திருச்சி மாவட்டத்திற்கு மே 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிப்பு

ஸ்ரீரங்கம் கோவில் சித்திரை திருவிழாவையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு மே 6ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.

Update: 2024-04-25 12:27 GMT

திருச்சி மாவட்ட ஆட்சியர் பிரதீப்குமார்.

ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாத சுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர்த்திருவிழா 06.05.2024 அன்று நடைபெறுவதையொட்டி திருச்சிராப்பள்ளி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்படுகிறது. மாவட்ட ஆட்சித்தலைவர் பிரதீப் குமார் இதற்கான உத்தரவை பிறப்பித்து உள்ளார்.

பூலோக வைகுண்டம் என போற்றப்படுவது ஸ்ரீரங்கம் அருள்மிகு ரங்கநாதர் கோவில் ஆகும். 108 திவ்ய தேசங்களில் முதன்மையான இத்திருத்தலத்தில் வருடம் முழுவதும் திருவிழாக்கள் தான் என்றாலும் ஆண்டுக்கு ஒரு முறை நடைபெறும் வைகுண்ட ஏகாதசி பெருவிழா மற்றும் வருடத்திற்கு ௩ முறை நடைபெறும் தேர் திருவிழாக்கள் சிறப்பு வாய்ந்ததாகும். தற்போது இந்த ஆண்டுக்கான சித்திரை தேர் திருவிழா நடந்து வருகிறது.

திருச்சிராப்பள்ளி மாவட்டம், ஸ்ரீரங்கம் வட்டம், ஸ்ரீரங்கம் “அருள்மிகு அரங்கநாதசுவாமி திருக்கோயில் சித்திரைத் தேர்த்திருவிழாவினை முன்னிட்டு வருகின்ற 06.05.2024 திங்கட்கிழமையன்று உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்படுகிறது.

இத்தேர்த்திருவிழாவினை முன்னிட்டு, திருச்சிராப்பள்ளி மாவட்டத்திலுள்ள தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டிலுள்ள அனைத்து மாநில அரசு அலுவலகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களுக்கும் இது பொருந்தும். எனினும் பள்ளி மற்றும் கல்லூரி தேர்வுகள் நடைபெறுவதில் இந்த விடுமுறை பொருந்தாது.

மேற்கண்ட விடுமுறை நாளில் மாவட்டத்தில் அரசு பாதுகாப்பு தொடர்பான அவசர அலுவல்களைக் கவனிக்கும் பொருட்டு மாவட்டத்திலுள்ள அரசு அலுவலகங்கள், கருவூலம் மற்றும் சார்நிலைக் கருவூலங்கள் குறிப்பிட்ட பணியாளர்களோடு செயல்படும். இவ் உள்ளூர் விடுமுறையானது 2024 - பாராளுமன்ற தேர்தல் பணியில் ஈடுபட்டிருக்கும் அலுவலர்கள், பணியாளர்களுக்கு பொருந்தாது.

இந்த விடுமுறைக்குப் பதிலாக வருகின்ற 29.06.2024 சனிக்கிழமை வேலைநாளாக அறிவிக்கப்படுகிறது.

மேற்கண்ட தகவலை திருச்சிராப்பள்ளி மாவட்ட ஆட்சித்தலைவர் மா.பிரதீப் குமார் தெரிவித்துள்ளார்.

Tags:    

Similar News