கட்சி இடத்தை மீட்ட திருவண்ணாமலை நகர காங்கிரஸ் கட்சியினர்

திருவண்ணாமலையில் சுமார் 60 ஆண்டுகள் கழித்து நகர காங்கிரஸ் கமிட்டியினர் கட்சி இடத்தை மீட்டனர்.

Update: 2023-01-25 09:23 GMT

கட்சி இடம் மீட்கப்பட்டதையொட்டி இனிப்புகள் வழங்கி காங்கிரஸ் கட்சியினர் கொண்டாடினர்.

திருவண்ணாமலையில் ௬௦ ஆண்டுகள் கழித்து கட்சி இடம் மீட்கப்பட்டதையொட்டி காங்கிரஸ் கட்சியினர் கொடியேற்றி இனிப்பு வழங்கி கொண்டாடினார்கள்.

காங்கிரஸ் கட்சியில் பிளவு

திருவண்ணாமலை நகராட்சிக்கு உட்பட்ட வார்டு எண் 3 -ல்  கோபுரம் தெருவில் 1 ஏக்கர் 40 சென்ட் நிலத்தை 1960 ஆம் ஆண்டு அண்ணாமலைப்பிள்ளை என்பவர் திருவண்ணாமலை நகர காங்கிரஸ் கமிட்டிக்கு தானமாக வழங்கியுள்ளார். பின்னர் காங்கிரஸ் கட்சி பிளவு ஏற்பட்டு ஐக்கிய ஜனதா தளம் என்ற கட்சி உருவானது.

அதனைத் தொடர்ந்து மாவட்ட ஐக்கிய ஜனதா தளம் என்ற பெயரில் பட்டா பெயர் மாற்றம் செய்யப்பட்டு அந்த இடத்தில் ஐக்கிய ஜனதா தளம் என்ற பெயர் பலகை வைக்கப்பட்டது.

மேலும் ஐக்கிய ஜனதா தளத்தில் இருந்தவர்கள் அந்த இடத்தை பல்வேறு நபர்களுக்கு மேல் வாடகைக்கு விட்டு வாடகை வசூல் செய்து வந்துள்ளனர்.

இந்நிலையில் திருவண்ணாமலை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவரான வெற்றிச்செல்வன் என்பவர் இந்த இடம் நகர காங்கிரஸ் கமிட்டிக்கு சொந்தமானது. இதனை நகர காங்கிரஸ் கமிட்டி பெயரில் பட்டா பெயர் மாற்றி தர வேண்டும் என வருவாய்த்துறையினரிடம் மனு கொடுத்திருந்தார்.

கடந்த 7 ஆண்டு காலமாக வட்டாட்சியர் அலுவலகத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

இடம் மீட்பு

அனைத்து தரப்பு விசாரணைகளையும் மேற்கொண்டு ஆவணங்களை சரிபார்த்து இந்த இடம் மாவட்ட ஐக்கிய ஜனதா தளத்திற்கு சொந்தமானது என்பதற்கு எந்த விதமான பத்திர ஆவணங்களும் இல்லாததால் ஐக்கிய ஜனதா தளம் என்ற பெயரில் கொடுக்கப்பட்டிருந்த பட்டாவை ரத்து செய்து வட்டாட்சியர் உத்தரவிட்டார். 

இதனைத் தொடர்ந்து  திருவண்ணாமலை நகர காங்கிரஸ் கமிட்டி தலைவர் வெற்றிச்செல்வன் மற்றும் காங்கிரஸ் கட்சியின் சொத்து பாதுகாப்பு குழு தலைவர்கள் மற்றும் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் தொண்டர்கள் என 500 -க்கும் மேற்பட்டோர் ஒன்று கூடி ஐக்கிய ஜனதா தளம் என ஆக்கிரமித்து வைக்கப்பட்டிருந்த பெயர் பலகை உள்ளிட்டவற்றை அகற்றியதுடன், இங்கு வாடகைக்கு விடப்பட்டிருந்த கடைகளை மூடியும் காங்கிரஸ் கட்சியினர் தங்களுக்கு சொந்தமான இடத்தை மீட்டு கையகப்படுத்தினர்.

இனிப்பு வழங்கி கொண்டாட்டம்

மேலும், காங்கிரஸ் கட்சி சார்பில் அந்த இடத்தில் காங்கிரஸ் கட்சியின் கொடிக்கம்பம் அமைக்கப்பட்டது. கிட்டத்தட்ட 60 ஆண்டுகளுக்கு மேலாக ஆக்கிரமிப்பு பிடியில் இருந்து கட்சி இடம் மீட்கப்பட்டு உள்ளது. கட்சி இடத்தில் இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டதை கொண்டாடும் வகையில் விழா எடுத்தனர். திருவண்ணாமலை மாவட்ட காங்கிரஸ்  தலைவர் செங்கம் குமார் காங்கிரஸ் கட்சி கொடியேற்றினார். இதனை தொடர்ந்து அங்கு வந்திருந்த  ஏராளமான கட்சி தொண்டர்கள் பட்டாசு வெடித்தும் இனிப்பு வழங்கியும் கொண்டாடினர்.

Tags:    

Similar News