திருச்சியில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல் பற்றி கலெக்டர் அவசர ஆலோசனை

திருச்சி மாவட்டத்தில் வேகமாக பரவும் டெங்கு காய்ச்சல் பற்றி கலெக்டர் அதிகாரிகளுடன் அவசர ஆலோசனை நடத்தினார்.

Update: 2021-10-13 07:03 GMT

தமிழகத்தில் தற்போது கொரோனா ஓரளவு கட்டுக்குள் கொண்டு வரப்பட்டுள்ள நிலையில் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவ தொடங்கியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் கடந்த சில வாரங்களாகவே தினமும் 50 பேருக்கு பேருக்குள் தான் கொரோனாவால் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.

இந்நிலையில் தற்போது மழைக்காலம் தொடங்கிவிட்டதால் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவி வருவது பொது மக்களை அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. திருச்சி மாவட்டத்தில் கடந்த செப்டம்பர் மாதம் 87 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டு திருச்சி அரசு மருத்துவமனை மற்றும் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வந்தனர். இந்த மாதம் நேற்று வரை 32 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டனர் .இதில் 15 பேர் தவிர மற்றவர்கள் குணமடைந்து வீடு திரும்பி விட்டனர்.

மாவட்டத்தை பொறுத்தவரை கடந்த 40 நாட்களில் மட்டும் மொத்தம் 119 பேர் டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளனர். டெங்கு காய்ச்சலால் பாதிக்கப்படுவோர்களை அனுமதித்து சிகிச்சை அளிப்பதற்காக திருச்சி அரசு தலைமை மருத்துவமனையில் பிரத்யேக வார்டு தொடங்கப்பட்டு உள்ளது.

அந்த வார்டில் அவசர சிகிச்சைக்காக 5 படுக்கைகளும், பெரியவர்களுக்கு 30 படுக்கைகளும் அமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகளுக்கு 30 படுக்கைகள் தயார் நிலையில் உள்ளன. இந்த நிலையில் டெங்கு காய்ச்சல் பரவலை தடுப்பதற்காக திருச்சி மாவட்ட கலெக்டர் சிவராசு கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் அவசர ஆலோசனை நடத்தினார்.

இந்த கூட்டத்தில் மாநகராட்சி ஆணையர் முஜிபுர் ரகுமான், மாவட்ட சுகாதார பணிகள் துணை இயக்குனர் சுப்பிரமணியன், அரசு மருத்துவ கல்லூரி டீன் வனிதா  உள்ளிட்ட அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

Similar News