10 thirukkural in tamil-திருக்குறள், வாழ்க்கையின் நெறி..! முத்து முத்தாக பத்து குறட்பாக்கள்..!
10 thirukkural in tamil-திருவள்ளுவர்.
தமிழின் தலைசிறந்த நூல்களுள் திருக்குறளும் ஒன்று. அதில் சொல்லப்பட்டிருக்கும் கருத்துகள் எக்காலத்திற்கும், எந்த நாட்டிற்கும் பொதுவான கருத்தாகும். அதனால்தான் அதை உலகப் பொதுமறை என்று அழைக்கப்படுகிறது. குறள் காலத்தால் அழியாதது என்று வியந்து கூறுகிறோம். உலகில் அதிகமான மொழிகளில் மொழியாக்கம் செய்யப்பட ஒரே நூல் திருக்குறள். அது வாழ்க்கையின் நெறி.
தமிழினத்தின் பழமையான பண்பாட்டையும் பாரம்பரியத்தையும் இந்த உலகம் வியந்து பாராட்டுகிறதென்றால் அதற்கு தமிழில் உள்ள இலக்கியச் செறிவும் காரணமாகும்.
10 thirukkural in tamil
தமிழகத்தின் மைலாப்பூர் வாழ் நெசவாளர் குலத்தோன்றலான திருவள்ளுவர் மானுடத்தின் தலைசிறந்த புலமைப் பெரியோர்களில் ஒருவராகக் கருதபப்டுகிறார். திருக்குறளின் அழியாப்புகழ் தமிழினத்திற்கும் தமிழ்மொழிக்கும் மாத்திரம் சொந்தம் என்பதில் நாம் பெருமை கொள்வோம்.
மானுடத்திற்குத் தேவையான கருத்துகள்
பொது மானுடத்திற்கும்பொருத்தமான முறையில் தமிழர் வாழ்வின் அனைத்துத் துறைகளையும் உள்ளடக்கிய விதத்தில் குறட்பாக்கள் உருவாக்கப்பட்டுள்ளன. ஓவ்வொரு அத்தியாயத்திலும் பத்துக்குறட்பாக்களைக் கொண்ட 133 அத்தியாயங்கள் குறள் நூலில் காணப்படுகின்றன. மொத்தம் 2,660 வரிகளைக் கொண்ட 1330குறட் பாக்கள் இருக்கின்றன. குறளின் வரிகளில் ஏழு சொற்கள் இருப்பதால் அணுவைத் துளைத்து ஏழு கடலைப் புகுத்திய குறள் என்று ஒளவையார் அதைப் புகழ்ந்துள்ளார்.
இதோ உங்களுக்காக 10 குறட்பாக்கள் அதன் பொருள் விளக்கமுடன் :-
1. விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின் றுடற்றும் பசி
மு.வ விளக்கம்
மழை பெய்யாமல் பொய்படுமானால், கடல் சூழ்ந்த அகன்ற உலகமாக இருந்தும் பசி உள்ளே நிலைத்து நின்று உயிர்களை வருத்தும்
சாலமன் பாப்பையா விளக்கம்
உரிய காலத்தே மழை பெய்யாது பொய்க்குமானால், கடல் சூழ்ந்த இப்பேருலகத்தில் வாழும் உயிர்களைப் பசி வருத்தும்
கலைஞர் விளக்கம்
கடல்நீர் சூழ்ந்த உலகமாயினும், மழைநீர் பொய்த்து விட்டால் பசியின் கொடுமை வாட்டி வதைக்கும்
2. பழியஞ்சிப் பாத்தூண் உடைத்தாயின் வாழ்க்கை
வழியெஞ்சல் எஞ்ஞான்றும் இல
மு.வ விளக்க உரை:
பொருள் சேர்க்கும் பொது பழிக்கு அஞ்சிச் சேர்த்து, செலவு செய்யும் போது பகுந்து உண்பதை மேற்க்கொண்டால், அவ்வாழ்கையின் ஒழுங்கு எப்போதும் குறைவதில்லை.
சாலமன் பாப்பையா உரை:
பொருள் தேடும்போது பாவத்திற்குப் பயந்து தேடிய பொருளை உறவோடு பகிர்ந்து உண்ணும் இல்வாழ்பவனின் பரம்பரை ஒருகாலும் அழிவதில்லை.
கலைஞர் விளக்க உரை:
பழிக்கு அஞ்சாமல் சேர்த்த பொருள் கணக்கின்றி இருப்பினும் அதைவிட, பழிக்கு அஞ்சிச் சேர்த்த பொருளைப் பகுத்து உண்ணும் பண்பிலேதான் வாழ்க்கையின் ஒழுக்கமே இருக்கிறது
10 thirukkural in tamil
3. அமிழ்தினும் ஆற்ற இனிதேதம் மக்கள்
சிறுகை அளாவிய கூழ்
மு.வ விளக்க உரை:
தம்முடைய மக்களின் சிறு கைகளால் அளாவப்பெற்ற உணவு, பெற்றோர்க்கு அமிழ்தத்தை விட மிக்க இனிமை உடையதாகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
தம் பிள்ளைகளின் சிறு கையால் பிசையப்பட்ட கூழ், அமிழ்தைக் காட்டிலும் மிக இனிது.
கலைஞர் விளக்க உரை:
சிறந்த பொருளை அமிழ்தம் எனக் குறிப்பிட்டாலுங்கூடத் தம்முடைய குழந்தைகளின் பிஞ்சுக்கரத்தால் அளாவப்பட்ட கூழ் அந்த அமிழ்தத்தைவிடச் சுவையானதாகிவிடுகிறது
4. அன்பிலார் எல்லாம் தமக்குரியர் அன்புடையார்
என்பும் உரியர் பிறர்க்கு
மு.வ விளக்க உரை:
அன்பு இல்லாதவர் எல்லாப்பொருள்களையும் தமக்கே உரிமையாகக் கொண்டு வாழ்வார்: அன்பு உடையவர் தம் உடமையும் பிறர்க்கு உரிமையாக்கி வாழ்வர்
சாலமன் பாப்பையா விளக்க உரை:
அன்பு இல்லாதவர் எல்லாவற்றாலும் தமக்கே உரிமை உடையவராய் இருப்பர். அன்புள்ளவரோ பொருளால் மட்டும் அன்று; உடம்பாலும் பிறர்க்கு உரியவராய் இருப்பர்
கலைஞர் விளக்க உரை:
அன்பு இல்லாதவர், எல்லாம் தமக்கே என உரிமை கொண்டாடுவர்; அன்பு உடையவரோ தம் உடல், பொருள், ஆவி ஆகிய அனைத்தும் பிறருக்கென எண்ணிடுவர்
5. பணிவுடையன் இன்சொலன் ஆதல் ஒருவற்கு
அணியல்ல மற்றுப் பிற
மு.வ விளக்க உரை:
வணக்கம் உடையவனாகவும் இன்சொல் வழங்குவோனாகவும் ஆதலே ஒருவனுக்கு அணிகலனாகும் மற்றவை அணிகள் அல்ல.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
தகுதிக்குக் குறைவானவரிடமும் பணிவுடன் இனிய சொற்களைச் சொல்பவனாக ஆவது ஒருவனுக்கு ஆபரணம் ஆகும்; பிற அணிகள் அணி ஆகா
கலைஞர் விளக்க உரை:
அடக்கமான பண்பும், இனிமையாகப் பேசும் இயல்பும் தவிர, ஒருவருக்குச் சிறந்த அணிகலன் வேறு இருக்க முடியாது
6. காலத்தி னாற்செய்த நன்றி சிறிதெனினும்
ஞாலத்தின் மாணப் பெரிது
மு.வ விளக்க உரை:
உற்ற காலத்தில் ஒருவன் செய்த உதவி சிறிதளவாக இருந்தாலும், அதன் தன்மையை அறிந்தால் உலகைவிட மிகப் பெரிதாகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
நமக்கு நெருக்கடியான நேரத்தில் ஒருவர் செய்த உதவி, அளவில் சிறியது என்றாலும், உதவிய நேரத்தை எண்ண அது இந்தப் பூமியை விட மிகப் பெரியதாகும்
கலைஞர் விளக்க உரை:
தேவைப்படும் காலத்தில் செய்யப்படும் உதவி சிறிதளவாக இருந்தாலும், அது உலகத்தைவிடப் பெரிதாக மதிக்கப்படும்
10 thirukkural in tamil
7. அழுக்கா றுடையான்கண் ஆக்கம்போன் றில்லை
ஒழுக்க மிலான்கண் உயர்வு
மு.வ உரை:
பொறாமை உடையவனிடத்தில் ஆக்கம் இல்லாதவாறு போல, ஒழுக்கம் இல்லாதவனுடைய வாழ்க்கையில் உயர்வு இல்லையாகும்.
சாலமன் பாப்பையா உரை:
பொறாமை உள்ளவனுக்குச் செல்வம் இல்லை என்பது போல், ஒழுக்கம் இல்லாதவனுக்கு உயர்குலம் என்பதும் இல்லை.
கலைஞர் உரை:
பொறாமையுடையவனுக்கும், நல்லொழுக்கமில்லாதவனுக்கும் அமையும் வாழ்வு, உயர்வான வாழ்வாகக் கருதப்பட மாட்டாது
8. இன்னா திரக்கப் படுதல் இரந்தவர்
இன்முகங் காணு மளவு
மு.வ விளக்க உரை:
பொருள் வேண்டும் என்ற இரந்தவரின் மகிழ்ந்த முகத்தைக் காணும் வரைக்கும் (இரத்தலைப் போலவே ) இரந்து கேட்கப்படுவதும் துன்பமானது.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
கொடுக்க இருப்பவரின் நிலைகூட தம்மிடம் வந்து யாசித்து நிற்பவரின் மலர்ந்த முகத்தைக் காணும் வரை கொடியதே.
கலைஞர் விளக்க உரை:
ஈதல் பண்புடையவர்க்குத் தம்மை நாடி வரும் இரவலரின் புன்னகை பூத்த முகத்தைக் கண்டு இன்புறும் வரையில், அவருக்காக இரக்கப்படுவதும் ஒரு துன்பமாகவே தோன்றும்
9. அருட்செல்வஞ் செல்வத்துள் செல்வம் பொருட்செல்வம்
பூரியார் கண்ணு முள
மு.வ விளக்க உரை:
பொருள்களாகிய செல்வங்கள் இழிந்தவரிடத்திலும் உள்ளன; (உயர்ந்தவரிடத்தில் மட்டுமே உள்ள) அருளாகிய செல்வமே செல்வங்களில் சிறந்த செல்வமாகும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
செல்வங்கள் பலவற்றுள்ளும் சிறந்தது அருள் என்னும் செல்வமே. பொருட்செல்வம் இழிந்த மனிதரிடமும் உண்டு.
கலைஞர் விளக்க உரை:
கொடிய உள்ளம் கொண்ட இழிமக்களிடம்கூடக் கோடிக்கணக்கில் செல்வம் குவிந்திருக்கலாம்; ஆனாலும் அந்தச் செல்வம் அருட் செல்வத்துக்கு ஈடாகாது
10. பொய்ம்மையும் வாய்மை யிடத்த புரைதீர்ந்த
நன்மை பயக்கு மெனின்
மு.வ விளக்க உரை:
குற்றம் தீர்த்த நன்மையை விளைக்குமானால் பொய்யாச் சொற்களும் வாய்மை என்று கருதத் தக்க இடத்தைப் பெறும்.
சாலமன் பாப்பையா விளக்க உரை:
குற்றம் அற்ற நன்மையைத் தரும் என்றால் உண்மை சொல்ல வேண்டிய இடத்தில் பொய்யும் சொல்லலாம்.
கலைஞர் விளக்க உரை:
குற்றமற்ற நன்மையை விளைவிக்கக் கூடுமானால் பொய்யான சொல்லும்கூட வாய்மை என்று கூறத்தக்க இடத்தைப் பெற்றுவிடும்
© 2024 MMO Network Private Limited/ Nativenews, All Rights Reserved.
Powered by Hocalwire
-
Home
-
Menu