பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேர் கைது ரூ.1 லட்சம் அபராதம்
பொள்ளாச்சியில் முயல் வேட்டையாடிய 10 பேருக்கு தலா 10,000 ரூபாய் விதம் 10 பேருக்கும் சேர்த்து 1,00,000 அபராதம் விதிக்கப்பட்டது.;
கோவை மாவட்டம் பொள்ளாச்சி வனச்சரகத்திற்கு உட்பட்ட பகுதிகளில் காட்டு யானை, புலி, மான் உள்ளிட்ட ஏராளமான வனவிலங்குகள் உள்ளன. இந்த வனப்பகுதிகள் மற்றும் அதையொட்டியுள்ள பகுதிகளிலும் வனவிலங்குகளை வேட்டையாடுதல் உள்ளிட்ட செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது வனத்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இந்த நிலையில் பொள்ளாச்சி வன அலுவலர்களுக்கு காட்டு முயல் வேட்டையாடப்படுவதாக ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அதன் அடிப்படையில் ஆனைமலை புலிகள் காப்பக கள இயக்குனர் இராமசுப்பிரமணியம் மற்றும் துணை இயக்குனர் பார்கவதேஜா அறிவுறுத்தல் படியும் மற்றும் வனச்சரக அலுவலர் புகழேந்தி தலைமையில் கோவை மற்றும் பொள்ளாச்சி வனச்சரக களப்பணியாளர்கள் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
பொள்ளாச்சி தாலுகாவிற்கு உட்பட்ட கள்ளிப்பட்டி மற்றும் கணக்கன்பட்டி ஆகிய பகுதிகளில் வனத்துறையினர் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது அங்கிருந்த சின்ன ராசு, தங்கவேல், சதீஷ்குமார், பிரகாஷ், ஈஸ்வரன், பசுபதி, அர்ஜுனன், முருகன், சக்திவேல், தங்கவேல் ஆகியோர் காட்டு முயல்களை வயல்வெளிகளில் வேட்டையாடி வந்து சமைத்து கொண்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து அவர்களை பிடித்த வனத்துறையினர் சம்பவ இடத்திலேயே விசாரணை மேற்கொண்டனர். அந்த விசாரணையில் தடிக்கம்புகள் மற்றும் புலிக்கம்புகளை வைத்து கணக்கம்பட்டி பகுதியில் வயல்வெளியில் உள்ள முயல்களை வேட்டையாடியது கண்டறியப்பட்டது. இச்செயல் வன உயிரின பாதுகாப்புச் சட்டகம் 1972 இன் படி குற்றமாகும். இதனால் அவர்கள் மீது வழக்குப்பதிவு செய்த ஆனைமலை புலிகள் காப்பக துணை இயக்குனர், பிடிபட்ட நபர்களுக்கு தலா 10,000 ரூபாய் விதம் 10 பேருக்கும் சேர்த்து 1,00,000 அபராத தொகை விதித்து உத்தரவிட்டார்.