.
நாங்கள் கோயிலுக்குள் வந்து சேர்ந்த சுமார் பத்து நிமிடங்களில், பிரதமரும் முதல்வரும் வந்துவிட்டார்கள். அவர்களோடு, அமைச்சர் ஆர்.எம். வீரப்பன், செய்திப்பிரிவு கேமரா மேன்கள், புகைப்படக்காரர்கள் மற்றும் பாதுகாவலர்கள் மட்டுமே வந்தார்கள். பாதுகாப்புக் கருதி வேறு யாரையும் உள்ளே விடவில்லை. மற்ற பத்திரிகயாளர்களாலும் உள்ளே வரமுடிவில்லை என்பதுதான் சோகம்.
இந்திரா காந்தி உள்ளே வந்ததும் ‘இராஜராஜன் சிலை (விக்ரகம் மாதிரியான உலோகச்சிலை) எங்கே?’ என்று கேட்டுக் கொண்டே, ஆர்.எம். வீரப்பனின் வழிகாட்டலில், ஏதோ சிறுபெண்போல விறுவிறுவென நடந்தார். எம்.ஜி.ஆரும் பின்னாலேயே சென்றார். சிலையின் தலையில், இந்திரா காந்தி கிரீடத்தைச் சூட்டினார். புகைப்படக்காரர்கள் படமெடுத்தனர். உடனே பிரகதீஸ்வரரை தரிசிக்கச் சென்று விட்டார்.
வழக்கமாக, இது போன்ற தருணங்களில் நிறைய புகைப்படக்காரர்கள் இருப்பார்கள். அதில் ஒருவராவது ‘ப்ளீஸ் மேடம்…இன்னொரு தடவை கிரீடத்தை வையுங்க மேடம்…மறுபடியும் படமெடுத்துக்கிறோம் ’ என்று குரல் கொடுப்பார்கள். அன்றைக்கு இருந்ததே இரண்டு மூன்று புகைப்படக்காரர்கள்தான் என்பதால், அப்படி எந்தக் குரலும் எழவில்லை.
பிரகதீஸ்வரர் தரிசனம் முடிந்ததும் பிரகதீஸ்வரரை அடுத்திருந்த அம்பாள் சன்னதிக்கு இந்திரா காந்தியை அழைத்துச் சென்றார், ஆர்.எம்.வீ. இந்த நேரத்தில்தான் அந்தச் சம்பவம் நடந்தது….
அம்பாள் சன்னதிக்குள் எம்.ஜி.ஆரால் போகமுடியவில்லை. சன்னதிக்கு வெளியில் கிடந்த ஒரு நாற்காலியில் துவண்ட நிலையில் தொப்பென்று உட்கார்ந்து விட்டார். நானும் அம்பாள் சன்னதிக்குள் செல்லாமல், எம்.ஜி.ஆர். எதிரிலேயே நின்று விட்டேன். இரண்டு கைகளையும் கன்னங்களில் வைத்தபடி தலைகுனிந்து, சில விநாடிகள் ஆசுவாசப்படுத்திக் கொண்டார். யாரோ, ‘தண்ணீர் வேண்டுமா? ‘ என்று கேட்க, வேண்டாமெனத் தலையசைத்தார்.
இப்படிப்பட்ட நிலையிலும் ‘இந்தநிலையில்’ தன்னை யாரும் படமெடுத்துவிடக் கூடாதென்பதற்காக, தூரத்தில் தெரிந்த ஒரு புகைப்படக்காரரை, தன் பக்கத்தில் வரவேண்டாமெனச் சைகை காட்டினார். எம்.ஜி.ஆர். அம்பாள் சன்னதிக்குள் வராததால், அவருக்காகக் கற்பூர ஆரத்தி கொண்டுவந்த குருக்களிடம், தலையசைத்து வேண்டாமெனச் சொல்லிவிட்டார்.
எம்.ஜி.ஆர். ஏன் அம்பாளைத் தரிசிக்க வரவில்லை என்ற கேள்விக்குறியுடன், அம்பாள் சன்னதிக்குள்ளிருந்து இந்திரா காந்தியுடன் வெளியே வந்த ஆர்.எம்.வீ., தன் தலைவரின் நிலை கண்டு பதறியபடி ஓடி வந்தார்.
இந்திராவும் அருகில் வந்து ‘What happened to him?’ என்று அங்கிருந்த என்னைப் பார்த்துக் கேட்டார்.‘Tiredness’ என்று ஆர்.எம்.வீ. அவசரமாகச் சொல்ல, ‘Take care’ என்று சொல்லிவிட்டுப் புறப்பட்டார் இந்திரா காந்தி. எம்.ஜி.ஆரும் சோர்வோடு புறப்பட்டார்.
இதையெல்லாம் அரைகுறையாகக் கேள்விப்பட்ட வெளியிலிருந்த சில செய்தியாளர்கள், ‘தஞ்சை இடைத்தேர்தலில் முதலில் இந்திரா காந்திக்கு ஆதரவு கொடுத்த எம்.ஜி.ஆர்., பிறகு ‘ஜகா’ வாங்கியதால், இந்திரா பெருங்கோபமடைந்து விட்டார். அந்தக் கோபத்தை எம்.ஜி.ஆர்.மீது காட்டியதால்தான் எம்.ஜி.ஆர். மயக்கமடைந்தார்…’ என்றெல்லாம் மறுநாள் செய்தி வெளியிட்டார்கள்.
அருகிலிருந்து பார்த்த எனக்கே இது தெரியாதபோது, பார்க்காத அவர்களுக்கு எப்படித் தெரிந்தது என்பது, எனக்கு இன்றுவரை விளங்காத மர்மமாகத்தான் இருக்கிறது.
உண்மையில் இந்திரா காந்தியும் எம்.ஜி.ஆரும் கோயிலுக்குள் பேசிக்கொள்ளவேயில்லை. அம்பாள் சன்னதிக்கு வெளியே எம்.ஜி.ஆருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு தொடர்ந்ததால், அப்பல்லோ மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். நிலைமை தீவிரமானதால், அக்டோபர் 16-ம் தேதியன்று மீண்டும் சென்னைக்கு வந்த இந்திரா காந்தி, மருத்துவமனைக்குச் சென்று, எம்.ஜி.ஆரின் உடல் நலம் விசாரித்துச் சென்றார்.
எம்.ஜி.ஆர். உடல் நிலையில் முன்னேற்றமில்லாததால், அமெரிக்கா அழைத்துச் செல்லப்பட்டார். அக்டோபர் 31-ம் தேதியன்று அவரது இல்லத்திலேயே, அவருடைய மெய்க்காப்பாளர்களாலேயே இந்திரா காந்தி படுகொலை செய்யப்பட்டார் என்பதும் கொலையாளிகள் சீக்கியர்கள் என்பதால், சீக்கியர்களுக்கெதிராகப் பெருங்கலவரங்கள் வெடித்தன என்பதும் உலகறிந்த செய்தி தான்.
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu