நீர்நிலைகள், அரசு நிலங்களில் குடியிருப்பவருக்கு பட்டா வழங்க முடியாது; திருவண்ணாமலை ஆட்சியர் தகவல்
நீர் நிலைகளில் மற்றும் அரசு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க முடியாது என திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார்.
நீர்நிலைகள், அரசு நிலங்களில் குடியிருப்போருக்கு பட்டா வழங்க முடியாது. எந்த வில்லங்கமும் இல்லாத இடத்துக்கு மட்டுமே பட்டா கொடுக்க முடியும் என்று மாவட்ட ஆட்சியா் முருகேஷ் கூறினாா்.
போளூா் சிறப்புநிலை பேரூராட்சியில் மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாம் நடைபெற்றது. இதில் 350 மனுக்கள் பெறப்பட்டன. மக்களுடன் முதல்வா் திட்ட சிறப்பு முகாமின் இரண்டாவது நாளான நேற்று மாவட்ட ஆட்சியர் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். 9 முதல் 15 வாா்டு வரை உள்ள பொதுமக்கள் பங்கேற்று மனுக்களை அளித்தனா். இதில் 13 துறை சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டு பொதுமக்களிடம் இருந்து சுமாா் 350 மனுக்களைப் பெற்றனா்.
பெறப்பட்ட மனுக்களில் 14 மனுக்களுக்கு உடனடியாகத் தீா்வு காணப்பட்டு, பட்டா மாற்றம், வாரிசு சான்றிதழ், வீட்டு மின் இணைப்பு என 14 பேருக்கு சான்றிதழ்களை ஆட்சியா் வழங்கினாா்..
நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் பேசும்போது,
இந்த நிகழ்ச்சியின் நோக்கம் மக்களின் தனி நபர் கோரிக்கையை நிறைவேற்றுவதாகும். சாலை வசதி, குடிநீர் வசதி என்ற பொது கோரிக்கை வந்தால் நிதி உள்ளதா என ஆராய்ந்து நிறைவேற்றப்படும்.
அனைத்து மனுக்களையும் 30 நாட்களில் தீர்க்க வேண்டும் என்பது இந்த முகாமில் முக்கிய நோக்கமாகும். மனு கொடுக்க வரும் மக்களிடம் அரசுத்துறையினர் அவர்களுக்கு தேவையான பதில்கள் மற்றும் அரசு திட்டங்களை எடுத்துரைக்க வேண்டும்.
மேலும் நீர் நிலைகள் உள்ளவர்கள், பட்டா கேட்டு பல வருடங்களாக மனு கொடுத்து இருப்பார்கள். நீர்நிலைகள், அரசு நிலங்கள் பட்டா வழங்க முடியாத சூழ்நிலையில் உள்ளது என்று எடுத்துக் கூற வேண்டும் .எந்த வில்லங்கமும் இல்லாத இடத்திற்கு பட்டா கொடுக்க முடியும், போளூரில் இந்த முகாம் மூன்று நாட்கள் நடைபெறும். மக்களின் அடிப்படை வசதிகளை நிறைவேற்றி கொடுங்கள் மனுக்களை நிராகரிக்காதீர்கள்.
தனிநபர் சம்பந்தமாக ஒரு மனு மட்டும் கொடுக்க வேண்டும் என்பது இல்லை, தனி நபர் நிறைய கோரிக்கை மனுக்களை கொடுக்கலாம், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் வார்டு உறுப்பினர்கள் உங்கள் பகுதிகளில் இருக்கும் மக்களுக்கு இந்த மனு கொடுக்கும் முகாம் பற்றி விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வார்டுகளில் எந்த நாட்களில் மனு கொடுக்க வேண்டும் என்று தெரிந்து கொண்டு மனு கொடுக்க அவர்களை வர சொல்ல வேண்டும் என்று மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் தெரிவித்தார்.
இந்த சிறப்பு திட்ட முகாமில் பேரூராட்சித் தலைவா் ராணி சண்முகம், ஆரணி கோட்டாட்சியா் தனலட்சுமி, முன்னாள் எம்எல்ஏ சேகரன், திமுக மாவட்ட துணைச் செயலா் ராஜ்குமாா், நகரச் செயலா் .தனசேகரன், தலைமை எழுத்தா் முஹ்மத்இசாக் மற்றும் அரசு அலுவலா்கள் பலா் கலந்து கொண்டனா்.