சோழவரம் அருகே ஸ்ரீ செங்காளம்மன் கோவில் தீமிதி திருவிழா கோலாகலம்: பக்தர்கள் திரளாக பங்கேற்பு..!

சோழவரம் அருகே அலமாதி ஊராட்சியில் அருள்மிகு ஸ்ரீ செங்காளம்மன் கோவில் 9-ம் ஆண்டு தீமிதித் திருவிழாவில் பக்தர்கள் தீ மிதித்து, நேர்த்திக்கடன் செலுத்தி அம்மனை வழிபட்டனர்.

Update: 2022-07-04 07:45 GMT

சோழவரம் அருகே அலமாதி ஊராட்சியில் அருள்மிகு ஸ்ரீ செங்காளம்மன் கோவில் 9-ம் ஆண்டு தீமிதித் திருவிழாவில் தீ மிதித்து நேர்த்திக்கடன் செலுத்திய பக்தர்கள். (உள்படம்) சிறப்பு அலங்காரத்தில் செங்காளம்மன்.

திருவள்ளூர் மாவட்டம், சோழவரம் ஒன்றியம், அலமாதி ஊராட்சியில் அருள்மிகு ஸ்ரீ செங்காளம்மன் கோவில் 9-ம் ஆண்டு தீமிதி திருவிழா ஆலய ஸ்தாபகர் சக்திசரவணன் தலைமையில் வெகு சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் கணபதி ஹோமத்துடன் கோ பூஜை, கொடியேற்றம், அம்மனுக்கு சீர்வரிசை எடுத்தல், கங்கை திரட்டுதல், கரகம் எடுத்தல், காப்பு கட்டுதல், மஞ்சள்நீர் அபிஷேகம், குங்குமம் அர்ச்சனை, பால்அபிஷேகம் போன்ற பல்வேறு சிறப்பு பூஜை செய்யப்பட்டது.

பின்னர் அம்மனுக்கு சதா அபிஷேகம், அக்கினி கப்பறை எடுத்தல், பால் காவடி எடுத்தல் மற்றும் 108 கலசாபிஷேகம் செய்து தூப தீப ஆராதனை காண்பிக்கப்பட்டது.இதனைத்தொடர்ந்து விரதம் இருந்து காப்பு கட்டிய. 200-க்கும் மேற்பட்ட பக்தர்கள் தீ குண்டத்தில் இறங்கி நேர்த்திக்கடன் நிறைவேற்றினர்.

பெண்கள் பொங்கல் வைத்து அர்ச்சனைகள் செய்து சாமி தரிசனம் செய்தனர். கோவில் நிர்வாகிகள் உள்ளிட்ட சுற்றுவட்டார பக்தர்கள் கலந்துகொண்டு விழாவை சிறப்பித்தனர். முடிவில், அம்மன் உற்சவருக்கு வண்ண மலர்கள் மற்றும் திரு ஆபரணங்களால் அலங்காரம் செய்யப்பட்டு மகா தீபாராதனை காண்பித்து மேளதாள வானவேடிக்கையுடன் திருவீதி உலா நடைபெற்றது.இதனை முன்னிட்டு பல்வேறு நற்பணி மன்றத்தினர், பக்தர்களுக்கு குளிர்பானம் மற்றும் அன்னதானம் வழங்கினர்.

Similar News