கிரிவலப் பாதையில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றம்; கலெக்டர் ஆய்வு

திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார்.

Update: 2024-04-24 02:08 GMT

கிரிவல பாதையில் தூய்மை பணிகள் நடைபெற்று வருவதை ஆய்வு செய்து அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்ட கலெக்டர்

திருவண்ணாமலையில் சித்ரா பௌர்ணமியொட்டி நேற்று முன்தினம் இரவு முதல் இன்று அதிகாலை வரை லட்சக்கணக்கான பக்தர்கள் கிரிவலம் வந்தனர்.

சித்திரை மாத பெளா்ணமியையொட்டி, திருவண்ணாமலை கிரிவலப் பாதையில் பக்தா்களுக்குத் தேவையான பல்வேறு அடிப்படை வசதிகளை மாவட்ட நிா்வாகம், கோயில் நிா்வாகம், உள்ளாட்சி அமைப்புகள் இணைந்து செய்திருந்தன.

குப்பைகள் உடனுக்குடன் அகற்றம்

பக்தா்கள் சிரமம் இல்லாமல் நடந்து கிரிவலம் வர வசதியாக ஊரக வளா்ச்சித்துறை, நகராட்சி, நெடுஞ்சாலைத் துறை மூலம் 1,800-க்கும் மேற்பட்ட பணியாளா்களைக் கொண்டு சுழற்சி முறையில் குப்பைகள் உடனுக்குடன் அகற்றப்பட்டன. இதனால் கிரிவலம் செல்லும் பக்தர்கள் எந்த விதமான சிரமமும் இன்றி கிரிவலம் வந்தனர்.

மேலும் உடனுக்குடன் குப்பைகளை அகற்றிய துப்புரவு ஊழியர்களுக்கும், மற்றும் மாவட்ட நிர்வாகத்திற்கும் பாராட்டுகளை தெரிவித்தனர்.

இந்தப் பணியை மாவட்ட ஆட்சியா் பாஸ்கர பாண்டியன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்து துப்புரவு பணியாளர்களை பாராட்டி அவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக் கொண்டார் .

பிறகு, கிரிவலப் பாதையின் பல்வேறு இடங்களில் வழங்கப்பட்ட அன்னதானம் தரமானதாக செய்யப்பட்டு, முறையாக வழங்கப்படுகிறதா. என்பதை ஆட்சியா் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

அப்போது, தடை செய்யப்பட்ட நெகிழி, சில்வா் முலாம் பூசப்பட்ட பேப்பா் தட்டுகள், பேப்பா் டம்ளா்களை அன்னதானம் வழங்கப் பயன்படுத்தக்கூடாது என்று அவா் அறிவுரை வழங்கினாா்.

தொடர்ந்து அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள மருத்துவ முகாமினை நேரில் சென்று ஆய்வு செய்தார்.

வடக்கு மண்டல காவல்துறை தலைவர்

திருக்கோயில் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள காவல்துறை கட்டுப்பாட்டு அறையில் கண்காணிப்பு பணிகள் நடைபெற்று வருவதை வடக்கு மண்டல காவல்துறை தலைவர் நரேந்திரன் நாயர் மற்றும் மாவட்ட எஸ்பி கார்த்திகேயன் ஆகியோருடன் ஆட்சியர் நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

17 ஆட்டோக்களுக்கு அபராதம்

திருவண்ணாமலை நகரம், கிரிவலப் பாதையில் விதிகளை மீறி இயங்கிய 17 ஆட்டோக்கள் சிறைபிடிக்கப்பட்டு, ஆட்சியா் உத்தரவின் பேரில் அபராதம் விதிக்கப்பட்டது. அதிக கட்டணம் வசூலிப்பது, பிற மாவட்ட ஆட்டோக்கள் இயக்குவது போன்ற விதிமீறல்களை வட்டாரப் போக்குவரத்து அலுவலா் தலைமையிலான குழுவினா் திவிரமாக கண்காணித்தனா்.

இந்த ஆய்வின்போது மாவட்ட எஸ்பி கார்த்திகேயன், கூடுதல் ஆட்சியர் ரிஷப் ,மாவட்ட வருவாய் அலுவலர் பிரியதர்ஷினி, நகராட்சி ஆணையர் தட்சிணாமூர்த்தி, வருவாய் கோட்டாட்சியர் மந்தாகினி, உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள், வட்டாரப் போக்குவரத்து அலுவலர்கள் மற்றும் அரசு அலுவலர்கள் உடனிருந்தனர்.

Similar News