தூத்துக்குடியில் ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்..

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2022-11-24 15:58 GMT

ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றோர்.

தூத்துக்குடி மாநகராட்சி அலுவலகம் முன்பு ஊரக வளர்ச்சி உள்ளாட்சி துறை ஊழியர் சங்கம் சார்பில், கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்திற்கு, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க மாவட்ட தலைவர் கருப்புசாமி தலைமை வகித்தார்.

ஆர்ப்பாட்த்தின்போது, தமிழகத்தில் உள்ள மாநகராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்கள், ஓட்டுனர்கள் உள்ளிட்டவர்களுக்கு குறைந்தபட்ச ஊதியம் தினக்கூலி ரூ. 750 வழங்க வேண்டும், தொகுப்பூதியம் மற்றும் குறைந்தபட்ச ஊதியம் ரூ. 16.725- இல் 3 ஆண்டுகளுக்கு மேல் பணிபுரியும் 89 ஊழியர்களை நிரந்தரம் செய்திட வேண்டும், 8 மணி நேர வேலை முறையை அமல்படுத்த வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.

மேலும், வேலைப்பளுவை திணிக்க கூடாது, ஒப்பந்தப் பணியாளர்களிடம் செப்டம்பர், அக்டோபர், நவம்பர் 2021 மற்றும் மார்ச், செப்டம்பர் 2022 என 5 முறை பிடித்தம் செய்த தொழில்வரிக்கு ரசீது வழங்க வேண்டும், ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு ஓய்வூதிய பணப்பலன்கள் வழங்காமல் ஒரு ஆண்டுக்கு மேல் அலைக்கழிக்கும் கிழக்கு மண்டல நிர்வாகம் மீது தீவிர நடவடிக்கை எடுத்திட வேண்டும் என்பன உள்ளிட்ட 15 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டத்தின் போது முழக்கங்கள் எழுப்பப்பட்டன.

ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாவட்ட தலைவர் பேச்சிமுத்து, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தூத்துக்குடி மாநகர் செயலாளர் ராஜா, உப்பு தொழிலாளர் சங்கம் சிஐடியு பொதுச் செயலாளர் சங்கரன் ஆகியோர் கோரிக்கைகள் குறித்து வாழ்த்தி பேசினர்.

தூத்துக்குடி மாநகராட்சி கிளை செயலாளர் ராமமூர்த்தி கோரிக்கை விளக்க உரையாற்றினார். மாவட்ட செயலாளர் முனியசாமி துவக்க உரையாற்றினார். சிஐடியு மாநிலச் செயலாளர் ரசல் நிறைவுரையாற்றினார். ஆர்ப்பாட்டத்தில், சிஐடியு மாநகராட்சி கிளை இணைச் செயலாளர் காளிமுத்து, ஊரக வளர்ச்சி உள்ளாட்சித் துறை ஊழியர் சங்க நிர்வாகிகள் பூலான், ஜான், செல்வராஜ், சங்க மாவட்டத் துணைத் தலைவர் பழனிச்சாமி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags:    

Similar News