காற்றாலை இறகுகள் இறக்குமதியில் தூத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை

Windmill Blades -ஒரே கப்பலில் அதிக எண்ணிக்கையிலான காற்றாலை இறகுகளை இறக்குமதி செய்து தூத்துக்குடி துறைமுகம் புதிய சாதனை படைத்துள்ளது.

Update: 2022-10-28 06:54 GMT

தூத்துக்குடி துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்ட காற்றாலை இறகுகள்.

Windmill Blades -தூத்துக்குடி வ.உ. சிதம்பரனார் துறைமுகத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு சரக்குகளை ஏற்றுமதி செய்வதிலும், வெளி நாடுகளில் இருந்து சரக்குகளை இறக்குமதி செய்வதிலும் தொடர்ந்து பல்வேறு சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், தற்போது, ஒரே கப்பலில் இருந்து 120 ராட்சத காற்றாலை இறகுகளை இறக்குமதி செய்து புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது.

தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் இதற்கு முன்பு அதிகபட்சமாக 60 காற்றாலை இறகுகளை ஒரே கப்பலில் இருந்து இறக்குமதி செய்தது சாதனையாக இருந்து வந்த நிலையில், தற்போது புதிய சாதனை படைக்கப்பட்டுள்ளது. 6.60 மீட்டர் மிதவை ஆழம் கொண்ட MV.NAN FENG ZHI XING என்ற கப்பலில் 76.8 மீட்டர் நீளம் கொண்ட 120 காற்றாலை இறகுகள் கொண்டுவரப்பட்டு 44 மணி நேரத்தில் அனைத்து காற்றாலை இறகுகளும் இறக்குமதி செய்யப்பட்டது.

சீனாவில் தயாரிக்கப்பட்ட அந்த காற்றாலை இறகுகள் சாங்ஷு துறைமுகத்தில் இருந்து ஏற்றுமதி செய்யப்பட்டு தமிழகத்தில் இயங்கிவரும் காற்றாலைகளின் பயன்பாட்டிற்கு வ.உ.சிதம்பரனார் துறைமுகம் மூலம் இறக்குமதி செய்யப்பட்டுள்ளது.

இதுகுறித்து தூத்துக்குடி வ.உ.சி. துறைமுக ஆணைய தலைவர் தா.கி. ராமச்சந்திரன் கூறியது வருமாறு:-

துறைமுகத்துக்கு வந்த கப்பலில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட காற்றாலை இறகுகள் அனைத்தும் இரண்டு பெரிய நகரும் பளுதூக்கி இயந்திரங்கள் மூலம் பாதுகாப்பாக கையாளப்பட்டன. அந்தக் கப்பலின் மூலம் கையாளப்பட்ட காற்றாலை இறகுகள் அனைத்தும் சரக்கு கையாளுபவர்களின் பாதுகாப்பினையும் சரக்குகளின் பாதுகாப்பினையும் கருத்தில் கொண்டு கையாளப்பட்டது.

வ.உ.சிதம்பரனார் துறைமுகம் காற்றாலை இறகுகள் மற்றும் அதன் உதிரிபாகங்கள் இறக்குமதியில் தொடர்ந்து பாராட்டத்தக்க சாதனைகளை நிறைவேற்றி உள்ளது. கடந்த நிதியாண்டில் 2906 காற்றாலை இறகுகளும், நடப்பு நிதியாண்டில் செப்டம்பர் மாதம் வரை 1598 காற்றாலை இறகுகளையும் கையாண்டு உள்ளது.

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தில் காற்றாலை இறகுகள் மற்றும் உதிரிபாகங்களை சேமித்து வைப்பதற்கு தேவையான இடவசதியும் போக்குவரத்து நெரிசல் இல்லாமலும் உள்ளது. இதனால், நீண்ட காற்றாலை இறகுகளை எடுத்து செல்லும் பிரத்யோக லாரிகள் எளிதாக துறைமுகத்திற்கு வந்து செல்ல ஏதுவாக உள்ளது.

வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தின் அருகே அமைந்துள்ள இணைப்பு நெடுஞ்சாலைகள் நாட்டில் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் சென்று வரும் வகையில் அமைந்துள்ளதால் காற்றாலை இறகுகளை கையாளுவதில் ஒரு தனித்துவமான துறைமுகமாக விளங்குகிறது.

காற்றாலை இறகுகளை சிறப்பான மற்றும் பாதுகாப்பான முறையில் கையாண்டு சாதனை புரிவதற்கு உறுதுணையாக இருந்த கப்பல் முகவர்கள், சரக்கு கையாளும் டிரான்ஸ்போர்ட் முகவர்கள் மற்றும் ஏற்றுமதியார்கள், துறைமுக அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவருக்கும் பாராட்டுக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

மேலும், வ.உ.சிதம்பரனார் துறைமுகத்தினால் வழங்கப்படும் சிறப்பான சேவை நம் நாட்டின் சுற்றுபுறச்சூழலின் மேன்மைக்கும்புதுப்பிக்கப்பட்ட மின்சாரம் தயாரிக்கும் செயல்திறனை அதிகரிப்பதற்கும் உறுதுணையாக இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.



அடுத்த முக்கியமான செய்திகளை தெரிந்துகொள்ள: Click Here-1, Click Here-2

Tags:    

Similar News