ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த நுரையீரல் பாதிக்கப்பட்ட நபர்

திருவள்ளூரில் நுரையீரல் பாதிக்கப்பட்டவர் ஆக்சிஜன் சிலிண்டருடன் வந்து மனு கொடுத்தார்.

Update: 2024-04-29 10:27 GMT

ஆக்சிஜன் சிலிண்டருடன் மனு கொடுக்க வந்த தொழிலாளி.

பெரியபாளையம் அருகே ஆரணியில் நுரையீரல் பாதிக்கப்பட்ட ஒருவர் ஆக்சிஜன் சிலிண்டருடன் சுவாசித்துக் கொண்டே திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து மனு கொடுத்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த ஆரணி புதிய தமிழ் காலனியைச் சேர்ந்தவர் பிரவீன்குமார்.  இவர் கும்மிடிப்பூண்டி சிப்காட் தொழிற்பேட்டையில் உள்ள சிலிக்கான் பவுடர் தயாரிக்கும் தனியார் தொழிற்சாலையில் கடந்த 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த நிலையில் பல மாதங்களாக பிரவீன்குமார்,சுவாச கோளாறால் அவதிப்பட்டு வந்த அவர் சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் நுரையீரல் முழுவதுமாக பாதிக்கப்பட்டுள்ளதாக கூறியுள்ளனர். இந்நிலையில் சென்னை ராஜீவ் காந்தி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த அவர் அங்கு அவருக்கு போதிய சிகிச்சை அளிக்காததால் அங்கிருந்து சென்னை காவேரி மருத்துவமனைக்கு மாற்றம் செய்யப்பட்டார், பின்னர் பிரவீன் குமாரை முழுமையாக சிகிச்சை அளித்து குணப்படுத்த வேண்டும் என்றால் ரூ. 45 லட்சம் செலவு ஆகும் என மருத்துவர்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

இதை தொடர்ந்து 10 ஆண்டுகளாக பணிபுரிந்து வந்த தனியார் தொழிற்சாலை நிர்வாகத்திடம் சென்று மருத்துவ உதவிக்காக பணம் கேட்டபோது அவர்கள் பணம் தர மறுத்து விட்டனர்.

இந்நிலையில் தன் உயிரைக் காப்பாற்ற வழி தெரியாமல் பிரவீன் குமார், தனது மனைவி மற்றும் இரண்டு பெண் குழந்தைகளுடன் ஆக்சிஜன் சிலிண்டரை சுமந்தபடி திருவள்ளூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்துள்ளார் ஆக்சிஜன் சிலிண்டர் உடன் வந்த அவரைப் பார்த்து அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்த நிலையில் அவரிடமிருந்து மனுவின பெற்றுக்கொண்ட அதிகாரிகள் தனியார் தொழிற்சாலை நிர்வாகத்திடம் நாங்கள் பேசுகிறோம் என்று உறுதி அளித்துள்ளனர். இதனால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News