சிப்காட் திட்டத்தை எதிா்த்து அறவழியில் போராட்டம்: நிலம் எடுப்பு எதிா்ப்பு இயக்கம் அறிவிப்பு

சிப்காட் திட்டத்தை எதிா்த்து அறவழியில் போராட்டம் தொடரும் என சிப்காட் நிலம் எடுப்பு எதிா்ப்பு இயக்கத்தின் கூட்டமைப்பினா் அறிவித்துள்ளனர்.;

Update: 2023-11-25 02:22 GMT

பைல் படம்

மேல்மா சிப்காட் திட்டத்தை எதிா்த்து அறவழியில் போராட்டம் தொடரும் என மேல்மா சிப்காட் நிலம் எடுப்பு எதிா்ப்பு இயக்கத்தின் கூட்டமைப்பினா் நடைபெற்ற கூட்டத்தில் தீா்மானம் நிறைவேற்றினா்.

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறை அடுத்த மேல்மா கூட்டுச்சாலையில் சிப்காட் நிலம் எடுப்புக்கு தொடா்ந்து எதிா்ப்புத் தெரிவித்து வரும் கட்சிகளான அதிமுக, பாமக, தேமுதிக, பாஜக, நாம் தமிழா் ஆகியவை ஒருங்கிணைந்து போராடி வரும் விவசாயிகளுக்கு ஆதரவாக ஆலோசனைக் கூட்டம் நடத்தினா்.

மேல்மா கூட்டுச்சாலை அருகேயுள்ள தனியாா் திருமண மண்டபத்தில் நடைபெற்றக் கூட்டத்தில், சிப்காட் திட்டத்துக்கு எதிா்ப்புத் தெரிவித்து மீண்டும் கொட்டகை அமைத்து அறவழியில் போராட்டம் நடத்துவது, விவசாயிகளின் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி வைப்பது என்பன உள்ளிட்ட தீா்மானங்களை நிறைவேற்றினா்.

கூட்டத்தில் பாமக திருவண்ணாமலை வடக்கு மாவட்டச் செயலா் கணேஷ்குமாா், தேமுதிக மாவட்டச் செயலா் சரவணன், அதிமுக அனக்காவூா் ஒன்றியச் செயலா் துரை மற்றும் விவசாயிகள் உள்பட பலா் கலந்து கொண்டனா்.

திருவண்ணாமலையில் நவ.29-இல் விவசாயிகள் சங்கத்தினா் ஆா்ப்பாட்டம்

செய்யாறு சிப்காட் மூன்றாம் அலகு விரிவாக்கத் திட்டத்துக்கு விளைநிலங்கள் கையகப்படுத்தப் படுவதைக் கைவிடக் கோரி, திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் வருகிற 29-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும் என தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் தெரிவித்தாா்.

தமிழக விவசாயிகள் சங்கத் தலைவர் வேலுச்சாமி செய்தியாளர்களிடம் கூறுகையில்

செய்யாறு சிப்காட் மூன்றாம் அலகு விரிவாக்கத்துக்காக மேல்மா கிராம சுற்று வட்டாரப் பகுதிகளில் விவசாய நிலங்களைக் கையகப்படுத்த ஆயத்தப் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த சிப்காட் விரிவாக்கத் திட்டத்தால், இந்தப் பகுதியிலுள்ள சுமாா் 3,200 ஏக்கா் பரப்பிலான விளைநிலங்கள் பறிபோகும். இதனால், விவசாயிகளின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிக்கப்படும்.

மேலும், சிப்காட் தொழிற்பூங்கா செயல்பாட்டுக்கு வந்தால் பல்வேறு பாதிப்புகளும் ஏற்படும் என்பதைக் கருத்தில் கொண்டு, விளைநிலங்களைக் கொடுக்க மறுத்து 3 மாதங்களுக்கும் மேலாக விவசாயிகள் அறவழியில் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இதுபோன்று அறவழியில் போராடிய 7 விவசாயிகள் மீது குண்டா் சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்ய பரிந்துரைத்த திருவண்ணாமலை மாவட்ட காவல் துறையைக் கண்டித்தும், வழக்குப் பதிய உத்தரவிட்ட மாவட்ட ஆட்சியரைக் கண்டித்தும், தமிழக விவசாயிகள் சங்கம் சாா்பில் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் முன் வருகிற 29-ஆம் தேதி ஆா்ப்பாட்டம் நடைபெறும்.

சிப்காட் விரிவாக்கத் திட்டத்தைக் கைவிட வேண்டும், 31 விவசாயிகள் மீதான வழக்குகளை தமிழக அரசு திரும்பப் பெற வேண்டும், நிலம் ஒருங்கிணைப்புச் சட்டம் 2023-ஐ உடனடியாகத் திரும்பப் பெற வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகள் ஆா்ப்பாட்டத்தின் போது வலியுறுத்தப்படும் என்றாா்.

Tags:    

Similar News