அமெரிக்காவிற்கு எதிராக அணி திரளும் ரஷ்யா, சீனா, ஈரான் நாடுகள்

உக்ரைன் போரை தொடர்ந்து அமெரிக்காவிற்கு எதிராக ரஷ்யா, சீனா, ஈரான் ஆகிய நாடுகள் ஒன்று சேர தொடங்கி உள்ளன.

Update: 2024-05-05 11:46 GMT

தற்போது நடக்கும் உக்ரைன்-ரஷ்யா போருக்கு முக்கிய காரணம் அமெரிக்காவின் நேட்டோ படைதான். இந்நிலையில் இதற்கு மாற்றாக மற்றொரு அமைப்பை உருவாக்க ரஷ்யா-சீனா-ஈரான் என மூன்று நாடுகளும் கை கோர்த்துள்ளன.

சோவியத் காலத்தில் அதற்கு போட்டியாக நேட்டோ உருவாக்கப்பட்டது. ஆனால் சோவியத் உடைந்து 30 ஆண்டுகளுக்கு மேலாகியும் கூட இன்னமும் நேட்டோ விரிவடைந்து கொண்டே இருக்கிறது. இதுதான் ரஷ்யா-உக்ரைன் போருக்கான தொடக்கப் புள்ளி. கொஞ்சம் கொஞ்சமாக கிழக்கு நோக்கி தனது ஆதிக்கத்தை விரிவாக்கிக் கொண்டே வந்த அமெரிக்காவின் நேட்டோ கடைசியாக உக்ரைனுக்கு வந்து நின்றது. உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி அமெரிக்க ஆதரவாளர்.

அப்புறம் என்ன, உள்ளேன் அய்யா என்று சொல்லி நேட்டோவுக்கு சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்றார். உக்ரைன் ரஷ்யாவுக்கு பக்கத்தில் உள்ள நாடு. ஏற்கெனவே ரஷ்யாவுக்கும் அமெரிக்காவும் ஏழரை சனி. இப்படி இருக்கும்போது உக்ரைன் நேட்டோவில் இணைந்துவிட்டால் அமெரிக்க படைகள் நேரடியாக ரஷ்ய எல்லையில் குவிக்கப்படும். இது பெரும் அச்சுறுத்தல். எனவே ரஷ்யா போரை அறிவித்தது. கடந்த 2022ம் ஆண்டு பிப்ரவரியில் இந்த போர் தொடங்கியது. 2 வாரங்கள்தான் போர் நீடிக்கும் என்று ரஷ்யா சொன்னது. ஆனால், அமெரிக்கா கொடுத்த ஆயுத உதவியால் 2 ஆண்டுகள் கடந்து இப்போதுவரை உக்ரைன்-ரஷ்யா போர் நீடித்து வருகிறது. இதுவரை ரூ.16 ஆயிரம் கோடி அளவுக்கு மனிதாபிமான உதவியாகவும், ரூ.24 ஆயிரம் கோடி வளர்ச்சி நிதி என்கிற பெயரிலும், ரூ.1.9 லட்சம் கோடி நேரடி உதவியாகவும் அமெரிக்கா உக்ரைனுக்கு வழங்கியிருக்கிறது.

இந்த நிதி எவ்வளவு பெரியதெனில், தமிழ்நாட்டில் உள்ள 7 கோடிக்கும் அதிகமான மக்களுக்கு கடந்த ஆண்டு போடப்பட்ட பட்ஜெட் தொகை ரூ.34,540 கோடிதான். அப்படியெனில் உக்ரைன் எவ்வளவு பெற்றிருக்கிறது என்பதை கற்பனை செய்து பாருங்கள்.

இதை அமெரிக்கா தனது https://www.usaid.gov/ukraine அதிகாரப்பூர்வ தளத்தில் குறிப்பிட்டிருக்கிறது. இவ்வளவு நிதி கொடுத்ததன் விளைவாக, இப்போது வரை போர் நீடித்து வருகிறது. இப்படி இருக்கும் பட்சத்தில் ரஷ்யா-உக்ரைன் போரை சீனா தூண்டி விடுவதாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் ஆண்டனி பிளிங்கன் குற்றம் சாடியிருந்தார். அதாவது ரஷ்யாவுக்கு சீனா உதவி செய்வதாகவும் அதன் மூலம் போர் தொடர்ந்து வருவதாகவும் பிளிங்கன் கூறியிருக்கிறார். அமெரிக்காவே சொல்லிடுச்சு.. அப்புறம் என்ன? மற்ற எல்லா ஐரோப்பிய நாடுகளும் பிளிங்கனின் கருத்துக்கு ஆமாம் சாமி போட தற்போது சீனா குறித்து விவாதங்கள் மேலெழுந்திருக்கின்றன.

இப்படியாக ஒட்டுமொத்த மேற்கு உலகமும் சீனா, ரஷ்யாவுக்கு எதிராக திருப்பி இருக்கும் நிலையில், தற்போது ரஷ்யா-சீனா-ஈரான் ஆகிய மூன்று நாடுகள் முக்கிய பணியில் இறங்கியுள்ளன. அதாவது நேட்டோ எனும் அமைப்பு மூலம் எப்படி அமெரிக்கா தனக்கு சாதகமான நாடுகளுடன் ராணுவ கூட்டணி வைத்திருக்கிறதோ, அதேபோல இந்த மூன்று நாடுகளும் புதிய ராணுவ கூட்டணியை உருவாக்க திட்டமிட்டிருக்கின்றன. இதனை பிரிட்டன் உளவுத்துறையான எம்ஐ15 உறுதி செய்திருக்கிறது.

சீனாவுக்கு அமெரிக்கா தொடர்ந்து வர்த்தக நெருக்கடியை கொடுத்து வருகிறது. சீனாவின் பெரும்பாலான பொருட்கள் அமெரிக்காவிலும், அமெரிக்க ஆதரவு நாடுகளிலும் விற்க தடை செய்யப்பட்டிருக்கின்றன. குறிப்பாக இணையம் தொடர்பான சேவைகளை அமெரிக்க முடக்க முயன்று வருகிறது. அதேபோல டிக்டாக் செயலிலை முற்றிலுமாக முடக்க திட்டமிட்டிருக்கிறது அமெரிக்கா. ஈரான் விவகாரத்தில் வழக்கம் போல அமெரிக்காவும், ஐரோப்பிய நாடுகளும் ஒரே அணியில் நிற்கின்றன. எனவே இந்த மூன்று நாடுகளும் சேர்ந்து புதிய ராணுவ கூட்டணியை உருவாக்க முயன்றுள்ளன.

Tags:    

Similar News