தங்கம் வென்ற சிக்கண்ணா கல்லுாரி மாணவ, மாணவியர்

பாரதியார் பல்கலைக்கழக தேர்வில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவியர் 3 பேர் தங்கப்பதக்கம் வென்றனர். மேலும் 16 பேர் தரவரிசை பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.

Update: 2022-12-09 01:50 GMT

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி (முகப்பு தோற்றம்)

திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லுாரி, ஆண்- பெண் இருபாலரும் படிக்கும் அரசு கலைக்கல்லுாரியாக விளங்குகிறது. திருப்பூரைச் சேர்ந்த சிக்கண்ணா செட்டியார் என்ற பெரும் வணிகர் தானமாக வழங்கிய பல ஏக்கர் இடத்தில், இக்கல்லுாரி அமைந்துள்ளது. திருப்பூர் மட்டுமின்றி சுற்றுவட்டார பகுதிகளை சேர்ந்த ஆயிரக்கணக்கான மாணவ,மாணவியர் இக்கல்லுாரியில் படித்து பட்டம் பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இக்கல்லுாரியில் படிக்கும் மாணவ, மாணவியர் சிறந்த கல்வித்தரத்தில் பட்டப்படிப்பு தேர்வுகளில் முக்கிய இடங்களை பிடிப்பதோடு, தங்கம் பெற்று வருகின்றனர்.  

அந்த வகையில், நடப்பாண்டில் திருப்பூர் பாரதியார் பல்கலைக்கழக தேர்வில் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவ-மாணவியர் 3 பேர் தங்கப்பதக்கம் வென்றனர். மேலும் 16 பேர் தரவரிசை பட்டியலில் இடம் பிடித்து சாதனை படைத்தனர்.

கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தின் 2021-22-ம் ஆண்டு தேர்வுகளில், திருப்பூர் சிக்கண்ணா அரசு கலைக்கல்லூரி மாணவர் ஒருவர், மாணவியர் இருவர் என மொத்தம் 3 பேர் தங்கப்பதக்கங்கள் பெற்றனர். மேலும், 19 பேர் தரவரிசையில் சிறப்பிடங்களை பெற்றுள்ளனர்.

இளநிலை பட்ட வகுப்புகளில் சர்வதேச வணிகவியல் துறையில் மாணவர் பிரபாகரன் முதல் இடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். இதே துறையில் மாணவர் பிரவீன்குமார் 6-வது இடம் பெற்றுள்ளார். வரலாறு துறையில் மாணவி பாண்டி செல்வி 3-வது இடம், மாணவர்கள் அகில் பிரசாத் 3-வது இடம், கோபிநாத் 6-வது இடம், அருள்குமார் 10-வது இடம் பெற்றுள்ளனர்.

முதுநிலை பட்ட வகுப்புகளில் ஆடை வடிவமைப்பு நாகரிகம் துறையில் மாணவி வாணிஸ்ரீ முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் வென்றார். வேதியியல் துறையில் மாணவி திவ்யா முதலிடம் பெற்று தங்கப்பதக்கம் பெற்றார். இதே துறையில் மாணவி.நாககார்த்திகா 4-வது இடமும், மாணவர்கள் ஹரிகரன் 5-வது இடம், வானிலன் 6-வது இடம், சிவசக்தி 7-வது இடம், மாணவி கவிப்பிரியா 8-வது இடம் பெற்று கல்லூரிக்கு பெருமை சேர்த்தனர்.

ஆங்கில இலக்கிய துறையில் மாணவர் மனோஜ் 6-வது இடம், சர்வதேச வணிகவியல் துறையில் மாணவி லின்சி இவாஞ்சலின் 4-வது இடம், மாணவர்கள் சுரேஷ் 5-வது இடம், பிரேம்குமார் 9-வது இடம் பெற்றனர். இயற்பியல் துறையில் மாணவி  மோனிஷா 6-வது இடம் பெற்றுள்ளார். விலங்கியல் துறையில் மாணவி பத்மஸ்ரீ 6-வது இடம் பிடித்தார். 

கல்லூரி முதல்வர் கிருஷ்ணன், வேதியியல் துறைத் தலைவர் ராஜகோபால், சர்வதேச வணிகவியல் துறைத் தலைவர் மல்லேஸ்வரன், ஆடை வடிவமைப்பு நாகரிகம் துறைத் தலைவர் கற்பகம் சின்னம்மாள், வரலாறு துறைத்தலைவர் சங்கமேஸ்வரன், இயற்பியல் துறைத் தலைவர் ஹரேஸ் பண்டியா, விலங்கியல் துறைத் தலைவர் மார்க்ரெட், ஆங்கில இலக்கியத்துறை தலைவர் பிருந்தா, கல்லூரி ஆட்சிக்குழுவினர், அனைத்துத் துறை பேராசிரியர்கள், முன்னாள் மாணவர்கள் சங்க நிர்வாகிகள் ஆகியோர் சிறப்பிடம் பெற்ற மாணவ-மாணவியரை பாராட்டி, வாழ்த்து தெரிவித்தனர்.

Similar News