திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் அமைத்த நிழற்கூரை
கொளுத்தும் வெயிலில் தவித்து வரும் மக்களுக்காக திருச்சி மாநகர மக்களுக்காக போக்குவரத்து போலீசார் நிழற்கூரை அமைத்து உள்ளனர்.;
திருச்சி புத்தூர் நால்ரோடு சிக்னலில் போலீசார் அமைத்துள்ள நிழற்கூரை.
திருச்சியில் போலீசார் போக்குவரத்து சிக்னலில் நிழற்கூரை அமைத்து உள்ளனர்.
தமிழகத்தில் இந்த ஆண்டு கோடை காலம் மிகவும் கொடுமையாக உள்ளது. கத்திரி வெயில் எனப்படும் அக்னி நட்சத்திரம் தொடங்குவதற்கு முன்பாகவே தமிழகத்தின் 14 க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் வெப்ப அலை வீசுகிறது. இதன் காரணமாக மக்கள் வெளியில் நடமாட முடியாமல் அனலில் இட்ட புழு போல தவித்து வருகிறார்கள்.
தமிழகத்தில் அதிகபட்சமாக ஈரோட்டில் 109 டிகிரி வரை வெயில் அளவு பதிவாகியுள்ளது. அதேபோல தமிழகத்தின் மத்திய மாவட்டம், கந்தக பூமி எனப்படும் திருச்சியிலும் நாளுக்கு நாள் வெப்பம் அதிகரித்துக் கொண்டே வருகிறது. திருச்சியில் கடந்த 10 நாட்களுக்கும் மேலாக வெயிலின் அளவு 100 டிகிரி செல்சியஸ் ஐ தாண்டி தான் உள்ளது. இதனால் மக்கள் சாலைகளில் வாகனங்களில் செல்ல முடியாமலும் நடந்து செல்ல முடியாமலும் தவித்து வருகிறார்கள்.
வெயிலில் அத்தியாவசிய பணிக்காக வெளியில் வருபவர்கள் குளிர்பான கடைகளையும் இளநீர் கடைகளையும் தேடி ஓடக்கூடிய நிலை தான் உள்ளது. இந்நிலையில் திருச்சி புத்தூர் நால்ரோடு சிக்னலில் மாநகர போக்குவரத்து துறை போலீசார் பயணிகளின் நலன் கருதி நிழற்குடை அமைத்துள்ளனர். சிக்னலில் சிக்னலுக்காக காத்து நிற்கும் இரு சக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் அந்த நிழலில் இளைப்பாரி செல்வதற்கு இது மிகவும் வசதியாக உள்ளது. போலீசாரின் இந்த சேவையை அந்த சிக்னலை கடந்து செல்லும் அனைத்து பொதுமக்களும் பாராட்டி வருகிறார்கள். இதே போன்ற நிழற் கூரை கடந்த ஆண்டு தலைமை தபால் நிலைய ரவுண்டானா அருகில் அமைக்கப்பட்டு இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த ஆண்டு போல இதுவும் மக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று உள்ளது.