தென்பெண்ணை ஆற்றில் நாளை அண்ணாமலையார் தீர்த்தவாரி..!

மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் நாளை அண்ணாமலையார் தீர்த்தவாரி நடக்கிறது

Update: 2024-01-18 03:06 GMT

கிரிவலத்தின் போது பக்தர்களுக்கு அருள் பாலித்த அண்ணாமலையார்

மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் நாளை தீர்த்தவாரி நடக்கிறது. அதில், அண்ணாமலையார் அலங்கார ரூபத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

திருவண்ணாமலையில் அருள் தரும் அண்ணாமலையாருக்கு தென்பெண்ணை ஆறு, வடபெண்ணை எனப்படும் செய்யாறு மற்றும் கவுதம நதி ஆகியவற்றில் நடைபெறும் தீர்த்தவாரி தனிச்சிறப்பு மிக்கது. தீர்த்தவாரியின் நிகழ்வின்போது, சந்திரசேகரர் திருவடிவாக அண்ணாமலையார் தீர்த்தவாரியில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்புரிகிறார். அதன்படி, தை மாதம் 5ம் நாளன்று மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றிலும், ரதசப்தமி நாளில் கலசபாக்கம் செய்யாற்றிலும், மாசி மகத்தன்று பள்ளிகொண்டாப்பட்டு கவுதம நதியிலும் தீர்த்தவாரி நடைபெறுவது வழக்கம்.

அதன்படி, தை 5ம் நாளான நாளை கள்ளக்குறிச்சி மாவட்டம், மணலூர்பேட்டை பகுதியில் தென்பெண்ணை ஆற்றில் தீர்த்தவாரி விமரிசையாக நடக்கிறது. அதையொட்டி, நாளை காலை திருவண்ணாமலை கோயிலில் இருந்து அலங்கார ரூபத்தில் அண்ணாமலையார் வடிவான சந்திரசேகரர் எழுந்தருளி, தென்பெண்ணைக்கு புறப்பாடு நடைபெறும்.

அப்போது, திருவண்ணாமலையில் இருந்து மணலூர்பேட்டை செல்லும் சாலையின் வழிநெடுகிலும் உள்ள கிராமங்களில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் திரண்டிருந்து சுவாமிக்கு மண்டகபடி செலுத்த உள்ளனர். அதைத்தொடர்ந்து, தென்பெண்ணையாற்றில் சந்திரசேகரர் எழுந்தருள்கிறார். அப்போது, மணலூர்பேட்டை விநாயகர், மாரியம்மன், செல்லியம்மன், முத்துமாரியம்மன், சிவகாம சுந்தரி சமேத அகத்தீஸ்வரரும் சந்திரசேகரருடன் எழுந்தருள்வர். அதைத்தொடர்ந்து, மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் இருந்து நாளை மறுதினம் சந்திரசேகரர் புறப்பட்டு திருவண்ணாமலை திருக்கோயில் வந்தடைவார். அதையொட்டி, மணலூர்பேட்டை தென்பெண்ணை ஆற்றில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

கிரிவலம் சென்ற அண்ணாமலையார்

திருவண்ணாமலையில் திருவூடல் திருவிழா நிறைவாக அண்ணாமலையார் கிரிவலம் சென்று பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

அதையொட்டி, கிரிவலப்பாதை அமைந்துள்ள 14 கி.மீ. தூரமும் ஏராளமான பக்தர்கள் திரண்டிருந்து சுவாமிக்கு மண்டகப்படி செலுத்தி சுவாமியை வழிபட்டனர். இறைவனே மலை வடிவாக காட்சி தரும் தீபமலையை பவுர்ணமி நாட்களில் லட்சக்கணக்கான பக்தர்கள் வலம் வந்து வழிபடுவது வழக்கம்.

சிறப்பு மிக்க தீபமலையை அண்ணாமலையாரே கிரிவலம் செல்லும் நிகழ்வு ஆண்டுக்கு 2 முறை நடைபெறுவது குறிப்பிடத்தக்கதது. அதன்படி, கார்த்திகை தீபத்திருவிழா முடிந்த மறுதினமும், திருவூடல் திருவிழாவிலும் அண்ணாமலையார் கிரிவலம் வருவது தனிச்சிறப்பாகும். சுவாமி கிரிவலத்தின் நிறைவாக, அண்ணாமலையார் கோயிலில் அண்ணாமலையார் எழுந்தருளினார்..

அதைத்தொடர்ந்து, சுவாமிக்கும், அம்மனுக்கும் சிறப்பு வழிபாடுகள் நடந்தன. விழாவை முன்னிட்டு, அண்ணாமலையார் கோயிலில் நேற்று ஏராளமான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய திரண்டனர். எனவே, நீண்ட வரிசையில் காத்திருந்து தரிசனம் செய்தனர்.a

Tags:    

Similar News