தேர்தல் பணியாற்றும் அலுவலா்களுக்கு 12 மையங்களில் முதற்கட்ட பயிற்சி

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளின் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு நடைபெற்றது

Update: 2024-03-25 01:36 GMT

தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி வகுப்பில்  பங்கேற்ற மாவட்ட ஆட்சியர். 

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் தொகுதிகளின் தேர்தல் பணியில் ஈடுபடும் வாக்குச்சாவடி அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு 12 மையங்களில் நடைபெற்றது.

திருவண்ணாமலை, ஆரணி மக்களவைத் இவ்விரு தொகுதிகளுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெறுகிறது. அன்றைய தினம் வாக்குப்பதிவு பணியில் ஈடுபடும் அனைத்து அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு மாவட்டத்தின் 12 இடங்களில் நடைபெற்றது. இந்த பயிற்சி வகுப்பில் 11,408 பேர் பங்கேற்றனர்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் 2,377 வாக்குச்சாவடி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. வாக்குப்பதிவின் போது வாக்குச்சாவடி அலுவலா்களாகப் பணிபுரியும் ஆசிரிய, ஆசிரியைகள் மற்றும் பிற துறை அலுவலா்களுக்கான முதல்கட்ட பயிற்சி வகுப்பு ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. 12 மையங்களில் நடைபெற்ற இந்தப் பயிற்சி வகுப்பில் 11,408 பேர் கலந்து கொண்டனா்.

பயிற்சி வகுப்பில், தேர்தல் அலுவலா்கள் தங்களது அஞ்சல் வாக்குகளை செலுத்தும் முறை, வாக்குச்சாவடி தலைமை அலுவலரின் பணி, வாக்குப்பதிவு இயந்திரங்களை கையாளும் முறை, வாக்குப்பதிவுக்கு முந்தைய நாள் வாக்குச்சாவடியில் மேற்கொள்ள வேண்டிய பணிகள், மாதிரி வாக்குப்பதிவு முறை, வாக்குப்பதிவு இயந்திரங்கள் பழுது ஏற்படும்போது மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து தேர்தல் பிரிவு அதிகாரிகள் விளக்கி கூறினர்.

மாவட்ட ஆட்சியா் ஆய்வு:

திருவண்ணாமலையை அடுத்த சோ.கீழ்நாச்சிப்பட்டு பகுதியில் உள்ள காந்திநகா் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, கலசப்பாக்கத்தை அடுத்த தென்பள்ளிப்பட்டு பகுதியில் உள்ள செழியன் மகளிா் கலை, அறிவியல் கல்லூரி ஆகிய மையங்களில் நடைபெற்ற பயிற்சி வகுப்பை மாவட்ட தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பாஸ்கர பாண்டியன் நேரில் பாா்வையிட்டு ஆய்வு செய்தாா்.

ஆய்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் கணேஷ்மூா்த்தி, திருவண்ணாமலை வருவாய்க் கோட்டாட்சியா் ஆா்.மந்தாகினி மற்றும் தோதல் அலுவலா்கள், பணியாளா்கள் உடனிருந்தனா். 

Similar News