இன்று (நவ.26) இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட புனித நாள்

இன்று (நவ.26) இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட புனித நாள்
இன்று (நவ.26) இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கப்பட்ட நாள் என்பது மட்டும் அல்ல இந்த நாள் இந்தியாவின் புனித நாளாக கருதப்படுகிறது.

நவம்பர் 26 இந்திய அரசியலமைப்பு தினம் ஆகும். ஒவ்வொரு நாட்டிற்கும் ஒரு தனி சட்டம் உண்டு. அந்த வகையில் நமது நாட்டிற்கான சட்டத்தை உருவாக்கிய நாள் இன்று. பன்னெடுங்காலமாக ஆங்கிலேயரிடம் அடிமைப்பட்டு கிடந்த இந்தியா 1947 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 15 ஆம் நாள் சுதந்திரம் அடைந்தது. நாடு சுதந்திரம் அடைந்தாலும் நமது நாட்டின் சட்ட திட்டங்கள் உருவாக்கப்படவில்லை. இங்கிலாந்து பாராளுமன்ற மரபு மற்றும் அவர்களுடைய சட்ட திட்டங்களை பின்பற்றி நாட்டின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு ஆட்சி புரிந்து வந்தார்.

அந்த நேரத்தில்தான் நமது நாட்டிற்கு என்று தனி சட்டம் உருவாக்கப்பட வேண்டும் என்று முடிவு எடுக்கப்பட்டது. அதன்படி இந்திய அரசியலமைப்புச் சட்டம் உருவாக்கப்பட்டது. அரசியல் அமைப்பு வரைவுக் குழுவின் தலைவராக சட்டமேதை அம்பேத்கர் இருந்தார். அரசியல் அமைப்பை உருவாக்குவதில் அவரது பங்கு தான் முக்கிய பங்கு இருந்தது. இதனால் தான் அவர் அரசியலமைப்பின் தந்தை என வர்ணிக்கப்படுகிறார்.

அம்பேத்கர் தலைமையில் உருவாக்கப்பட்ட இந்திய அரசியல் அமைப்பை இந்திய அரசியல் நிர்ணய சபை 1949 ஆம் ஆண்டு நவம்பர் 26 ஆம் தேதி ஏற்றுக்கொண்டது. இதன் பிறகு 1950 ஆம் ஆண்டு ஜனவரி 26 ஆம் தேதி அது நடைமுறைக்கு வந்தது. அந்த நாள் தான் குடியரசு தினமாக கொண்டாடப்படுகிறது.

அரசியலமைப்பை அரசியல் நிர்ணய சபை ஏற்றுக்கொண்ட நவம்பர் 26 ஆம் தேதி இந்திய அரசியலமைப்பு தினம் அல்லது இந்திய சட்ட தினம் என அழைக்கப்படுகிறது .அதன்படி இன்று நாடு முழுவதும் அரசியலமைப்பு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. குறிப்பாக நீதிமன்றங்கள் சட்டம் சார்ந்த அமைப்புகளில் இவ்விழா சிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.

தலைநகர் டெல்லியில் சட்டம் மற்றும் நீதி அமைச்சகம் இந்திய சட்ட நிறுவனத்துடன் இணைந்து கொண்டாட்டங்களில் ஈடுபட்டு வருகிறது. டெல்லி விஞ்ஞான பவனில் இந்த கொண்டாட்டங்கள் நடைபெற்று வருகிறது. விழாவில் துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் தலைமை விருந்தினராக கலந்து கொள்கிறார். மத்திய சட்ட அமைச்சர்அர்ஜுன் ராம் மேக்பால், சட்ட ஆணைய தலைவர் ரிது ராஜ் அவஸ்தி, சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா, தேசிய மனித உரிமைகள் ஆணைய தலைவர் அருண்குமார் மிஸ்ரா கலந்து கொள்கிறார்கள்.

நமது நாட்டின் அரசியலமைப்பு உருவாக்கப்பட்ட இன்றைய தினம் சட்ட தினம் மட்டுமல்ல இது ஒரு புனித நாளாக கருதப்படுகிறது. ஏனென்றால் பல்வேறு மொழி, இனம், மதம் நிறைந்துள்ள நமது நாட்டில் இந்திய இறையான்மையை இந்த அரசியலமைப்பு சட்டம் தான் ஒருங்கிணைந்து செயல்படுகிறது. அதனால் தான் அரசியல் சட்டம் உருவாக்கப்பட்ட நாள் புனித நாளாகவும் கருதப்படுகிறது. நமது நாட்டில் நடப்பது சட்டத்தினால் ஆன ஆட்சி. அந்த சட்டம் உருவாக்கப்பட்ட நாள் இறையாண்மையை காக்கும் நாளாகவும் கருதப்படுகிறது.

Tags

Next Story