மகளிர் விடுதிகள் முறையான அனுமதியுடன் செயல்பட கலெக்டர் வேண்டுகோள்

மகளிர் விடுதிகள் அரசின் முறையான அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும் என திருவண்ணாமலை கலெக்டர் கூறி உள்ளார்.

Update: 2022-08-07 06:43 GMT

திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் முருகேஷ்.

பள்ளி, கல்லூரி மகளிர் விடுதிகள் மற்றும் குழந்தைகள் காப்பகங்கள் அரசின் முறையான அனுமதி பெற்றிருந்தால் மட்டுமே செயல்பட அனுமதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் முருகேஷ் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் 

தனியார் கல்வி நிறுவனங்கள், அமைப்புகள், தொண்டு நிறுவனங்கள் மற்றும் பிற அமைப்புகளால் நடத்தப்பட்டு வரும் அனைத்து பள்ளி, கல்லூரி, மகளிர் தங்கும் விடுதிகள் மற்றும் குழந்தைகள் காப்பகம் ஆகியவை 2014-ம் ஆண்டு பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கான தங்கும் விடுதிகள் நடத்துவதற்கான ஒழுங்குமுறை விடுதிகள் விதியின் கீழ் அரசின் முறையான உரிமம் பெற்று மட்டுமே செயல்பட வேண்டும்.

திருவண்ணாமலை மாவட்டத்தில் செயல்பட்டு வரும் சில தனியார் பள்ளி, கல்லூரி, மகளிர் தங்கும் விடுதிகள் மற்றும் குழந்தைகள் காப்பகம் ஆகியவை மேற்தெரிவித்த விதியின் கீழ் அரசின் உரிமம் பெற்றிருந்தால் மட்டுமே தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்படும்.

இதுநாள் வரை அரசின் அனுமதி பெறாத பள்ளி, கல்லூரி, மகளிர் தங்கும் விடுதிகள் மற்றும் குழந்தைகள் காப்பகம் ஆகியவை http://tnswp.com என்ற இணைய தளம் வழியாக விண்ணப்பித்த வருகிற 31-ந் தேதிக்குள் (புதன்கிழமை) அரசிடம் இருந்து உரிமம் பெற வேண்டும் என்று இதன் மூலம் அறிவுறுத்தப்படுகிறது. 

மேலும் இணையதள முகவரியில் விண்ணப்பம் அளிப்பது குறித்து விரிவான வழிகாட்டு நெறிமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இணைய தளத்தில் விண்ணப்பம் பதிவு செய்தல் அல்லது உரிமம் பெறுதலில் சந்தேகம் அல்லது உதவி ஏதேனும் தேவைப்படுபவர்கள் திருவண்ணாமலை மாவட்ட சமூக நல அலுவலரை தொடர்பு கொள்ளலாம்.

வருகிற 31-ந் தேதிக்குள் உரிமம் பெறாத தனியார் பள்ளி, கல்லூரி, மகளிர் தங்கும் விடுதிகள் மற்றும் குழந்தைகள் காப்பகம் ஆகியவை தொடர்ந்து செயல்பட அனுமதி அளிக்கப்படாது. மேலும் எவ்வித முன்னறிவிப்புமின்றி சீல் வைக்கப்படும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News