சோழவரம் அருகே பழிக்குப்பழியாக ரவுடி வெட்டிக்கொலை: 2 பேர் அதிரடி கைது

சோழவரம் அருகே இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலைக்கு பழிக்குப்பழியாக ரவுடி வெட்டி கொலை செய்யப்பட்ட சம்பவத்தில் இரண்டு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Update: 2022-06-28 05:00 GMT

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் அடுத்த காந்திநகர் பகுதியை சேர்ந்த பிரபல கஞ்சா வியாபாரியான கஞ்சா மணி கடந்த 2020ம் ஆண்டு பட்டப்பகலில் வெட்டி கொலை செய்யப்பட்டார். கொலை, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய கஞ்சா மணி குண்டர் சட்டத்தில் கைதாகி ஜாமீனில் வெளியே வந்த போது மர்ம கும்பல் வெட்டி சாய்த்தது.

கஞ்சா விற்பனை, மாமூல் வாங்குவது உள்ளிட்ட தொழில் போட்டியில் கஞ்சா மணியை கொலை செய்த மதிவாணன் உள்ளிட்டோர் அப்போது கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். கஞ்சா மணியின் கொலைக்கு பழி தீர்க்க அவரது தம்பி பிரபா என்கிற பிரபாகரன் திட்டம் தீட்டி தகுந்த நேரத்திற்காக காத்திருந்தார்.

காந்திநகரை சேர்ந்த மதிவாணன் (26) அப்பகுதியில் உள்ள வீடு ஒன்றில் நேற்று தமது நண்பர்களுடன் இருந்துள்ளார். அப்போது பிரபாவின் கூட்டாளி ராம்கி, மதிவாணனுக்கு மது மற்றும் பிரைட் ரைஸ் வாங்கி கொடுத்துள்ளார். மதிவாணன் மது போதையானதும் பிரபாவிற்கு ராம்கி தகவல் கொடுத்துள்ளார். இதனையடுத்து தமது அண்ணன் கொலைக்கு பழி வாங்குவதற்காக தக்க சமயம் பார்த்து காத்திருந்த பிரபா தமது கூட்டாளிகளுடன் சம்பவ இடத்திற்கு வந்து மதிவாணனை சரமாரியாக அரிவாளால் வெட்டி கொலை செய்தார்.

அப்போது உடனிருந்த மதிவாணனின் கூட்டாளிகள் மூவரையும் வெட்டிவிட்டு தப்பி சென்றனர். இதுகுறித்து அப்பகுதி மக்கள் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த சோழவரம் போலீசார் வெட்டு காயங்களுடன் இருந்த மதிவாணனின் கூட்டாளிகள் ஹேமந்த், சரத்குமார், தனுஷ் ஆகிய மூவரையும் மீட்டு பாடியநல்லூர் ஆரம்ப சுகாதார நிலையத்தில் முதலுதவி அளித்து மேல் சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

மேலும் கொலை செய்யப்பட்ட மதிவாணனின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக சென்னை ஸ்டான்லி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து சோழவரம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். ஆவடி முத்தாபுதுப்பேட்டை காவல் எல்லைக்குட்பட்ட பாலவேடு பகுதியில் போலீசார் வாகன சோதனையின் போது அவ்வழியே வந்த ஆட்டோ ஒன்றை மடக்கி சோதனை மேற்கொண்டனர்.

இதில் கத்தி, அரிவாள் ஆகியவை இருந்தது தெரிய வந்தது. இதனையடுத்து ஆட்டோவில் வந்த இருவரிடம் தீவிர விசாரணை நடத்தியதில் ராம்கி, சூர்யா என்பதும் ரவுடியை கொலை செய்து தப்பி வந்ததும் தெரிய வந்தது. இதனையடுத்து இருவரையும் கைது செய்து சோழவரம் போலீசில் ஒப்படைத்தனர். இந்த வழக்கின் முக்கிய குற்றவாளியான கஞ்சா மணியின் தம்பி பிரபா தலைமறைவான நிலையில் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன் நடந்த கொலைக்கு பழிக்கு பழியாக மற்றொரு கொலை அரங்கேறியுள்ள சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




Tags:    

Similar News