தூத்துக்குடி மாவட்டத்தில் 1574 பள்ளிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கல் : முதன்மை கல்வி அலுவலர் ஞானகெளரி தகவல்

தூத்துக்குடி மாவட்டத்தில் 1574 பள்ளிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டதாக முதன்மை கல்வி அலுவலர் ஞானகெளரி தெரிவித்தார்.

Update: 2021-06-23 13:32 GMT
தூத்துக்குடி மாவட்டத்தில் தமிழக அரசின் விலையில்லா பாடபுத்தகங்களை பள்ளி மாணவர்களுக்கு வழங்கும் பணியை முதன்மை கல்வி அலுவலர் ஞானகௌரி தொடங்கிவைத்தார்.

சென்னை கோட்டூர்புரத்தில் அமைந்துள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி கடந்த 19ம் தேதி நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அரசுப் பள்ளி மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கி திட்டத்தை தொடங்கி வைத்தார்.

இதையடுத்து மாநிலம் முழுவதும் உள்ள அரசுப் பள்ளிகளில் பயிலும் மாணவ மாணவிகளுக்கு விலையில்லா பாடப் புத்தகங்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

இதைத்தொடர்ந்து, தூத்துக்குடி மாவட்டத்தில் அரசு பள்ளிகளில் பயிலும் பள்ளி மாணவ மாணவியர்களுக்கு நடப்பு கல்வியாண்டிற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் மூலம் கடந்த 2 நாட்களாக வழங்கப்பட்டு வருகின்றன.

தூத்துக்குடி மாவட்ட முதன்மை கல்வி அலுவலகம் சார்பில் மாவட்டத்தில் அரசுப் பள்ளியில் பயிலும் மாணவ மாணவியர்களுக்கு நடப்பாண்டிற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கும் நிகழ்ச்சி தூத்துக்குடி கீழ ரெங்கநாதபுரம் தெருவில் உள்ள சிஎம் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றது.

இதில் ஏராளமான மாணவர்கள் தங்கள் பெற்றோர்களுடன் பள்ளிக்கு வருகை தந்து பாடபுத்தகங்களை வாங்கிச்சென்றனர்.

இதைத்தொடர்ந்து, இது குறித்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஞான கெளரி செய்தியாளர்களிடம் கூறுகையில், தூத்துக்குடி மாவட்டத்தில் 712 அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் 862 பள்ளிகள் என மொத்தம் 1574 பள்ளிகளுக்கு நடப்பு கல்வி ஆண்டிற்கான விலையில்லா பாடப்புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Tags:    

Similar News