என்னது..ரூ.5கோடி மதிப்புள்ள காரை மண்ணில் புதைச்சிட்டாரா..? ஆச்சர்யம்தான்..!

பிரேசில் நாட்டைச் சேர்ந்த ஒரு பணக்காரர் பல கோடிமதிப்புள்ள அவரது காரை மண்ணில் புதைக்கப்போவதாக அறிவித்தார்.

Update: 2022-01-10 10:38 GMT

புதைக்கத் தயாராக உள்ள கார். அருகில் பிரேசில் பணக்காரர் சிக்வின்ஹோ ஸ்கார்பா.

பிரேசில் நாட்டின் மிகப்பெரிய பணக்காரர் மட்டுமல்லாமல் சக்திவாய்ந்த மனிதர்களில் ஒருவர் தான் சிக்வின்ஹோ ஸ்கார்பா. இவர் திடீரென தனது மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் ரூ.5கோடி) மதிப்புமிக்க பென்ட்லி காரை மண்ணில் புதைக்கப்போவதாக கூறினார். அவர் அவ்வாறு அறிவித்தபோது உலகமே திகைத்தது. என்ன ஒரு பைத்தியக்காரத்தனம் என்று சிலர் குறைகூறத் தொடங்கிவிட்டனர்.

இவரது அறிவிப்பு பல ஊடகங்களின் கவனத்தை ஈர்த்தது. என்ன ஒரு எதிர்மறையான சிந்தனை. பணம் இருக்கும் திமிரா என்றும் கூறத்தொடங்கிவிட்டனர். மதிப்புமிக்க ஒரு வாகனத்தை அழிப்பதை கடுமையாக விமர்சித்தனர்.  உங்களுக்கு இந்த உயர்ந்த கார் வேண்டாம் என்றால் நீங்கள் ஏன் நன்கொடையாக கொடுக்கக் கூடாது? என்று கேட்டனர். ஆனால், அதற்கெல்லாம் அவர் பதில் சொல்லவோ அல்லது அவரது செயலில் இருந்து பின் வாங்கவோ இல்லை. காரை புதைப்பதற்கான குழியும் தயாராகிவிட்டது.

அவரது 'பென்ட்லி காரை' குழிக்குள் இறக்கி மூடுவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, 'எனது காரை நான் புதைக்க மாட்டேன்.' என்றாரே பார்க்கலாம். 'என்னப்பா இவர் குழப்புகிறார்' என்று கூடியிருந்த எல்லோரும் ஆச்சர்யமாக பார்த்து நின்றனர். அப்போது அவர் சொன்ன விஷயம்தான் எல்லோரது மனதையும் தொட்டது.

அவர் சொன்னது இதுதான். 'நான் நடத்திய நாடகத்தின் கிளைமாக்ஸ் இதுதான். எனது உண்மையான நோக்கம் உறுப்பு தானத்துக்கு விழிப்புணர்வை ஏற்படுத்துவதே. "ஒரு மில்லியன் டாலர் மதிப்புள்ள எனது பென்ட்லி காரை நான் புதைப்பதை மக்கள் கண்டிக்கிறார்கள். ஆனால், உண்மையில் பெரும்பாலான மக்கள் எனது காரை விட மதிப்புமிக்க உடல் உறுப்புகளை புதைக்கிறார்கள்." என்று ஸ்கார்பா கூறினார்.

ஒரு விழாவில் பேசிய அவர் 'இதயம், கல்லீரல், நுரையீரல், கண்கள், சிறுநீரகம் என்று பயன்படும் உடல் உறுப்புகளை புதைக்கிறார்கள். இது பலருக்கும் பயன்படக்கூடியது. பல பேர் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக காத்திருக்கிறார்கள். இந்த உறுப்பு தானம் மூலமாக பல உயிர்களைக் காப்பாற்றலாமே. ஆரோக்கியமான உறுப்புகளை என் புதைக்க வேண்டும்? பயன்படச் செய்யலாமே? என்று பேசினார். அவரது பேச்சுக்கு அரங்கமே கைத்தட்டி ஆர்ப்பரித்தது.

ஒரு காரை வைத்து இப்படி ஒரு விழிப்புணர்வை செய்துவிட்டார் என்று அவரை பலரும் பாராட்டினர். நல்லதுதானே செய்திருக்கார். நாமும் வாழ்த்துவோம்.

Tags:    

Similar News