தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு :ஒரு நபர் ஆணைய 30-ஆம் கட்ட விசாரணை நிறைவு

விசாரணை ஆணையத்தின் 31ம் கட்ட விசாரணை அக்டோபர் மாதம் 22ம் தேதி தொடங்க உள்ளது

Update: 2021-09-23 17:35 GMT

தூத்துக்குடி துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக அமைக்கப்பட்ட ஒருநபர் விசாரணை குழுவி மேற்கொண்ட  விசாரணை.

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பான ஒரு நபர் ஆணையத்தின் 30வது கட்ட விசாரணை இன்று நிறைவு பெற்றது.

தூத்துக்குடியில் கடந்த 2018-ம் ஆண்டு மே மாதம் 22-ம் தேதி ஸ்டெர்லைட் ஆலைக்கு எதிரான போராட்டத்தில் நடந்த துப்பாக்கி சூடு, தடியடியில் 13 பேர் பலியானார்கள். இந்த துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்துவதற்காக தமிழக அரசு, ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒருநபர் விசாரணை ஆணையத்தை அமைத்தது. இந்த ஆணைய அதிகாரிகள் மாதம் தோறும் தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதன்படி, ஏற்கெனவே 29 கட்டமாக விசாரணை நடத்தப்பட்டு, கலவரத்தில் பாதிக்கப்பட்டவர்கள், போராட்டத்தில் பங்கேற்றவர்கள், போராட்டத்தை முன்னெடுத்த முக்கிய நிர்வாகிகள், வழக்கறிஞர்கள், பத்திரிகையாளர்கள், அரசு அலுவலர்கள், தீயணைப்பு வீரர்கள் உள்பட 938 சாட்சிகளிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், 30-ம் கட்ட விசாரணை நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில், தூத்துக்குடி முகாம் அலுவலகத்தில் கடந்த 13-ந்தேதி தொடங்கியது. இதில் 2018 மே 22-ந்தேதி துப்பாக்கி சூடு சம்பவத்தையொட்டி ஸ்டெர்லைட் தாமிரா-2 குடியிருப்பில் தங்கியிருந்த ஸ்டெர்லைட் பணியாளர்கள், அங்கு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீசார் உள்பட 122 பேருக்கு ஆஜராக சம்மன் அனுப்பப்பட்டது. தொடர்ந்து 10 நாட்கள் நடைபெற்ற விசாரணையில் 122 பேரில் 100 பேர் விசாரணை ஆணையம் முன் ஆஜராகி விளக்கம் அளித்தனர். விசாரணை ஆணையத்தின் 31ம் கட்ட விசாரணை அக்டோபர் மாதம் 22ம் தேதி தொடங்க உள்ளது.

Tags:    

Similar News