மழை வேண்டி வன தேவதைகளுக்கு விழா எடுத்த மலைவாழ் மக்கள்

Tirupur News-மழை வேண்டி வன தேவதைகளுக்கு, உடுமலையை அடுத்துள்ள கிராமப்புற மலைவாழ் மக்கள் விழா நடத்தினர்.

Update: 2024-05-05 18:12 GMT

Tirupur News-ஆடிப்பாடி கும்மியடித்த மலைவாழ் மக்கள்.

Tirupur News, Tirupur News Today-மழை வேண்டி வன தேவதைகளுக்கு, உடுமலையை அடுத்துள்ள கிராமப்புற மலைவாழ் மக்கள் விழா நடத்தினர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அடுத்த ஆனைமலை புலிகள் காப்பக பகுதியில் உடுமலை மற்றும் அமராவதி வனச்சரகங்கள் உள்ளன. இங்குள்ள கோடந்தூர், பொருப்பாறு, ஆட்டுமலை, ஈசல்தட்டு, தளிஞ்சி, தளிஞ்சிவயல், கருமுட்டி, காட்டுப்பட்டி, குலிப்பட்டி, மாவடப்பு, குருமலை, மேல்குருமலை உள்ளிட்ட குடியிருப்புகளில் மலைவாழ் மக்கள் குடியிருந்து வருகிறார்கள்.

தற்போது நிலவும் கடும் வெப்பத்தின் காரணமாக வனப்பகுதி காய்ந்து விட்டது. அதைத்தொடர்ந்து வன தேவதைகளுக்கு விழா எடுத்து அதன் மூலமாக குளிர்வித்தால் மழைப்பொழிவு ஏற்படும் என்ற நம்பிக்கை. அந்த நம்பிக்கையின் அடிப்படையில் மலைவாழ் மக்கள் சாமிகளுக்கு விழா எடுத்து வருகின்றனர். அதன்படி கோடந்தூர் கட்டளை மாரியம்மன், சாப்ளிஅம்மாள், தளிஞ்சி கொண்டம்மாள் உள்ளிட்ட வன தேவதைகளுக்கு விழா எடுப்பது என மலைவாழ் மக்கள் முடிவு செய்து நோன்பு சாட்டினார்கள்.

அதைத் தொடர்ந்து கம்பம் போடுதல் நிகழ்வு, மாவிளக்கு, பூவோடு எடுத்தல் நிகழ்ச்சியும் அம்மன் திருக்கல்யாணமும் நடைபெற்றது.

விழாவை பாரம்பரிய இசைக் கருவிகளுடன் மலைவாழ் மக்கள் ஆடல் பாடல் நடனத்துடன் உறவினர்களுடன் சேர்ந்து மகிழ்வுடன் கொண்டாடினார்கள். முடிவில் மஞ்சள் நீராட்டுடன் விழா நிறைவடைந்தது.

இதே போன்று மாவடப்பு மற்றும் சம்பக்காட்டு பகுதியிலும் மழைப்பொழிவு வேண்டி வன தேவதைகளுக்கு மலைவாழ் மக்கள் விழா எடுத்தனர். சமவெளி பகுதியில் கிராமங்கள் மற்றும் நகரப்புறத்தில் உள்ள கோவில்களில் மழைப் பொழிவு வேண்டி சிறப்பு யாகம் மற்றும் அபிஷேகங்கள் நடைபெற்று வருகிறது.

Tags:    

Similar News