திருவண்ணாமலையில் தையல் தொழிலாளி வெட்டிக்கொலை: 4 பேர் கைது

திருவண்ணாமலையில் தையல்கடைக்காரர் கொலையில் 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2023-01-12 01:57 GMT

பைல் படம்.

திருவண்ணாமலையில் கடந்த ஏழாம் தேதி இரவு மர்ம நபர்களால் டெய்லர் ஆறுமுகம் வெட்டி கொலை செய்யப்பட்டார் இந்த கொலை வழக்கில் கொலையாளிகள் நான்கு பேரை திருவண்ணாமலை போலீசார் அதிரடியாக கைது செய்துள்ளனர்.

ஆறுமுகம் தையல் தொழில் மட்டுமின்றி பைனான்ஸ் மற்றும் ரியஸ் எஸ்டேட் தொழிலும் செய்து வந்து உள்ளார். கடந்த 7-ந் தேதி இரவு சுமார் 11 மணியளவில் ஆறுமுகம் மோட்டார் சைக்கிளில் திருவண்ணாமலையில் இருந்து நல்லவன்பாளையம் நோக்கி சென்று கொண்டிருந்தார். அப்போது தாமரை நகரில் மோட்டார் சைக்கிளில் ஹெல்மெட் அணிந்த படி பின் தொடர்ந்து வந்த 3 மர்ம நபர்கள் ஆறுமுகத்தை வழிமறித்து திடீரென வெட்டி கொலை செய்தனர்.

இதுகுறித்து, திருவண்ணாமலை நகர போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வந்தனா். டிஎஸ்பி குணசேகரன் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு இன்ஸ்பெக்டர் சுப்ரமணியம் மற்றும் போலீஸ்கார் விசாரணை மேற்கொண்டு வந்தனர். விசாரணையில் பணம் கொடுக்கல், வாங்கல் விவகாரத்தில் ஆறுமுகம் கொலை செய்யப்பட்டது தெரியவந்தது.

இது குறித்து போலீஸ் தரப்பில் கூறியதாவது:

வரகூர் கிராமத்தை சேர்ந்த பரந்தாமன் (40) என்பவருக்கு ஆறுமுகம் கடந்த சில மாதங்களுக்கு முன்பு ரூ.3 லட்சத்து 50 ஆயிரம் கொடுத்துள்ளார். கடன் வாங்கிய பரந்தாமன் பணத்தை திருப்பி கொடுக்காமல் காலதாமதம் செய்து வந்ததாக தெரிகிறது. இதனால் ஆறுமுகத்திற்கும், பரந்தாமனுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு விரோதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரம் அடைந்த பரந்தாமன், ஆறுமுகத்தை கொலை செய்ய திட்டமிட்டார்.

அவருக்கு தெரிந்த கலசப்பாக்கம் தாலுகா சாலையனூர் கிராமத்தை சேர்ந்த பாரதி (22), திருவண்ணாமலை கரையான் செட்டி தெரு பகுதியைச் சேர்ந்த தமிழரசன் (20), திருவண்ணாமலை குளத்து மேட்டு தெரு எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்த ஸ்ரீகாந்த் (20) ஆகியோருக்கு பணம் கொடுத்து தையல் கடைக்காரர் ஆறுமுகத்தை கொலை செய்ய சதித்திட்டம் திட்டினார்.

அதனைத் தொடர்ந்து பாரதி, தமிழரசன், ஸ்ரீகாந்த் ஆகியோர் அவர்களது கூட்டாளிகளுடன் இணைந்து கடந்த 7-ந் தேதி இரவு ஆறுமுகத்தை வெட்டி கொலை செய்தனர் என்பது போலீஸ் விசாரணை தெரியவந்தது.

அதைத் தொடர்ந்து நேற்று பரந்தாமன், பாரதி, தமிழரசன், ஸ்ரீகாந்த் ஆகிய 4 பேரையும் திருவண்ணாமலை டவுன் போலீசார் கைது செய்தனர். மேலும் கொலை செய்த கூலிப்படையை சேர்ந்த மூன்று பேரின் கூட்டாளிகளையும் போலீசார் தேடி வருகின்றனர்.

Tags:    

Similar News