வெளிநாட்டில் வேலை…. ரூ.4.50 லட்சம் அபேஸ், நர்சிடம் மோசடி

Online Fraud - வெளிநாட்டில் வேலைவாய்ப்பு பெற்று தருவதாக நர்சிடம் ரூ.4.50 லட்சம் மோசடி செய்த பணத்தை மீட்டு தரக்கோரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

Update: 2022-07-02 06:56 GMT

பைல் படம்.

Online Fraud -திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தாலுகா கீழ்வில்லிவல்லம் கிராமத்தில் திவ்யா பிரவினா என்பவர் வசித்து வருகிறார். இவர் திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார்.

அதில், நான் பிஎஸ்சி நர்சிங் படித்துவிட்டு சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நர்சுசாக பணியாற்றி வருகிறேன். அதனை தொடர்ந்து கடந்த 2019 ஆம் ஆண்டு வேலை வாய்ப்பு குறித்து தனியார் வேலை வாய்ப்பு நிறுவனத்தில் பதிவு செய்திருந்தேன். அந்த ஆண்டு ஜூன் மாதம் ஈமெயில் முகவரி மூலம் ஒரு நபர் தொடர்பு கொண்டார். அப்போது அவர் யுனைடெட் ஸ்டேட்சின் வான்வெளி விமானப்படையில் வேலை செய்வதாகவும் தனது மனைவியின் இடுப்பில் அடிபட்டுள்ளதாகவும் அவருக்கு உதவி செய்ய நர்ஸ் தேவைப்படுகிறது என்று கூறினார்.

மேலும் இங்கிலாந்திற்கு பணிமாற்றம் செய்யப்பட உள்ளதால் அங்கு பணிக்கு வரவேண்டும் என்றால் பல நிபந்தனைகள், கட்டுப்பாட்டுகள் உள்ளது என்று கூறினார். அதற்கு பல அனுமதி சான்றிதழ்கள் தேவைப்படும் என்றும் அந்த சான்றிதழை வாங்குவதற்கு அனுமதி பெற ரூ.4.50 லட்சம் செலவாகும் என்று ஈமெயிலில் அனுப்பினார்.

நானும் அந்த தொகை அவருக்கு கூகுள் பே மூலம் மொத்தமாக அனுப்பாமல் பணம் கிடைக்கும் நேரத்தில் குறிப்பிட்ட தொகையாக அனுப்பி வைத்தேன். அந்த நபரும் அவரது வக்கீல் என்று பேசிய நபரும் அளித்த நம்பிக்கையின் பேரில் பணத்தை பரிமாற்றம் செய்தேன். ஆனால் கடந்த அக்டோபர் மாதம் வரை தொடர்பு இருந்தவர்கள் அதன் பிறகு தொடர்பை துண்டித்தனர். என்னை நம்ப வைத்து வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக கூறி 4.50 லட்சம் ஏமாற்றி விட்டார்கள். எனவே என்னை ஏமாற்றி அவர்களை கண்டுபிடித்து, பணத்தை மீட்டு தர வேண்டும் என்று அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மனுவை போலீசார் ஏற்றுக்கொண்டு நர்ஸ் அனுப்பியதாக கூறப்படும் பண பரிவர்த்தனை பற்றிய விவரங்கள், வங்கி கணக்குகள் ஆகியவற்றை பார்வையிட்டு விசாரணை நடத்தி வருகின்றனர்.


அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News