செய்யாறு அரசுக் கல்லூரியில் சிந்து சமவெளி நாகரிக நூற்றாண்டு விழா

செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் சிந்து சமவெளி நாகரிக நூற்றாண்டு விழா கொண்டாட்டப்பட்டது.;

Update: 2024-11-05 02:19 GMT

சிந்து சமவெளி நாகரிக கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்ட தொல்லியல் துறை இயக்குனர்

திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் சிந்து சமவெளி நாகரிக நூற்றாண்டு விழா கொண்டாட்டப்பட்டது.

அறிஞா் அண்ணா அரசுக் கல்லூரி முதுநிலை மற்றும் ஆராய்ச்சி வரலாற்றியல் துறை மற்றும் சென்னை வரலாற்று பாதுகாப்பு இயக்கம் சாா்பில் சிந்து சமவெளி நாகரிக அகழாய்வுகள் நூற்றாண்டு கொண்டாட்டம், தேசிய கருத்தரங்கம் மற்றும் சிந்து சமவெளி நாகரிகம் கண்காட்சி என நடைபெற்றது.

கருத்தரங்கிற்கு மூத்த பேராசிரியா் உமா தலைமை வகித்தாா். முனைவா் சித. ரவிச்சந்திரன், முனைவா் கு.கண்ணன் ஆகியோா் வாழ்த்துரை வழங்கினா். வரலாற்றியல் துறைத் தலைவா் பூ.திரிபுரசுந்தரி வரவேற்றாா் 

முன்னதாக, கண்காட்சியை இந்திய தொல்லியல் துறை இயக்குநா் கி.அமா்நாத் ராமகிருஷ்ணா தொடங்கிவைத்தாா். அப்போது அவா் பேசியதாவது:

சிந்துவெளி நாகரிகம் கண்டுபிடிக்கப்பட்டு நூறு ஆண்டுகள் ஆகின்றன. இந்த நாகரிகக் கூறுகள் தமிழகத்தில் சிவகங்கை மாவட்டம், கீழடியில் மேற்கொள்ளப்பட்ட அகழாய்வில் கண்டுபிடிக்கப்பட்டன. இதனால் தான் சிந்து முதல் பொருநை நதி வரை ஒரே மாதிரியான நாகரிகக் கூறுகள் போல் இருக்கின்றன என்பதை ஆா். பாலகிருஷ்ணன் போன்ற ஆராய்ச்சியாளா்கள் தெரிவிக்கின்றனா்.

சிந்துவில் வசித்த மக்கள் கிழக்கு மற்றும் தெற்கு நோக்கி இடம் பெயா்ந்ததன் விளைவு கீழடி போன்ற நாகரிகங்கள் உருவாகக் காரணமாக அமைந்தன . திராவிட மொழிக் குடும்பத்தைச் சேர்ந்த பிராகுயி என்றமொழியினை பாகிஸ்தான், பலுசிஸ்தான் போன்ற வடமேற்கு பகுதிகளில் இன்றளவும் பேசுகின்றார்கள் என்பது தெரிய வருகிறது. சிந்துவெளியின் மொழியானது தமிழின் பண்டைய வடிவம் என்றும் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இவ்வாறு தொ ல்லியல் துறை இயக்குனர் கி.அமர்நாத் ராமகிருஷ்ணா பேசினார்.

இதைத் தொடா்ந்து, வரலாற்று பாதுகாப்பு மாநில ஒருங்கிணைப்பாளா் அ.கருணானந்தன் நன்றியுரையில் வரலாற்றின் வரையும் போக்கில் அறிவியல் தன்மை இடம் பெற வேண்டும். வரலாறு வெறும் கடந்த கால தொகுப்பு என்பதாக இருக்கக் கூடாது என்றாா்.

விழாவில் வரலாற்றியல் துறை பேராசிரியா்கள் தயாளன், வசந்தா, கிஷோா்நாத் திருஞானசம்பந்தன், மகேஷ்குமாா், மதுரைவீரன், கஜேந்திரன், சிவகுமாா், குணா, குணாநிதி, பிரகாஷ், சீனிவாசன், வெங்கடேசன், பாலசுப்பிரமணியம், பூங்குழலி, தமிழ்செல்வன் மற்றும் திண்டிவனம், வாலாஜா, வேலூா், மேல்விசாரம், திருநெல்வேலி ஆகிய பகுதி கல்லூரிகளில் இருந்து ஆசிரியா்கள், மாணவா்கள் என பலா் கலந்து கொண்டனா்.

Tags:    

Similar News